மட்டக்களப்பில் 1500 ஏக்கர் மேச்சல் தரை காணி பறிபோவதை தடுத்து நிறுத்தினார் சாணக்கியன்..!!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மேச்சல் தரை காணிகள் 1500 ஏக்கரை சிங்கள மக்களுக்கு வழங்கும் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தற்காலிகமாக தடுத்து நிறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு எல்லை பகுதியான மயித்தமடு, மாதவனை பகுதிகளில் உள்ள மேய்ச்சல்தரை காணிகளை அம்பாறை, பொலன்னறுவை மாவட்டங்களைச் சேர்ந்த சிங்கள மக்களுக்கு விவசாயம் செய்வதற்கு வழங்கப்படவிருந்தது.

கிழக்கு மாகாண ஆளுநர், மகாவலி அபிவிருத்தித் திணைக்களத்திடம் அம்பாறை, பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள சிங்கள மக்களுக்கு சோளம் பயிர் செய்கை செய்வதற்கு என சுமார் மூவாயிரம் ஏக்கர் காணிகளை கோரியிருந்தார்.

அதன் முதல் கட்டமாக 1500 ஏக்கர் காணிகளை வழங்க மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினர் இணக்கம் தெரிவித்து அதனை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவந்தது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகங்களின் ஒன்றியம் மற்றும் பண்ணையாளர்கள் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

நேற்றைய தினம் (30) கொழும்பில் உள்ள மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் எஸ்.பெரேராவை சந்தித்து மேற்படி விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கலந்துரையாடினார்.

இவ்வாறு கால்நடைகளை வளர்ப்பதற்காக பயன்படுத்தப்படும் மேய்ச்சல் தரைகளை வெளி மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு விவசாயம் செய்ய வழங்கினால் மாவட்டத்தில் உள்ள பண்ணையாளர்கள் தங்களிடம் உள்ள மாடுகளை மேய்ப்பதற்கு இடம் இல்லாமல் போகும் எனவும் என்பதுடன் பால் உற்பத்தி இல்லாமல் போவதுடன் அது அரசாங்கத்தின் சுய தொழில் திட்டங்களை வெகுவாக பாதிக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

எனவே உடனடியாக மேய்ச்சல் தரை காணிகளை விவசாயத்திற்கு வழங்குவதை தடுத்து நிறுத்துமாறும் இல்லை என்றால் தான் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய போவதாக இன்றை சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வலியுறுத்தினார்.

இந்நிலையில் இந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக கூறிய மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் அவர்கள் இது குறித்து ஆராய்வதற்கு தனது மேல் அதிகாரிகளை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அனுப்பி மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதாக தன்னிடம் உறுதியளித்துள்ளதாக இரா.சாணக்கியன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here