பத்திரிகைகளில் ஒரு மூலையில் வெளிவரும் ஒரு சில செய்திகளின் பின்னால் பாரதூரமான செயற்றிட்டங்கள் அனர்த்தங்கள் தாங்கியதாக இருக்கும். அவ்வாறானதொரு செய்தியைதான் சென்ற வாரம் வடபகுதி தமிழ், ஆங்கில பத்திரிகைகள் பிரசுரித்திருந்தன.
கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேசத்திற்குட்பட்ட வேரவில், வலைப்பாடு, வீரபாண்டியமுனை ஆகிய கிராமங்களுக்கு டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் குழுவினரும் Re-Awakening Lanka எனும் தொண்டு நிறுவனமும் இணைந்து தற்காலிக குடிநீர் வழங்கும் செயற்திட்டம் ஒன்றினை பூநகரி பிரதேச செயலகத்தின் வழிகாட்டலுடன் மேற்கொண்டுள்ளனர் என்பதாக அச்செய்தி அமைந்திருந்தது.
இதை ஊடகங்கள் செய்திகளாகவும் ஆவணப்படங்களாகவும் பரப்பப்பட்டு மேற்குறித்த மூன்று கிராமங்களுக்கும் வரவிருக்கும் பேராபத்து குறித்து யோசிப்பதற்கான சந்தர்ப்பத்தை தகர்த்துள்ளது. தமிழர் பிரதேசங்களில் காணப்படும் வளங்கள் திட்டமிட்டபடியாக தமிழர்களின் ஒத்துழைப்புடன் சூறையாடப்படுவது வழக்கமாக நடைபெற்றுவருவதாகும்.
அதில் பாரிய அழிவுகளை சந்தித்த கிராமங்களும் வளங்களும் இன்றளவும் மீள பயன்பாட்டுக்குரியதன்றி மாறியுள்ளது. இத்தயை வரிசையில் வள சுரண்டலுக்குட்பட்டு மக்களால் குடியிருக்க முடியாத கிராமமாக மாறியிருப்பது பூநகரி மண்ணித்தலை மற்றும் கௌதாரி முனை கிராமங்களாகும். தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் போற்றத்தக்க வளமாக காணப்பட்டது அங்கிருந்த மணல் திட்டுக்கள் 80 அடிக்கும் மேற்பட்ட உயரமுடைய மணல் திட்டுக்களானது வெள்ளை துகில் போர்த்திய மலைகளாக ஒவ்வொன்றும் காணப்பட்டன.
ஆனால் யுத்தம் மௌனிக்கப்பட்டு ஒரு வருடங்களுக்குள் அங்கிருந்த மணத்திட்டுக்கள் 2009க்கு பின்னர் அரசியல் அதிகாரங்களுடன் காணப்பட்ட நபர்கள் தமக்கிடையே போட்டி போட்டு அக்கிராம மக்களது அனுமதியின்றி நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கு மணலை விற்பனை செய்தனர். ஊடகங்களின் குரல் மட்டுப்படுத்தப்பட்டிருந்தமையானது வள சுரண்டலில் ஈடுபட்டவர்களுக்கு மிகவும் சாதமாகவே அமைந்தது. 18 கிலோ மீற்றர் நீளம் 3 கிலோமீற்றர் அகலம் கொண்ட அக் கிராமமானது பூநகரி பிரதேசத்தின் அனைத்து கிராமத்திற்கும் குடிநீரை வழங்கக்கூடிய நிலையில் நன்னீர் ஊற்றுக்களைக்கொண்டதாக காணப்பட்டது.
மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டிருக்கும் இக் கிராமத்தில் நன்னீரை தேக்கி வைத்திருக்கும் கருவூலமாக காணப்பட்ட மணல் திட்டுக்கள் தற்போது இருந்த இடம் தெரியாது ஆக்கப்பட்டுள்ளது. மழை காலங்களில் கடலின் நீர் மட்டம் பெருகும் சந்தர்ப்பத்தில் கடல் நீர் தங்கு தடையின்றியதாக கிராமத்திற்குள் தேங்கி மக்களுக்கான குடிநீர் ஊற்றுக்களை உவர் நீர் ஊற்றுக்களாக மாற்றியுள்ளது. 700 குடும்பங்களின் வாழ்விடமாக காணப்பட்ட கிராமம் தற்போது 70ற்கும் குறைவானதான மக்களைக்கொண்டதாக மாறியுள்ளது. கிராம மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்குகின்றேன், இங்குள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு துணையாக நிற்பேன் என பொய்யான வாக்குறுதிகளுடன் உள் நுழைந்த அரசியல் அதிகார மட்டங்கள் மறைமுகமாக இக்கிராமத்தின் போற்றத்தக்க வளத்தை சூறையாடியதே யுத்தம் நடைபெற்ற பின்னர் அங்கு நிகழ்ந்தது. யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் வன்னிப்பகுதிக்குள் இக்கிராம மணல் திட்டுக்களுடன் பிரமிக்கத்தக்கதாக ஓரு சுற்றுலா மையமாக காணப்பட்டது. பொய்யான வாக்குறுதிகள் மக்களால் உணரப்பட்ட சந்தர்ப்பத்தில் கிராம மாதர் சங்கங்கள், மக்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கை தற்காலிகமாக அக் கிராமம் அழிவடையும் செயற்பாட்டிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது.
தேசிய கனிய வள திணைக்களத்தின் அனுமதி பெறாது தன்னிச்சையாக மணல் திட்டுக்கள் அழிக்கப்பட்டமையும் மீள உருவாக்கத்திற்கு உட்படாத வகையில் அழிக்கப்பட்டமையானது குறுகிய காலத்திற்குள் அக் கிராமத்தினை விட்டு மக்கள் வெளியேற்றுவதற்கான திட்டமிட்ட செயலாகவே கருதலாம்.
பூநகரியில் கௌதாரிமுனை கிராமத்தினை அடுத்து அழிவுக்கு காத்திருக்கும் கிராமம் பொன்னாவெளி. வேரவில், கிராஞ்சி, வலைப்பாட்டினை உள்ளடக்கியதாக காணப்படும் பொன்னாவெளி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 1000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்புக்களில் 50 அடி ஆழத்தில் சீமெந்து தயாரிப்புக்கான சுண்ணாம்பு கற்கள் காணப்படுவதால் அதை அகழ்ந்தெடுத்து பணமாக்கும் முயற்சியில் பல நிறுவனங்கள் 2013 ஆண்டளவில் முயற்சித்திருந்தனர். ஆனால் குறிப்பிடத்தக்க அரசியல் பிரமுகர்களது நேரடி தலையீட்டின் மூலம் அத்திட்டம் இடைநிறுத்தப்பட்டது.
ஆனால் நடந்து முடிந்த தேர்தலுக்கு பின் மீளவும் அப்பணியை தொடர்வதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்படுகின்றமையை எம்மால் அவதானிக்க முடியும். போருக்கு முன்னராக பாடசாலை, மருத்துவமனை, மத கோவில்கள் என்பவற்றுடன் அதிகமான மக்கள் குடியிருப்புக்களும் காணப்பட்ட கிராமத்தில் போரின் அழிவிற்கு பின்னராக மக்கள் அக்கிராமத்தை நாடாது அயல் கிராமங்களில் குடியேறியுள்ளனர். இதை சாதகமாக பயன்படுத்தும் சீமெந்து நிறுவனங்கள் அக் கிராமத்தின் நிலப்பரப்பை சுவிகரித்து பூநகரி பிரதேசத்தில் இவ்வாறு ஒரு கிராமம் இருந்தது என பேச வைப்பதற்கு முனைகின்றன. பூநகரி பிரதேசமானது மக்களுக்கான குடி நீரை வழங்குவதில் மட்டுப்பாடுகளை கொண்டது. கடலை அண்மித்த நிலப்பரப்பை கொண்டிருப்பதால் இத்தகைய நிலை.
ஆனால் மழைகாலத்தில் சிறு குளங்கள் மூலம் தேக்கப்படும் நீர் அப்பிரதேசத்தின் நன்னீர் ஊற்றுக்களை ஓரளவு பாதுகாத்து வருகின்றது. குடமுருட்டி, கொக்குடையான் போன்ற கடல் நீர்ப் பகுதிகளில் காணப்படும் சீரற்ற அணைக்கட்டுக்கள் அப்பிரதேச நன்னீர்க்குளங்கள் மேலும் உவராகும் நிலைக்கு உட்படுகின்றது. ஆனால் பொன்னாவெளி கிராமத்தில் சீமெந்து நிறுவனங்களால் கண்டறியப்பட்ட சுண்ணம்புக்கல் 50 அடி ஆழத்தில் காணப்படுதலால் பாரிய துளையிட்டு அகழப்படுகையில் வெளியேற்றப்படும் உவர் நீர் நேரடியாக அங்குள்ள வயல் நிலங்களுக்கு பாய்ச்சப்படுகின்றது.
அத்துடன் துளையிடப்பட்ட பள்ளங்கள் உவர் நீரால் நிரப்பப்படுகின்றன. காலப்போக்கில் பொன்னாவெளி கிராமம் முழுமையாக கடலிற்குள் மூழ்குவதுடன் அருகில் உள்ள முழங்காவில், ஜெயபுரம் ஆகிய பிரதேசங்களும் உவர் நீரினால் ஆட்கொள்ளப்படும்.
2013 ஆம் ஆண்டளவில் பொன்னாவெளியில் புவிசரிதவியல் சுரங்கப்பணியகத்தினால் தொடங்கிய ஆராய்ச்சிகள் 2015 ஆட்சி மாற்றத்தின் பின் மட்டுப்படுத்தப்பட்டது. 2016 இல் மீளவும் சுண்ணாம்புக்கல் அகழ்விற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரது அழுத்தங்களால் அகழ்வு முயற்சி தடைப்பட்டதுடன் அப்போதய பூநகரி பிரதேச செயலரால் எஸ்.கிருஸ்ணேந்திரன், ஆய்வுப்பணிகளே மேற்கொள்ளப்படுவதாகவும் அகழ்வுப்பணிகள் இடம்பெறுமானால் சட்டரீதியாகவே இடம்பெறும் என தெரிவித்திருந்தார்.
பலகோடி பெறுமதியுள்ள வளம் அரசாங்கத்தின் மூலமே வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு மக்களிடமிருந்து வரும் எதிர்ப்பையும் குறுகிய காலத்திற்குள் அக் கிராமங்களில் உள்ள மக்களை வெளியேற்றவும் மறைமுகமாக செய்யப்படும் செயற்பாடே மக்களுக்கான குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதாகும். வேரவில் கிராம மக்களது கருத்தின் படி தமது கிராமத்திற்கு போதிய குடிநீர் இந்த கிராமத்தில் உள்ள கிணறுகள், நீர் நிலைகளிலிருந்து பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தும் சுத்தமான குடி நீரை வழங்குகின்றோம் என சீமெந்து நிறுவனங்கள் முன் வந்திருக்கின்றமையானது எமக்கு வசதிகளை ஏற்படுத்தி தமது செயற்பாடுகளின் மூலம் எமது கிராமத்தின் அழிவுக்கு எதிராக எம்மை வாய் திறக்க முடியாமல் செய்தற்கே என்பதாக அமைந்திருக்கின்றது. தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் நிலங்கள் சூறையாடப்படுகின்றன என்பதற்கு இறந்த காலத்திற்கான உதாரணமாக கௌதாரிமுனைக் கிராமமும் எதிர்காலத்திற்கான உதாரணமாக பொன்னாவெளி கிராமமும் காணப்படுகின்றன.
கு.குகனுஜன்.
ஊடக கற்கைகள்.
யாழ் பல்கலைக்கழகம்.
Tags:
sri lanka news