வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் நீதிமன்றங்களில் கடமையாற்றும் நால்வர், நீதிமன்றப் பதிவாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
அவர்களுக்கான நியமனம் வரும் ஏப்ரல் முதலாம் திகதி வியாழக்கிழமை நடைமுறைக்கு வரும் என நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற முகாமைத்துவ உதவியாளர் சேவையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்தோர் மற்றும் பட்டதாரிகளுக்கு போட்டிப் பரீட்சை மூலம் நீதிமன்றப் பதிவாளர் சேவை தரம் 3இற்கு நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நால்வர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நியமனத்திலேயே யாழ்ப்பாணத்தில் நால்வர் பதவியுயர்வு பெற்றுள்ளனர்.
சாவகச்சேரி நீதிமன்ற கணக்கீட்டு உதவியாளர், திருமதி நிராஜினி சுமந்திரன், திருகோணமலை குடியியல் மேன்முறையீட்டு நீதிமன்றப் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் யாழ்ப்பாணம் வேம்படி உயர்தர பெண்கள் பாடசாலையின் பழைய மாணவியாவார்.
யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு நீதிமன்ற நிகழ்ச்சித் திட்ட உதவியாளர், திருமதி செல்வமதி குலசிங்கம், கிளிநொச்சி மாவட்ட மற்றும் நீதிவான் நீதிமன்றங்களின் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி மாவட்ட நீதிமன்ற முகாமைத்துவ உதவியாளர் திருமதி தர்சிகா தர்ஷன், மன்னார் மாவட்ட மற்றும் நீதிவான் நீதிமன்றங்களின் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் பழைய மாணவியான அவர், சட்டமாணி பட்டதாரி ஆவார்.
சாவகச்சேரி மாவட்ட நீதிமன்ற அபிவிருத்தி உத்தியோகத்தர் சுப்ரமணியம் சிறிதரன், சம்மாந்துறை மாவட்ட நீதிமன்றப் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்