தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அப்படியே தொடர்கின்றது..!!!


ஜனாதிபதி மீதும், எம் மீதும் தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அப்படியே தொடர்கின்றது. மக்களின் எதிர்பார்ப்புகளை எம்மால் நிச்சயம் நிறைவேற்ற முடியும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

'பொதுத்தேர்தலென்பது வேறு, உள்ளுராட்சி சபைத் தேர்தலென்பது வேறு, எனவே, உள்ளுராட்சிசபைத் தேர்தல் முடிவுகளுடன்தான், உள்ளுராட்சிசபைத் தேர்தலை முடிவை ஒப்பிட வேண்டும்.

அந்த அடிப்படையில் பார்த்தால் 2018 தேர்தலில் வடக்கில் விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில்தான் தேசிய மக்கள் சக்திக்கு பிரதிநிதித்துவம் இருந்தது. ஆனால் இம்முறை வடக்கில் எல்லா பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்திக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெற்றுள்ளது. இது வரலாற்று முக்கியத்துவம்மிக்க விடயமாகும்.

எனினும், மக்களை பிரித்தாள்வதற்கு முற்படும் அரசியல் வாதிகளுக்கு இது பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் தேசிய மக்கள் சக்தியை தமிழ் மக்கள் நிராகரித்துவிட்டதாக போலி பிரச்சாரம் முன்னெடுத்து இன்பம் காண்கின்றனர்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீதும், எம்மீதும், எமது அரசாங்கம்மீதும் தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அப்படியே தொடர்கின்றது. மக்களின் எதிர்பார்ப்புகளை எம்மால்தான் நிச்சயம் நிறைவேற்ற முடியும் என்பது அவர்களுக்கு தெரியும். நிச்சயம் அதனை செய்வோம். அதற்குரிய அடித்தளம் தற்போது இடப்பட்டுவருகின்றது.

எனவே, சதிகார அரசியல்வாதிகளால் எம்மையும், மக்களையும் பிரிக்க முடியாது. இலக்கை நோக்கிய எமது பயணம் தொடரும். உள்ளுராட்சிசபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த அத்தனை சொந்தங்களுக்கும் நன்றிகள். அதேபோல வாக்களிக்காதவர்களுக்கும் எமது சேவைகள் தொடரும் என மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here