பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்..!!!


பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.

சின்னதிரையில் மிகவும் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, அது இது எது, கலக்கப்போவது யாரு, ஜோடி நம்பர் ஒன் என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பிரபலமானவர்.

தலைநகரம் படத்தில் வரும் வடிவேலு மாதிரி கெட்டப் போட்டு இவர் செய்த காமெடிகள் திரையில் மிகவும் பிரபலம். இதனால் இவர் வடிவேல் பாலாஜி என்று அழைக்கப்பட்டார். இது மட்டுமின்றி பெண்கள் கெட்டப் உள்ளிட்ட பல கெட்டப்களில் வலம் வந்து குறுகிய நாட்களில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இதன்பிறகு வெள்ளித்திரையிலும் காலூன்ற தொடங்கினார்.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான கோலமாவு கோகிலா படத்திலும் நடித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காலத்திலும் சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருடைய கை கால்களும் செயலிழந்தன.

இதனிடையே போதிய பண வசதி இல்லாத காரணத்தால் அவர் அங்கிருந்து வேறு இரு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். இறுதியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 45. வடிவேல் பாலாஜிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இளம் வயதில் அவர் உயிரிழந்தது சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் வடிவேல் பாலாஜிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனாவால் அவர் உயிரிழந்தார் என்ற தகவலும் சமூக வலைதளங்களில் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் அதுகுறித்த உறுதியான தகவல் வெளியாகவில்லை.
Previous Post Next Post


Put your ad code here