கொரோனா தொற்றில் உயிரிழப்போரின் குடும்பத்தாரிடமிருந்து அறவிடப்படும் 20,000 ரூபா – பின்னணி என்ன?


கொவிட் நிதியத்தில் 1640 மில்லியன் ரூபா காணப்படுகின்ற பின்னணியில், கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் இறுதிக் கிரியைகளுக்காக அரசாங்கம், அவர்களது குடும்பத்தாரிடமிருந்து 20,000 ரூபா நிதியை அறவிடுவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.

பாராளுமன்றத்தில் இன்று (23) இடம்பெற்ற குழு நிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி வரை, கொவிட் நிதியத்தில் 1640 ரூபா காணப்பட்ட போதிலும், அதிலிருந்து 16 வீதமான பணத்தையே அரசாங்கம் செலவிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எஞ்சிய 84 வீதத்தை வைத்திருப்பது எதற்காக என அவர் சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்த நிதியத்திலிருந்து பி.சி.ஆர் பரிசோதனைகளுக்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், அதற்காக 42 மில்லியன் ரூபா மாத்திரமே செலவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன், விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள போதிலும், அதற்காக 24 மில்லியன் ரூபா மாத்திரமே செலவிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1640 மில்லியன் ரூபா நிதியத்தில் காணப்படுகின்ற போதிலும், 268 மில்லியன் ரூபா மாத்திரமே செலவிடப்பட்டுள்ளதாக அநுர குமார திஸாநாயக்க கூறுகின்றார்.

கொவிட் தொற்று தற்போது பாரிய பிரச்சினையாக உருவாகி வருகின்ற நிலையில், அரசாங்கத்தினால் இதுவரை 16 வீதமான தொகையே செலவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த நிலையில், கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் குடும்பத்தாரிடமிருந்து, சவப்பெட்டியை கொள்வனவு செய்வதற்காக 20,000 ரூபாவை அரசாங்கம் அறவிடுவதாகவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

அவ்வாறு இல்லையென்றால், சவப்பெட்டியை கொள்வனவு செய்து தருமாறு கூறப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டதன் பின்னர், அவர்களது குடும்பம் தனிமைப்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், நிர்க்கதிக்குள்ளானவர்களிடமிருந்து அரசாங்கம் இந்த நிதித் தொகையை அறவிடுவதாகவும் அவர் கூறுகின்றார்.

சவப்பெட்டி கொள்வனவிற்காக கொவிட் நிதியத்திலிருந்து பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் என அநுர குமார திஸாநாயக்க சபையில் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post


Put your ad code here