Monday 9 November 2020

உலகளாவிய கொரோனா தொற்று 50 மில்லியனை தொட்டது..!!!

SHARE


பல நாடுகளிலும் புதிய கொரோனா தொற்று சம்பவங்கள் சாதனை அளவுக்கு அதிகரித்திருக்கும் நிலையில் உலகளாவிய தொற்றுச் சம்பவங்கள் 50 மில்லியனைத் தொட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 1.25 மில்லியனைத் தாண்டியுள்ளதாக ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

எனினும் பல நாடுகளில் போதுமான அளவில் சோதனைகள் நடத்தப்படாத நிலையில் இதன் உண்மையான எண்ணிக்கை கூறப்படுவதை விடவும் அதிகம் என நம்பப்படுகிறது.

இதில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கம் தற்போதைய சம்பவங்களில் கால் பங்கினைக் கொண்டிருப்பதாக ரோய்ட்டர்ஸ் தரவுகள் காட்டுகின்றன.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த ஐரோப்பா 12.5 மில்லியன் சம்பவங்கள் மற்றும் 305,700 உயிரிழப்புகளுடன் மீண்டும் கொரோனா தொற்றின் மையப்புள்ளியாக மாறியுள்ளது.

உலகில் மோசமாக பாதிக்கப்பட்டிருந்து அமெரிக்காவில் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 10 மில்லியனை நெருங்கியுள்ளது. கடந்த மூன்று நாட்களாக அந்நாட்டில் தினசரி தொற்றுச் சம்பவங்கள் 125,000ஐ தாண்டியுள்ளது.

கடந்த ஏழு நாட்களில் உலகளாவிய ரீதியில் தினசரி சராசரியாக 540,000 க்கும் மேற்பட்ட புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின்றன.

இந்த நோய்த்தொற்றின் அண்மைய அதிகரிப்பு தீவிரமாக உள்ளது. நோய்த் தொற்று 30 மில்லியனில் இருந்து 40 மில்லியனை எட்ட 32 நாட்கள் எடுத்துக் கொண்டது.

இதுவே அடுத்த பத்து மில்லியனைத் தொடுவதற்கு 21 நாட்களே தேவைப்பட்டுள்ளது.

உலகில் அதிக கொரோனா சம்பவங்களில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் கடந்த செப்டெம்பர் தொடக்கம் தொற்றுச் சம்பவங்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் மொத்த தொற்றுச் சம்பவங்கள் 8.5 மில்லியனை கடந்திருக்கும் நிலையில் அங்கு சராசரியான தினசரி 46,200 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
SHARE