Friday 4 September 2020

காட்டுமன்னார்கோயில் அருகே விபத்து: 9 பெண்களும் உயிரிழப்பு..!!!

SHARE

இந்தியா :  காட்டுமன்னார்கோயில் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பெண்களும் உயிரிழந்தது கடலூர் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள குருங்குடி கிராமத்தில் பத்துக்கும் மேற்பட்ட சிறு பட்டாசு உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் காரணமாக மூடப்பட்டிருந்த பட்டாசு தொழிற்சாலைகள் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதிதான் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதில் காந்திமதி என்பவருக்குச் சொந்தமான சிறு கட்டிடத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று திடீரென எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அப்போது காந்திமதி உட்பட பணியிலிருந்த 9 பெண்களும் விபத்தில் சிக்கினார். பின் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 2 பேர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர்களும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 9 பேரில் 5 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

சம்பவ இடத்திற்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமுரி ஆய்வு மேற்கொண்டார். கோயில் திருவிழாக்கள், தீபாவளி பண்டிகை ஆகியவற்றை எதிர்நோக்கி பட்டாசு தயாரிக்கும் பணி மும்மரமாக நடைபெற்று வந்துள்ளது. இன்று பணியைத் தொடங்குவதற்கு முன் அந்த சிறிய கட்டடத்தில் பூஜை நடை பெற்றதாகவும் அதன் பின்னரே திடீரென விபத்து ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

30 ஆண்டுகளாக இந்த ஆலை இயங்கி வந்த நிலையில் உரிமையாளர் கடந்த வாரம் இதற்கான உரிமத்தைப் புதுப்பித்துள்ளார் என்று போலீசார் கூறுகின்றனர்.

இந்நிலையில் இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு குடும்பத்துக்குத் தலா 2 லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், "கொரோனா பாதிப்பு காரணமாக நான்கு மாதங்கள் வருமானம் இல்லாமல் இருந்த தொழிலாளர்கள் தொழிலை மீண்டும் தொடங்கிய நிலையில் இத்தகைய விபத்தில் சிக்கியது வேதனை தருவதாக உள்ளது. முறைப்படி அனுமதி பெற்று நடத்தப்பட்ட பட்டாசு உற்பத்தி ஆலையாக இருந்தாலும் தொழிலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

பாமக இளைஞரணி தலைவர் எம்பி அன்புமணி, “பட்டாசு ஆலையில் பணியாற்றுவது மிகவும் ஆபத்தானது என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஆனாலும், வாழ்வாதாரம் ஈட்ட வேறு வழியில்லாததால் மக்கள் தங்கள் உயிரை பணயம் வைத்துத் தான் இத்தகைய பணிகளுக்குச் செல்கின்றனர். இனியும் இத்தகைய பாதிப்புகள் ஏற்படாத வகையில் வெடி தயாரிப்பு ஆலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். வெடி ஆலைகளில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் ரூ.50 லட்சத்துக்குக் காப்பீடு செய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும். குருங்குடி வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தமிழக அரசு ரூ.25 லட்சம் நிதி வழங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
SHARE