யாழ் கொடிகாமம் பகுதியில் ஊரடங்கு அமுல் இருந்தபோது வீடு புகுந்த நபர்கள், தங்களை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் என்று அடையாளப்படுத்தி அங்குள்ளவர்களை தாக்கிவிட்டு 20 வயது யுவதியைக் கடத்திச் சென்றுள்ளனர்.
இன்று (31) அதிகாலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் வீட்டுக்குள் நுழைந்த 7 பேர் கொண்ட குழுவே குறித்த யுவதியைக் கடத்திச் சென்றுள்ளது.
இன்று அதிகாலை கொடிகாமத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் 7 பேர் கொண்ட குழுவினர் புகுந்துள்ளனர். வீட்டுக்குள் புகுந்த அவர்கள் தங்களை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் என்று அடையாளப்படுத்திக் கொண்டதுடன் தாம் கொண்டு சென்ற கத்தி, வாள் போன்றவற்றால் வீட்டில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர்.
இதன் பின்னர் அந்த வீட்டிலிருந்த 20 வயது யுவதியை அங்கிருந்து கடத்திச் சென்றுள்ளனர். இருப்பினும் குறித்த யுவதி கடத்தப்பட்டு ஒரு மணித்தியாலங்களுக்கு பின்னர் அருகில் உள்ள கோவிலில் வைத்து மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.