Friday 4 September 2020

நலம் தந்திடமே நடைப்பயிற்சி..!!!

SHARE

தினமும் தவறாது நடைப் பயிற்சி செய்துவரின் உடல் எடை குறைந்திடும். இதய அடைப்புக்கள் இல்லாது போகும். தசைகள் தாமே வலுப் பெறும். குருதி அழுத்தம் சீராகும், சலரோகம் கட்டுப்பட்டு சாதாரண குருதி வெல்ல நிலமை ஏற்படும். இவ்வாறாக பல நன்மைகள் எமக்கு நடைப் பயிற்சியினால் ஏற்படுகின்றன என்பது நாம் அறியாததல்ல.

உடல் இயங்கு நிலை குறைவாகவுள்ள ஒருவரில் குருதிச் சுற்றோட்டம் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் சீராக கிடைப்பதில்லை . இயங்கு நிலையில் தன் செயற்பாடுகளை உற்சாகமாக மேற்கொள் ளும் ஒருவரில் கால்களில் குருதித்தேக்கம் குறைந்து உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் குருதி பம்பப்படும். அதே சமயம் நுரையீரல்களும் நன்கு விரிந்து அதிகளவு காற்றை உள்ளிளுப்பதனால் குருதியில் அதிகளவு பிராண வாயு கரைந்து உடலின் அனைத்து உறுப்புக்களுக்கும் போதியளவு ஒக்சிசன் கிடைக்கப் பெறும் அதன் காரணமாக செயற்திறன் அவற்றின் ஆரோக்கியமாகவும் சீராகவும் இடம்பெறும் என்பதனையும் நாம் அறிவோம்.

தினமும் காலை, மாலை வேளைகளில் நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் குறைந்தது முப்பது நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி செய்துவரின், உடலில் சேர்ந்துள்ள கொழுப்பு எரிக்கப்பட்டு, உடல் எடை குறைந்து ஆரோக்கியமான வசீகரமான கட்டான உடலமைப்பு ஏற்படும். உள்ளத்தில் புத்துணர்ச்சியும் ஆக்க சக்தியும் அதிகரிக்கும். குருதி நாளங்களில் படிந்துள்ள கொழுப்பினளவு குறைவதனால் குருதிச்சுற்றோட்டம் சீராகின்றது. இதயத்திற்கான வேலைப்பளு குறைகின்றது. இதன் காரணமாக குருதி அழுத்தம் அதிகரிக்காது,

சாதாரண ஆரோக்கிய நிலையில் பேணப்படுவதனால் இதய ஆரோக்கியம் அதிகரித்து, ஆயுள் அதிகரிக்கும். நடைப்பயிற்சியின் போது கை வீசி உடல் வியர்க்கும் வேகத்தில் நடத்தல் வேண்டும். கைவீசி நடந்தால் கலோரிகள் எரியும் என்பதையும் நாம் அறிவோம்.

நடைப்பயிற்சியின் நிறைவில் நடைப்பயிற்சியினால் ஏற்பட்ட களைப்பை நீக்குவதற்காக உற்சாகபானம் அருந்துதல் புகைப்பிடித்தல், அதிக சீனி,இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்களை அருந்துதல், எண்ணெயினுள் அமிழ்த்திப் பொரிக்கப்பட்ட கோதுமை மாவுப் பண்டங்களை உண்ணுதல் போன்றவை எதிர்பார்க்கப்படும் நன்மைகளுக்கு பதிலாக, எதிரான விளைவுகளையே ஏற்படுத்திடும் என்பதனை நாம் அறிவோம்.

இப்பயிற்சியினால் தொற்றா நோய்களின் தாக்கங்களிலிருந்தும் அவற்றின் பாரதூரமான பின் விளைவுகளிலிருந்தும் மீளும் வழி உண்டு என்பதனை நாம் உணர்ந்தாலும் அதனை செய்வதற்கு நாம் ஒவ்வொரு வரும் ஆர்வத்துடனும் இருந்தாலும் அதற்கான நேரத்தை கண்டுபிடிப்பதே முயல் கொம்பாக உள்ளது. இயந்திரத் தன்மையான இலத்திரனியல் வாழ்வியல் நடைமுறையில் நடைப்பயிற்சிக்கான நேரம் காணாமலேயே போய்விட்டது.

நடைமுறைப் பயிற்சி செய்வதற்கான நேரமுகாமைத்துவம் செய்ய இயலாதவர்களும், நேரத்தை கண்டு பிடிக்க முடியாதோரும் நடைமுறைப் பயிற்சியினை தம் வாழ்வுடன் இயைந்ததாக மாற்றியமைத்திட்டால், நீண்டு நிலைக்கக் கூடிய நடை முறைப்பயிற்சியின் நன்மைகள் அனுபவித்திட முடியும்.

எம் வாழ்வுடன் இணைந்த தாகவும் இயைந்ததாகவும் கீழ்வரும் செயன்முறைகளை இயலுமானவரை நடைமுறைப் படுத்திட முயற்சித்துப் பார்க்கலாமே!

வேலைத் தளங்களில் செய்யக் கூடிய நடைப்பயிற்சிகளான

மாடிகளில் ஏறுவதற்கு மின் உயர்த்திகளையோ எஸ்கலேற்றர்களையோ பாவிக்காது மாடிப்படிகளில் நடந்தே சென்றடைவோம். சென்றடைய வேண்டிய இடங்களுக்கு சற்று தூரவாகவே வாகனங்களை நிறுத்தி இறங்கிக் கொள்வோம்.


மதிய உணவின் பின்பு 10 நிமிடங்கள் வரை மேலதிகமாக இருப்பின் படிகளில் ஏறி நடந்திடுவோம்.

தேனீர் இடைவேளைகளில் இயலுமானவரை நடக்க முற்படுவோம்.

வேலையிலீடுபட்டிருக்கும் போது நீர் அருந்த விரும்பும் போதெல்லாம் எழுந்து சிறிது துாரம் நடந்திடுவோம்.

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஒரே இடத்தில் இருப்பதற்கு பதிலாக எழுந்துநடந்திடலாம்.

சக உத்தியோகத்தரை அழைப்பதற்கு பதிலாகவோ அல்லது e-mail செய்வதற்கு பதிலாகவே அவரது மேசை வரை நடந்திடலாம்.

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வேகநடை செய்வதை பழக்கப்படுத்திக் கொள்ளலாம்.

தொலைபேசியில் உரையாடிடும் போது எழுந்து நின்று உரையாடலாம்.

புத்தகம் படிக்கும் போது  ஒவ்வொரு ஆறு பக்கங்களுக்கும் ஒரு தடவை எழுந்து சிறு துாரம் நடந்திடலாம்.

கைதொலைபேசிகளில் உரையாடும் சந்தர்ப்பங்களில் எழுந்து நின்றோ நடந்து கொண்டோ உரையாட முயற்சிக்கலாம்.

ஓய்வு அறைக்கு செல்லும் சந்தர்ப்பங்களில் நீண்டதூரம் நடக்கக்கூடிய பாதையை தெரிவுசெய்திடலாம்.


வீட்டில் செய்யக்கூடிய நடைப்பயிற்சிகள்

தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒவ்வொரு வர்த்தக இடை வேளையின்போது எழுந்து நடந்திடலாம்

மனதிற்கு விருப்பமான பாடல்களுக்கு நடனம் ஆடிடலாம்.

ஓவ்வொருநாளும் 15 – 30 வரையாவது நிமிடங்கள் உங்கள் பிள்ளைகளுடன் விளையாடிடலாம்.

விறாந்தையில் வேக நடை செய்திடலாம்.

அருகிலுள்ள கோயில்களுக்கு நடந்தே சென்று வந்திடலாம்.

அருகிலுள்ள கடைகளில் பொருட்களை வாங்க நடந்தே சென்று வந்திடலாம்.

இவ்வாறாக கிடைக்கின்ற சிறுசிறு சந்தர்ப்பங்களையும் நடைப்பயிற்சி செய்திட வாய்ப்பாக பயன்படுத்திடலாம்.
நடைப்பயிற்சியின் நன்மைகளை அனுபவரீதியில் நம் முன்னோர் நன்கு அறிந்திருந்தனர் போலும். அதனால் தான் அயல் ஆலயங்களுக்கு நடந்து செல்லுதல், தூரத்து கோயில்களுக்கு பாதயாத்திரை செய்தல், ஆலய வீதிகளை ஒற்றை எண்ணில் சுற்றிவருதல் போன்ற நடை முறைகளை ஏற்படுத்தியிருந்தார்கள் போலும்.

நடைப்பயிற்சியின் மூலம் இதயநோய்கள். மூட்டு நோய்கள், முதுகு நோவுகள் போன்ற தொற்றா நோய்கள் குறைவடைகின்றன என அறிந்தோம் இதன் காரணமாக அரசிற்கு வருடாந்த தேசிய சுகாதார சேவைகளுக்காக ஒதுக்கப்படுகின்ற கோடிக்கணக்கான பணம் மீதப்படுத்தப்படும்.

ஆரோக்கிய மனித வளங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதன் காரணமாகத்தான் லண்டன் போன்ற வளர்ச்சியுற்ற நாடுகளில் நகரங்களை திட்டமிடும் போது, வாகனப் போக்குவரத்துக்களை மட்டுப்படுத்தி மக்கள் நடப்பதற்கும் துவிச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்குமான பாதைகளை உருவாக்குகின்றார்கள். பூங்காக்களை சுற்றியும் இப்பாதைகளை வடிவமைப்பு தில்கவனம் செலுத்துகின்றனர். இவ்வாறான நகரத்தில்டங்கள்  மக்களுக்கு வாழ்வுடன் இயைந்ததான உடற்பயிற்சியினை அவர்கள் உணராமலேயே தந்துவிடுகின்றது.

Dr.P.ஐெசிதரன்

சுகாதாரவைத்தியஅதிகாரி ,யாழ். மாநகரசபை
நன்றி :- நீரிழிவுக் கைநுால் யாழ். நீரிழிவுக்
கழகம்.


SHARE