மாவனெல்ல - கனேதென்ன பஹல கடுகண்ணாவ பகுதியில் நேற்று காலை வீடு மற்றும் வர்த்தக நிலையமொன்றில் மீது பாரிய கற்கள் மற்றும் மண்மேடு சரிந்து விழுந்த அனர்த்தத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவரும் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என மாவனெல்ல வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த அனைவரும் மாவனெல்ல ஆதார மருத்துவமனையின் 7ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் நடந்தபோது உணவகத்தில் இருந்தவர்கள்
மண்சரிவு ஏற்பட்ட போது காலை உணவுக்காக வந்த ஏழு பேர் உட்பட மொத்தம் 10 பேர் உணவகத்தில் இருந்துள்ளனர் என காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அனர்த்தம் ஏற்பட்ட போது வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் அவசர தேவைக்காக வெளியில் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த உணவகத்தின் உரிமையாளர் நாற்பது வயதான குழந்தைவேல் ரகுநாதன் சசிதரன் ஆவார்.
இந்த அனர்த்தத்தில் மனைவியான நிஷாந்தனி கருணாகரன் (39) மற்றும் மனைவியின் தந்தை ராசலிங்கம் கருணாகரன் (66) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
சசிதரனின் தாயார் காயங்களுடன் சிகிச்சைக்காக மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், வர்த்தக நிலையத்தின் உரிமையாளரும் அவரது இரண்டு பிள்ளைகளும் உயிர் தப்பித்துள்ளனர்.
மண்மேட்டுக்குள் சிக்கியவர்களை மீட்பதற்காக காவல்துறை, இராணுவம், தீயணைப்பு படையினர் உள்ளிட்ட குழுவினர் சுமார் 20 மணி நேரம் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 13 பேர் வெளியே கொண்டு வரப்பட்டு, காவல்துறையால் 1990 சுவசரிய நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள்
லஹிரு மதுசங்க சமரகோன் (31) - வெலிகல்ல வீதி, கல்அமுன
ராசலிங்கம் கருணாகரன் (66)
நிஷாந்தனி கருணாகரன் (39)
லிண்டன் ஜானக குமார ஜயசிங்க (60) - கடுகண்ணாவ, பலவதகம
ருவன் குமார அபேசிறி சமரநாயக்க (43) - எம்பிலிபிட்டிய
குணரத்ன முதியன்சேலாகே புலஸ்தி பண்டார (33) - கம்பளை, ஹீனாரந்தெனிய
காயமடைந்து மாவனெல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்கள்
மீகாகெதர சம்பத் பண்டார ஜயரத்ன (44) - வட்டப்பள (உணவக ஊழியர்)
லஹிரு ருமேஷ் ரத்னாயக்க (33) - பிளிமத்தலாவ, எம்பில்மீகம
ருசிர திலான் முனசிங்க - பிளிமத்தலாவ
சந்திரிகா நிஷாந்தி (56) - தன்தூரே, ஹாலியத்த
Tags:
sri lanka news
