பிரபல குற்றக் கும்பல் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொழும்பு – புதுக்கடை ஐந்தாம் இலக்க நீதிமன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் இஷாரா செவ்வந்தி, மாலைத்தீவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இது குறித்து சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டில் இருக்கும் ஒரு சக்திவாய்ந்த பாதாள உலகக் கும்பல் தலைவரால் அவர் கடல் வழியாக மாலைத்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்படுகிறது.
எனினும், இது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
கணேமுல்ல சஞ்சீவாவின் கொலைக்குப் பின்னர், அவரைத் தேடி நாடு முழுவதும் ஏராளமான பொலிஸ் குழுக்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
எனினும், அவரை இதுவரையில் கைது செய்யப்படவில்லை. இஷாரா செவ்வந்தி குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு சன்மானமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் எனவே அவரைக் கைது செய்வதற்கு வசதியாக, இலங்கை பாதுகாப்புப் படையினர் ஏற்கனவே இந்தியப் புலனாய்வு அமைப்புகளுடன் அனைத்துத் தகவல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
கடந்த பெப்வரி மாதம் 19ஆம் திகதி நீதிமன்ற விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
சட்டத்தரணி போல் வேடமணிந்து வந்த ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார். எனினும், விரைந்து செயற்பட்ட பொலிஸார் பிரதான் சந்தேகநபரை கைது செய்திருந்தனர்.
எனினும், சந்தேகநபருக்கு துப்பாக்கியை புத்தகம் ஒன்றுக்குள் மறைத்து வைத்து நீதிமன்றிற்கு கொண்டு வந்து கொடுத்த இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணை இதுவரை கைது செய்யமுடியவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news