யாழ்ப்பாணம் – திருநெல்வேலிச் சந்தைப் பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் 313 பேரிடம் இன்று பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. சேகரிக்கப்பட்ட மாதிரிகள் அனைத்தும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள பி.சி.ஆர் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
மருதனார்மடம் பொதுச் சந்தைப் பகுதியில் கடந்த வாரம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, யாழ். மாவட்டத்தில் உள்ள பொதுச் சந்தைகளில் கொரோனா பரிசோதனைகளைச் செய்வதற்கு சுகாதாரத் திணைக்களத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கமைய நல்லூர் பிரதேச வைத்திய அதிகாரி பணிமனையினரின் ஏற்பாட்டில் திருநெல்வேலிச் சந்தைப் பகுதியில் இன்று வியாபாரிகளிடம் மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
சேகரிக்கப்பட்ட அனைத்து மாதிரிகளும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து அந்த மாதிரிகள் அனைத்தும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள பி.சி.ஆர் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அறிய வருகிறது.