முகக்கவசம் காரணமாக ஏற்படக் கூடிய பருக்களும் தவிர்த்துக் கொள்வதற்கான முறைகளும் தீர்வுகளும்..!!!


பொதுவாக முகக்கவசம் காரணமாக ஒவ்வாமை ஏற்படுவது மிக அரிது. வெளியில் செல்லும்போது  அதிக ஒப்பனையை  (makeup) தவிர்த்து விடுங்கள் அழுக்கடைந்த ஒரே மாஸ்கை தொடர்ச்சியாக அணியாதீர்கள்! 

கொவிட் -19   தொற்று காரணமாக முகக்கவசத்துடன் வாழப்பழகி தற்போது ஒரு வருடத்துக்கு மேலாகிறது.  பெரும்பாலானோர் தங்களின் கடந்த ஒரு வருட வாழ்வில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கை மாஸ்க் அணிந்தவாறே கழித்துவிட்டனர்.

இவர்களில் சிலர் எதிர்நோக்கும் ஒரு புதிய பிரச்சினை முகக்கவசம் காரணமாக ஏற்படும் பருக்கள்.  ஒரு வருடத்துக்கு முன்பு நன்கு பொலிவுடன் காணப்பட்ட முகம், தொடர்ச்சியான முகக்கவச பாவனையை தொடர்ந்து இன்று பருக்கள் கொண்டதாக  மாறி இருக்கிறது. இந்தப் பிரச்சினை உண்மையில் முகக்கவசம் காரணமாக ஏற்பட்டது தானா?  இதை எவ்வாறு வராமல் தடுக்கலாம்,  இதற்கான சிகிச்சை முறைகள் என்ன? என்பதை இந்த கட்டுரையில் தொடர்ந்து பார்ப்போம்.

ஆங்கிலத்தில் முகப்பருவை  அக்னி (acne) என அழைப்பார்கள், மாஸ்க் காரணமாக ஏற்படும் இந்த பருக்களுக்கு தற்போது மாஸ்க்நி (maskne) என பெயர் வழங்கியுள்ளார்கள்.  இந்த மாஸ்க்நியின் பாதிப்பு ஏற்கனவே முகக்கவசம் அணிந்து பணியாற்றியவர்கள் எதிர்நோக்கிய ஒன்றுதான்.

கொரோனாவின் பின் புதிதாக ஏற்பட்ட ஒன்று கிடையாது.  ஆனால் இன்று முகக்கவச பாவனை அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் இந்தப் பிரச்சினை இன்று  பொதுமக்களின் பிரச்சினையாக மாறிவிட்டது.

இந்த  முகப்பருக்கள் ஏன் தேன்றுகின்றன  என முதலில் பார்ப்போம். ஒருவர் முகக்கவசம் அணிந்து கொண்டிருக்கும்போது  அவரது சுவாசம் மற்றும் அவர் கதைக்கும்போது வெளிவரும் சூடான காற்று என்பன முகக்கவசத்தினுள் தொடர்ச்சியாக தங்குவதால் கொஞ்சம் அதிகரித்த வெப்ப நிலையையும் ஈரலிப்பையும் பேணி வைத்திருக்கும்,

இந்த அதிகரிப்பு பருக்களை உண்டாக்கும் நுண்ணங்கிகளின் வளர்ச்சியை தூண்டும். இந்த அதிகரித்த வெப்ப நிலை இன்னும் வியர்வை மற்றும் சுரப்புகளை தூண்டும். அத்துடன் முகக்கவசம் காரணமாக தோலில் அதிக உராய்வு ஏற்படும், அதிலும் குறிப்பாக விளிம்பு பகுதியில் ஏற்படும் உராய்வு சற்று அதிகமாகவே இருக்கும்.  இந்த உராய்வும் பருக்களின் உருவாக்கத்துக்கு காரணமாகும். இவற்றால் ஏற்படும் நுண்காயங்கள் வழியே அதிகரித்தளவில் இருக்கும் நுணங்கிகள் உட்சென்று பருக்களையும், ஏனைய தோல் பாதிப்புகளையும் ஏற்படுத்தும்,

எனவே பொதுவாக இந்நபருக்கள் மூக்கு, கன்னம், தாடை என முகக்கவசம் அழுத்தும் பகுதிகளிலேயே ஏற்படும்.  இவையே இந்த Acne Mechanica எனும் வகைக்கு உட்பட்ட பருக்கள் ஏற்படுவதற்கான விஞ்ஞானபூர்வமான காரணம், இவற்றோடு தொடர்ச்சியாக முகக்கவசம் அணியும்போது ஏற்படும் மன அழுத்தம் கூட இந்த பருக்கள் அதிகம் ஏற்படுவதற்கு காரணமாகிறது என நம்பப்படுகிறது.

பொதுவாக முககவசம் காரணமாக ஒவ்வாமை ஏற்படுவது மிக அரிது எனவே அலர்ஜி பிரச்சினைகள் குறைவாகவே இருக்கும்.  ஆனாலும் நீங்கள் வேறு வகையான முகக்கவசத்தைப்  பாவித்து உங்களது பருக்கள் ஒவ்வாமை காரணமாக ஏற்படவில்லை என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக நாம் இந்த பருக்கள் உண்டாவதை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதை பார்ப்போம். யாரும் பருக்களுக்கு பயந்து மாஸ்கினை தூக்கிவீச வேண்டாம். ஏனென்றால் இதற்கு தீர்வு உள்ளது,  தவிர்க்கவும் வழிகள் உள்ளன.

முதலாவதாக நீங்கள் முககவசம் அணிந்து வெளியில் செல்லும்போது  அதிக ஒப்பனையை  (makeup) தவிர்த்து விடுங்கள். அதிக ஒப்பனையிட்டு பின்னர் அதன் மேல் மாஸ்க் அணிந்து செல்லுதல் இந்தப் பாதிப்பை கூட்டுகிறது. ஆனால் சரும ஈரலிப்பு பெறுவதற்காக பயன்படுத்தப்படும் மாஸ்டரைசர்  போன்ற க்ரீமோ அல்லது சூரிய வெளிச்சத்தில் செல்லும் போது அணியும் சன்ஸ்கிரீம் போன்றவற்றையோ மெல்லிய படையாக பயன்படுத்தும்போது இந்த பருக்கள் ஏற்படும் வாய்ப்பு குறைவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

எனவே, தேவையற்ற அதிக ஒப்பனையினை தவிர்த்துவிட்டு இந்த வகையான ஒரு மெல்லிய கிரீமை பயன் படுத்திக்கொள்ளலாம். இரண்டாவது உங்கள் முகக்கவசங்களின் சுத்தம், கொரோனா  அச்சம் குறைந்து விட்டதாலோ என்னவோ  சுகாதார வழிகாட்டலின் கீழ் சரியான முறையில் முகக்கவசம் பாவிக்கும் பழக்கம் பெருமளவில் குறைந்து வருகிறது.

அழுக்கடைந்த ஒரே மாஸ்கை தொடர்ச்சியாக அணியும் போது இத்தகைய பருக்கள் உண்டாகும் வாய்ப்பு அதிகரிப்பதாக குறிப்பிடப்படுகிறது. எனவே எப்போதும் சுகாதார விதிமுறைகளின்படியே ஒவ்வொரு முகக்கவசத்தினையும் எவ்வாறு பாவிக்க வேண்டுமோ அவ்வாறே பாவியுங்கள். துணி மாஸ்க் என்றால் தினசரி கழுவி உபயோகியுங்கள்.

அடுத்ததாக ஒவ்வொரு தடவை நீங்கள் முகக்கவசத்தை  மாற்றும்போதும் முகத்தை மிகவும் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.  உங்களுக்கு சந்தர்ப்பங்கள் வாய்க்கும்  இடத்தே இயலுமான நேரங்களில் முகக்கவசத்தைக் கழற்றி சுத்தமான நீரால் கழுவி மீண்டும் அணிந்து கொள்ளலாம். நல்ல toner  பயன்படுத்தி (சலிசிலிக் அமிலம் போன்ற உள்ளடக்கம் உள்ள) முகத்தை சுத்தம் செய்வதும் அதன்பின் மொஸ்டாரைசர் இட்டுக்கொள்வதும் இந்த மாஸ்க்நி பாதிப்பை  குறைப்பதாக அறியப்பட்டுள்ளது.

அடுத்ததாக முகத்தில் உங்கள் மாஸ்க் அழுத்தும் பகுதிகளை இனங்கண்டு அதன்மேல் எண்ணெய் , அல்லது நல்ல கிறீம் ஒன்றினை பாவித்து நன்கு மசாச் செய்வதும் உராய்வு காரணமாக ஏற்படும் பாதிப்புகளை குறைத்து இந்த பருக்கள் உண்டாவதனைக்  குறைக்கும்.

உங்களுக்கு இவ்வாறான பருக்கள் இருந்தால் அதிகளவில் வேறு, வேறு அழகுசாதனப்  பொருட்களை பாவிப்பதனைத்  தவிர்த்துக்கொள்ளுங்கள். சில எளிய முறைகளே தீர்வை  வழங்கிவிடும், ஆனால் புதிது புதிதாக பாவிக்கும் பொருட்கள் நிவாரணத்தை  தராமல் இன்னும் பிரச்சினையை உண்டாக்கலாம்.

ஆரோக்கியமான உணவு, அதிகம் நீர் அருந்துதல், அதிக இனிப்புகளை,கொழுப்புகளை, பாற்பொருட்களை தவிர்த்தல் கூட பலருக்கு பயனைக் கொடுக்கும்.

இவற்றின் மூலம் பயன் கிடைக்கவிடத்தே பொருத்தமான வைத்தியர் ஒருவரை நாடுங்கள், இதற்கு சிகிச்சைகள் உண்டு, வேறு ஒருவருக்கு பருக்களுக்காக பரிந்துரைக்கப்பட்ட மருந்தினை உங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் ,ஏனெனில் இவை வேறு வகைக்கு உட்பட்டவை.இந்த ஆலோசனைகளை கருத்தில் கொண்டால் மாஸ்க்நி பாதிப்பை தவிர்த்து கொரோனாவை வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம்.



 

Previous Post Next Post


Put your ad code here