பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி எடுக்க உத்தரவு..!!!



வெலிக்கடை பொலிஸ் காவலில் அண்மையில் உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி எடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம், கொழும்பு சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.

இளைஞனின் உடலில் 3 விசேட வைத்தியர்கள் கொண்ட வைத்தியக் குழுவால் முழுமையான பிரேத பரிசோதனை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

ஏப்ரல் முதலாம் திகதி நாவலவில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்தார் என முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து 26 வயது சத்சரநிமேஸ் வெலிக்கடை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.

ஆனால் ஏப்ரல் 2ம் திகதி அவர் உயிரிழந்துவிட்டார் என பொலிஸார் தெரிவித்தனர். நிமேஸ் மன அழுத்தத்திற்கு உள்ளானவர் போல காணப்பட்டார்,சிறைக்கூண்டிற்குள் தலையை சுவருடன் மோதினார்,

இதனைதொடர்ந்து பொலிஸார் அவரை முல்லேரியாவில் உள்ள மனோநிலை பாதிப்பு தொடர்பான மருத்துவமனையில் அனுமதித்தனர்,அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்தார் என பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.

எனினும் சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் அதிகரித்து வருகின்ற நிலையில் செயற்பாட்டாளர்களும் மனித உரிமை அமைப்புகளும் ராஜகிரிய வெலிக்கடை பொலிஸ்நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here