இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியாக பதிவானது ‘செம்மணி’


நீதிமன்றத்தால் குற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டின் இரண்டாவது பெரிய புதைகுழியாக மாறியுள்ளது.

இரண்டாம் கட்ட அகழ்வாய்வின் 34வது நாளான நேற்றைய தினம் (ஓகஸ்ட் 26) செம்மணி மனித புதைகுழியில் மேலும் 16 பேரின் எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவிக்கின்றார்.

அகழ்வு தளத்தை பார்வையிட்ட ஊடகவியலாளர்கள் குழந்தைகளினுடையது என சந்தேகிக்கப்படக்கூடிய எலும்புகளை கண்டுள்ளனர், எவ்வாறெனினும் தடயவியல் பரிசோதனைக்குப் பின்னரே இதுத் தொடர்பில் உறுதிப்படுத்தப்படும் என சட்டத்தரணி ரணிதா கூறுகிறார்.

செம்மணி புதைகுழியிலிருந்து ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான உடல்கள் அடையாளம் காணப்பட்டது இன்றைய தினமாகும்.

செம்மணி மனித புதைகுழி வளாகத்தில் இருந்து இதுவரை குழந்தைகள் உள்ளிட்ட 166 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

32 நாட்கள் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், ஓகஸ்ட் 6 ஆம் திகதி முதல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது, செம்மணி மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் உட்பட 150 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

18 நாட்களின் பின்னர் அகழ்வாய்வுகள் நேற்றுமுன்தினம் (ஓகஸ்ட் 25) மீண்டும் ஆரம்பமாகியபோது ஸ்கேன் பரிசோதனைக்கு அமைய அகழ்வு தளத்தை விரிவுபடுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனித புதைகுழி மன்னாரில் உள்ள சதொச மனித புதைகுழியாகும். அங்கு 28 சிறுவர்களின் எலும்புகள் உட்பட 376 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

2013 ஆம் ஆண்டில், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது பெரிய புதைகுழியாகக் கருதப்படும் மாத்தளை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள ஒரு இடத்திலிருந்து 155 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.

இலங்கையில் நான்காவது பெரிய மனித புதைகுழியான கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழியிலிருந்து குறைந்தது 88 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு அதன் அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

ஐந்தாவது பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் புதைகுழியாகும். அங்கு 2013 இல் 82 மனித உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு பணிகள் நிறைவடைந்த நேரத்தில், 52 நபர்களின் எச்சங்கள் மீட்கப்பட்டன.
Previous Post Next Post


Put your ad code here