கொழும்பு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பீர் சயிபு வீதியில் உள்ள வீடொன்றின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்த சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு 12 பிரதேசத்தில் வசிக்கும் 12 வயதுடைய சிறுவனே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
இந்த சிறுவன் தனது இரண்டு நண்பர்களுடன் பீர் சயிபு வீதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றிற்கு சென்றுள்ளார்.
இதன்போது இந்த சிறுவன் விற்பனை நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றின் இரும்பு நுழைவாயில் கதவை தட்டியுள்ளார்.
இதனால் கோபமடைந்த வீட்டின் உரிமையாளர் சிறுவனை பலாத்காரமாக வீட்டிற்குள் அழைத்துச் சென்று இரண்டாவது மாடியில் உள்ள அறையில் அடைத்து வைத்துள்ளார்.
இதன்போது இந்த சிறுவன் தப்பிச் செல்வதற்காக அறையில் இருந்த யன்னல் வழியாக கீழே குதித்த போது படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து படுகாயமடைந்த சிறுவன் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தையடுத்து பிரதான சந்தேக நபரான வீட்டின் உரிமையாளர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பிரதான சந்தேக நபருக்கு உதவி செய்ததாக கூறப்படும் 59 வயதுடைய நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news