கொரோனா வைரஸ்: நாளாந்த தொற்று சம்பவங்களில் புதிய உச்சம்..!!!


உலகெங்கும் நாளாந்தம் பதிவாகும் கொவிட் –19 வைரஸ் தொற்று சம்பவங்களில் இதுவரை இல்லாத அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன்படி கடந்த சனிக்கிழமை முடிவடைந்த 24 மணி நேரத்தில் 212,326 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு இதுவே ஒருநாளில் பதிவான அதிகபட்ச சம்பவமாக உள்ளது. இதில் கடந்த ஜூன் 28 ஆம் திகதி பதிவான அதிகபட்ச எண்ணிக்கையான 189,077 சம்பவங்களை விஞ்சுவதாக உள்ளது.

எனினும் உலகளவில் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு சுமார் 5,000 என்ற நிலையில் நீடிக்கிறது.

இதில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா நாடுகளில தினந்தோறும் பதிவாகும் நோய்த் தொற்று சம்பவங்களில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாக நோய்த்தொற்று தொடர்பான தரவுகள் காட்டுகின்றன.

குறிப்பாக புதிய நோய்த் தொற்றுச் சம்பவங்களில் அமெரிக்காஸ் பிராந்தியத்திலேயே அதிகபட்சமான எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இதன்படி அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளில் புதிதாக சுமார் 130,000 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் தொடர்ந்து ஐந்தாவது நாளாகவும் தினந்தோறும் பதிவாகும் நோய்த் தொற்று சம்பவங்கள் அதிகரித்து 22,771 ஆக கடந்த சனிக்கிழமை பதிவாகி இருந்தது.

உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை கடந்த வெள்ளிக்கிழமை ஆகும்போது 11 மில்லியனைத் தாண்டி இருந்தது. கடந்த ஏழு மாதங்களில் இந்த நோய்த் தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அரை மில்லியனைத் தாண்டியுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here