
டெங்கு நுளம்பு பரவும் சூழலை பேணிய ஆதன உரிமையாளர்கள் 14 பேருக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று ஒரு இலட்சத்து 06 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது.
வல்வெட்டித்துறை நகர சபை மற்றும் பருத்தித்துறை நகர சபை ஆகிய பகுதிக்கு உட்பட்ட மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளில் கடந்த வாரம் டெங்கு கட்டுப்பாட்டு கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது.
அதன் போது , டெங்கு நுளம்பு பரவ கூடிய சூழலை பேணிய 14 ஆதன உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் , அவர்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகரால் வழக்கு தொடரப்பட்டது.
குறித்த வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது 14 ஆதன உரிமையாளர்களும் மன்றில் முன்னிலையாகி நீதிமன்ற விசாரணைகளின் போது தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து அவர்களுக்கு மன்று ஒரு இலட்சத்து 06 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.