மருதனார்மடம் பொதுச் சந்தை கொத்தணி; 31 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று..!!!


மருதனார்மடம் சந்தையில் 394 பேரிடம் இன்று  சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பொதுச் சந்தை வியாபாரிகள் 24 பேருக்கும் அவர்களது உறவினர்கள் 7 பேருக்கும் இவ்வாறு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32ஆக உயர்வடைந்துள்ளது.

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடுமுழுவதும் எழுமாறாக தெரிவு செய்யப்படுவோரிடம் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதனடிப்படையில் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்பில் மருதனார்மடம் சந்தி முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் உள்ள சாரதிகளிடம் கடந்த புதன்கிழமை மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

அந்தப் பரிசோதனையின் முடிவில் மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரியாகவும் முச்சக்கர வண்டி சாரதியாகவும் உள்ள 38 வயதுடைய குடும்பத்தலைவர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றிரவு கண்டறியப்பட்டது.

அதனையடுத்து அவர் கொவிட் – 19 சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டார். அவரது குடும்பம் உடுவில் பிரதேச சபை ஒழுங்கையில் உள்ள அவர்களது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரனின் அறிவுறுத்தலில் மருதனார்மடம் பொதுச் சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள வியாபார நிலையங்களில் உள்ளவர்கள் என 394 பேரிடம் இன்று சனிக்கிழமை மாதிரிகள் பெறப்பட்டன.

மாதிரிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அதன் முடிவு இன்று இரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post


Put your ad code here