முடக்க நிலைமை 16 ஆம் திகதி வரையே! இராணுவத் தளபதி தெரிவிப்பு..!!!


நாடளாவிய ரீதியில் தற்போது முடக்கப்பட்டுள்ள பிரதேசங்கள், நகரங்களை எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை வரை மட்டுமே முடக்கி வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதியும் கொவிட் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்ர சில்வா தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இந்த ஒரு வாரத்துக்குள் ஏதேனும் ஒரு பகுதியில் ஆபத்து அதிகரிக்குமாக இருந்தால், அது குறித்து தீர்மானம் அந்தந்தச் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப மாறுபடும் என அவர் சுட்டிக்காட்டினார்.

‘ உண்மையில் ஊரடங்கு நிலையை நீக்கி, இந்த பகுதிகள் முடக்கப்பட்டமை நினைத்தவாறு எடுக்கப்பட்ட முடிவல்ல. அப்பகுதிகள் தொடர்பிலான பி.சி.ஆர். பகுப்பாய்வுகள், உளவுத்துறை அறிக்கைகள், அந்தந்த பிரதேச மக்களின் நடவடிக்கைகளை மையப்படுத்தி கொரோனா தொற்று பரவலுக்கான அபாயம்,  அதிக சாத்தியக் கூறுகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டே முடக்கப்பட்ட பகுதிகள் அவ்வாறான நிலைமையின் கீழ் கொண்டுவரப்பட்டன.

இவ்வாறான பின்னணியில் தற்போது முடக்கப்பட்டுள்ள நகரங்களை ஒரு வாரத்துக்கு மட்டுமே, அதாவது எதிர்வரும் 16 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரையிலான காலப்பகுதிவரை மட்டுமே முடக்கி வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எனினும் அக்காலப் பகுதிக்குள் அபாயகரமான நிலைமைகள் எந்த பகுதியிலேனும் தென்படுமாக இருந்தால், அது தொடர்பில் அவசியமான பொருத்தமான தீர்மாங்களை எடுக்க வேண்டி ஏற்படலாம். ‘ என தெரிவித்தார்.

Previous Post Next Post


Put your ad code here