அரச அலுவலகங்களுக்கு புதிய சுற்றுநிருபம் வெளியீடு..!!!


நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையின் கீழ் எரிபொருள் இருப்புகளை சேமிப்பதற்காக, அரச அலுவலகங்களை நடாத்திச் செல்வது குறித்து பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் புதிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றுநிருபம் அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள், அரசியலமைப்பு சபைகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை வழங்கப்பட்டுள்ள விடுமுறை காரணமாக, அன்றைய தினத்திற்குரிய பணிகளை வாரத்தின் செவ்வாய்க்கிழமைக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.

எவ்வாறாயினும், ஏதேனும் ஒரு அதிகாரியை புதன்கிழமை சேவையில் ஈடுபடுத்த வேண்டுமென நிறுவனத் தலைவர் தீர்மானித்தால், அந்த அதிகாரிகளை சேவைக்கு அழைப்பதற்குத் தடையில்லை.

ஆனால் அதற்காக விடுமுறை தின சம்பளம், மேலதிக நேர கொடுப்பனவு அல்லது பதில் விடுமுறை வழங்கப்படக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, புதன்கிழமைகளில் மூடப்படும் அலுவலகங்களின் அதிகாரிகள், அந்த வாரத்தின் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை அல்லது பொது விடுமுறை தினங்களில் மேலதிக நேர கொடுப்பனவு, விடுமுறை தின சம்பளம் அல்லது பதில் விடுமுறை அடிப்படையில் சேவையில் ஈடுபடுத்தப்படக் கூடாது.

இருப்பினும், சேவையின் அவசரத் தேவை கருதி சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை அல்லது பொது விடுமுறை தினங்களில் அதிகாரிகளை சேவைக்கு அழைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர் / மாகாண பிரதம செயலாளர் / திணைக்களத் தலைவர் அல்லது அரச கூட்டுத்தாபனத் தலைவர்களின் அனுமதியுடன் அந்த அதிகாரிகளை சேவைக்கு அழைப்பதற்குத் தடையில்லை என குறித்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு சேவைக்கு அழைக்கப்படும் அதிகாரிகளுக்கு மேலதிக நேர கொடுப்பனவு, விடுமுறை தின சம்பளம் அல்லது பதில் விடுமுறை வழங்குவதற்குத் தடையில்லை என்றும் அந்த சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here