இலங்கையின் வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் சீனாவுக்கு எதிரானவர்கள் அல்ல. அவ்வாறான பிம்பம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. என கூறியுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென் ஹொங், நான் பலமுறை வடக்கு – கிழக்குக்கு சென்றுள்ளேன் மக்கள் மிகுந்த அன்பானவர்கள் மற்றும் சிறந்த விருந்தோம்பல் பண்புடையவர்கள் எனவும் கூறினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
தமிழ் மக்கள் சீனர்களுக்கு எதிரானவர்கள் என்ற ஒரு பிம்பம் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டுள்ளது. நான் பலமுறை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குச் சென்றுள்ளேன். அங்கு வாழும் மக்கள் மிகவும் அன்பானவர்கள் மற்றும் விருந்தோம்பல் பண்பு மிக்கவர்கள் என்பதை நேரில் கண்டேன். இந்த வரலாற்று ரீதியான அச்சங்கள் மற்றும் தவறான அபிப்பிராயங்கள் மாற்றப்படவேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காகச் சீனா 1,200 மில்லியன் ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் வீட்டுத்திட்டங்கள், மீன்பிடி வலைகள் வழங்கல் மற்றும் உலர் உணவுப் பொதிகள் விநி யோகம் போன்ற பணிகள் முன்னெடுக்கப்படுகிறது. வரும் சித்திரை புத்தாண்டு காலத்தில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் விசேட உணவு விநியோக திட்டங்களை செயற்படுத்த, திட்டமிட்டுள்ளேன்.
இலங்கையில் சீனா முன்னெடுக்கும் பல பணிகள் ஊடகங்களில் போதியளவு வெளி வருவதில்லை. 14 புதிய பாலங்களை நிர்மாணித்தல், 100 மின்சாரப் பேருந்துகளை நன்கொடையாக வ ழங்குதல் மற்றும் கடந்த நான்கு வருடங்களாக 15 மில்லியன் டொலர் பெறுமதியான பாடசாலை சீருடைத் துணிகளை வழங்குதல் போன்றவற்றைச் சீனா செய்து வருகிறது.
அத்துடன், இலவசக் கண் சிகிச்சை முகாம்கள் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான விசேட மருத்துவ வாகனத்தையும் சீனா வழங்கியுள்ளது. கடந்த ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பெறுமதி 6.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதில் இலங்கையின் ஏற்றுமதி வெறும் 300 மில்லியன் டொலர்கள் மட்டுமே. இந்தப் பாரிய வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கச் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை அவசியமானது.
சீனப் பொருள்கள் சந்தையை ஆக்கிரமித்துவிடும் என்ற வீணான அச்சத்தைக் கைவிட்டு, இந்த உடன்படிக்கையை முன்னெடுப்பது இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் என்று சீனத் தூதுவர் சுட்டிக்காட்டினார்.
Tags:
sri lanka news
