தங்காலை நகர சபையின் ஊழியர்கள் பலர் ஒரே நேரத்தில் விடுமுறை பெற்று, சுற்றுலா சென்றுள்ளமை பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, அரச நிறுவனத்தில் ஒரே நேரத்தில் பலருக்கு விடுமுறை வழங்கப்பட்டமை குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விபத்தில் உயிரிழந்த நகர சபையின் செயலாளர் P.W.K. ரூபசேனவே இந்த விடுமுறைக்கு அனுமதி வழங்கியுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் A.E.N.E. அபயரத்ன தெரிவித்துள்ளார்.
தங்காலை நகர சபை ஊழியர்கள் குழுவின் இடமாற்றம் தொடர்பாக இந்த சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், உடனடியாக அத்தகைய விடுமுறை பெறுவது சிக்கலான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதோடு எல்ல- வெல்லவாய பேருந்து விபத்து எதிர்பாராத விதமாக இடம்பெற்ற பின்னரே குறித்த விடயம் தெரியவந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் எல்ல, வெல்லவாய பேருந்து விபத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து பெறப்பட்ட 10 இலட்சம் ரூபாவுக்கு மேலதிகமாக, போக்குவரத்து அமைச்சு மேலும் ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தீர்மானித்துள்ளது.
தங்காலை நகர சபையின் அங்கீகரிக்கப்பட்ட 47 ஊழியர்களில் 22 பேர் எல்ல, வெல்லவாய சுற்றுலாவில் பங்கேற்றுள்ளதாகவும், மற்றொரு குழு சுற்றுலாவில் பங்கேற்கவில்லை என்றும் நகர சபையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கத் தயாராக உள்ளதாக தங்காலை மாநகர சபையின் தலைவர் P.P.G.நந்தசிறி தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இந்த இழப்பீட்டை வழங்குவது குறித்து நகர சபைக்கும் தங்காலை வர்த்தக சமூகத்திற்கும் இடையே ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:
sri lanka news