யாழில் நடக்கும் சட்டவிரோத சொத்துக் குவிப்பு : அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை..!!!


யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத சொத்து சேகரிப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இன்றைய (08) நாடாளுமன்ற அமர்வில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன், தற்போது போதைப்பொருளைக் கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் ஜனாதிபதி தலைமையில் எடுத்துள்ள நடவடிக்கைக்கு மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இருந்தபோதும் யாழ்ப்பாணத்திலே இரண்டு, மூன்று தினங்களுக்கு முன்பாக திருநெல்வேலி, கொக்குவில் சந்தைகளிலே போதைப்பொருள் மாபியாக்கள் அடாவடி செய்துள்ளனர்.

இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் போதைப்பொருளை விற்று அதில் வருகின்ற பணத்தை வட்டிக்கு கொடுத்து வட்டிப் பணத்தைப் பெறுவதற்காக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே யாழ் மாவட்டத்தில் இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்த வேண்டும். இது தொடர்பான நடவடிக்கை என்ன என்று கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையிலே இதற்குப் பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறித்த நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here