புரேவி புயலையடுத்து ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் 13 ஆயிரத்து 289 குடும்பங்களை சேர்ந்த 44 ஆயிரத்து 31 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார்.
அத்துடன், சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவுக்கு உள்பட்ட கொடிகாமத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சங்கானை பிரதேச செயலக பிரிவில் மாதகலில் மீனவர் ஒருவர் கடலுக்குச் சென்ற நிலையில் காணாமற்போயுள்ளார்.
பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வல்வெட்டித்துறையில் புயலின் தாக்கத்தினால் 5 பேரும் சங்கானை பிரதேச செயலக பிரிவில் ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று வியாழக்கிழமை மாலை 6 வரையான நிலவரத்தின் படி இந்த விவரங்கள் இடர் முகாமைத்துவ அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் 70 குடும்பங்களும் வேலணை பிரதேச செயலர் பிரிவில் 606 குடும்பங்களும் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவில் 287 குடும்பங்களும் காரைநகரில் 39 குடும்பங்களும் யாழ்ப்பாணத்தில் ஆயிரத்து 261 குடும்பங்களும் நல்லூரில் ஆயிரத்து 240 குடும்பங்களும்
கோப்பாயில் 3 ஆயிரத்து 136 குடும்பங்களும் சங்கானையில் ஆயிரத்து 226 குடும்பங்களும் சண்டிலிப்பாயில் ஆயிரத்து 250 குடும்பங்களும் உடுவிலில் 986 குடும்பங்களும் தெல்லிப்பழையில் 283 குடும்பங்களும் சாவகச்சேரியில் 848 குடும்பங்களும் கரவெட்டியில் 448 குடும்பங்களும் பருத்தித்துறையில் ஆயிரத்து 229 குடும்பங்களும் மருதங்கேணியில் 380 குடும்பங்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 51 வீடுகள் முழுமையாகவும் 2 ஆயிரத்து 227 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 33 நலன்புரி நிலையங்களில் அமைக்கப்பட்டு ஆயிரத்து 72 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 687 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருள்களையும் வழங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
