பொலிசாரால் மீளப் பெறப்பட்ட மாவீரர் நாள் தடை கோரிய மனு..!!!


பருத்தித்துறை நீதிமன்ற நியாயதிக்கத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நவம்பர் 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பொலிசாரால் மீளப்பெறப்பட்டன.

இலங்கை குற்றவியல் சட்டக்கோவை 106ஆம் பிரிவின் பொதுத் தொல்லையின் கீழ் இந்த விண்ணப்பங்கள் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி ஆகிய 3 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளால் தனித் தனியே தாக்கல் செய்யப்பட்டன.

எதிர் மனுதாரர்களாக நினைவேந்தலை நடத்தும் ஒவ்வொருவர் உட்பட சிலரது பெயர்கள் குறிப்பிடப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் கடந்த வியாழக்கிழமை பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் அழைக்கப்பட்டு நேற்று திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

இன்று விண்ணப்பங்கள் மீளவும் பதில் நீதிவான் முன்னிலையில் அழைக்கப்பட்ட போது மன்றில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், கனகரட்ணம் சுகாஷ், சந்திரசேகரம், உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.

பொலிசாரின் விண்ணப்பங்களுக்கு பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளினால் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து இவ் வழக்கை நிரந்தர நீதவான் முன்னிலையில் விசாரணை செய்யுமாறு வழக்கை ஒத்திவைக்க பதில் நீதவான் கட்டளையிட்ட போது, பொலிசார் இவ் வழக்கை மீளப் பெறுவதாக மன்றுக்கு அறிவித்தனர்.

Previous Post Next Post


Put your ad code here