ஈரானில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பல சிறுவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மோதல்களின் போது சிறுவர்களைப் பாதுகாப்பது குறித்த ஐநா பாதுகாப்புச் சபைக் கூட்டத்திற்கு அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் தலைமை தாங்கியுள்ளார்.
தெற்கு ஈரானில் உள்ள பெண்களுக்கான பாடசாலை ஒன்றின் மீது கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 165 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் ஈரான் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதல் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்டதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
குறித்த பகுதியில் இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்பட்டமை குறித்து தமக்குத் தெரியாது என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, இது தொடர்பான அறிக்கைகளைத் தாம் ஆராய்ந்து வருவதாக அமெரிக்க இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
ஐநா அமர்வு ஆரம்பமாவதற்கு சற்று முன்னதாக, ஐநாவுக்கான ஈரானிய தூதர் அமீர் சயீத் இரவானி ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அமெரிக்காவைக் கடுமையாக விமர்சித்தார்.
"அதிக மக்கள் தொகை கொண்ட ஈரானிய நகரங்கள் மீது தாக்குதல்களை நடத்திக்கொண்டு, போர்க்காலத்தில் சிறுவர்களைப் பாதுகாப்பது குறித்து அமெரிக்கா ஒரு கூட்டத்தைக் கூட்டுவது ஆழ்ந்த வெட்கக்கேடானது மற்றும் பாசாங்குத்தனமானது." என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அமெரிக்காவை பொறுத்தவரை 'சிறுவர்களைப் பாதுகாத்தல்' மற்றும் 'சர்வதேச அமைதியைப் பேணுதல்' என்பது ஐநா சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள விதிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அர்த்தத்தைக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Tags:
world news
