காக்கைதீவு திண்மக்கழிவு மீள்சுழற்சி நிலையத்துக்குள் புகுந்து தீ வைத்த விசமிகள்


நாவாந்துறை – காக்கைதீவு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் உக்கக் கூடிய திண்மக் கழிவுகளை மீள்சுழற்சிக்குட்படுத்தும் நிலையத்தில் விசமிகளால் தீவைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் திண்மக் கழிவுகளை மீள்சுழற்சிக்குட்படுத்தி இயற்கை பசளைகளை உற்பத்தி செய்யும் நிலையம் காக்கைதீவுப் பகுதியில் அமைந்துள்ளது.

அந்த நிலையத்தில் கம்பி வலை வேலியைப் பிரித்து உள்ளே புகுந்த கும்பல் ஒன்று டயர்கள் இரண்டைப் போட்டு அங்கு காணப்பட்ட மீள் சுழற்சிக்குத் தயாராகவிருந்த குப்பைகளுக்கு தீ வைத்துள்ளது.

அதுதொடர்பில் பதில் முதல்வர் து.ஈசனுக்கு தொலைபேசியில் அந்தக் கும்பல் தகவலும் வழங்கியுள்ளது.

இந்தச் சம்பவம் இடம்பெற்ற நள்ளிரவு 12.05 மணியளவில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் இணுவிலில் இடம்பெற்ற தீ விபத்து ஒன்றைக் கட்டுப்படுத்தும் சேவையில் ஈடுபட்டிருந்துள்ளது.

அதனால் அந்தச் சேவை முடித்துவிட்டு வந்தே இந்த மீள்சுழற்சி நிலையத்தில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் திண்மக்கழிவு மீள்சுழற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை வழங்கினார். அதனடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



Previous Post Next Post


Put your ad code here