சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் கூடி வரும் பௌர்ணமி நாள் சித்திரா பௌர்ணமி நாளாகும். வசந்த காலத்தில்தான் பெரும்பாலும் ஆலயங்களில் பிரம்மோற்சவம் (திருவிழா) நடைபெறுகிறது. அக்ஷய திருதியை போலவே இந்த நாளிலும் தானங்கள் செய்வது நன்மை தரும் என்று கருதப்படுகிறது.
அச்சுவினி முதல் ரேவதி வரையான இருபத்தேழு நட்சத்திரங்களில் பதினான்காவதாக வரும் சித்திரை நட்சத்திரம் அம்மனுக்குரிய சிறப்புத் தினமாக அமைகின்றது. மாதந்தோறும் வரும் இச்சித்திரை நட்சத்திர தினங்களில் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்துடன் கூடிவரும் சித்திரை நட்சத்திர தினம் சித்திரா பௌர்ணமி என்று சிறப்பித்துக் கூறப்படுகின்றது.
தாயாரை இழந்தவர்கள் இத்தினத்தில் விரதமிருப்பதால் இந்நாள் பிதிர்களுக்குரிய விரத நாளாகவும் அமைகின்றது. தந்தையை இழந்தவர்கள் ஆடிஅமாவாசையன்று விரதமிருப்பது போன்று தாயாரை இழந்தவர்கள் சித்திரா பௌர்ணமி விரதத்தை மேற்கொள்வது விதியாயமைந்துள்ளது.
பெற்று, வளர்த்து, சீராட்டி வளர்த்தெடுத்த தாயாரை, அவர் மறைந்த பின்பும் நன்றியுடன் நினைவுகூரும் நாளான இந்நாளில் விரதமிருந்து வழிபாடு செய்வதன் மூலம் தாயின், தாய்மையின் பெருமைகளை மனதிலிருத்தி அவரது ஆன்மா அமைதியடைய இறைவனைத் தொழும் நாளாகவும் இந்நாள் அமைகின்றது.
இந்த நாளில் விரதம் எடுத்து பூஜை செய்பவர் அதற்கென்று தனிக் கோலம் போட்டு, தெற்குப் பக்கம் மூடி உள்ளே சூரிய சந்திரரின் படம் வரைந்து, நடுவில் சித்திரபுத்திரனின் படம் வரைந்து, ஒரு கையில் எழுத்தாணியும் மற்றொரு கையில் ஏடும் வரைந்து வழிபடுவார்கள்.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நன்மையோ தீமையோ விளைவுகள் உண்டு. இதைத்தான் ‘விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமோ?’ என்பார்கள் ஆகையால் எப்போதும் ஒரு விழிப்புணர்வோடு நல்லெண்ணங்களோடு அன்பு உள்ளத்துடன் கடமைகளைச் செய்து வந்தால் புண்ணியமே சேரும்.
புராணங்களில் சித்ரகுப்தன் பிறந்தநாள் சித்ரா பௌர்ணமி என்று கூறப்படுகிறது. தமிழ் வருடத்தின் முதல் மாதமான, சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தையே சித்திரா பௌர்ணமி திருநாளாக எல்லோரும் கொண்டாடி வருகின்றனர். இந்த தினத்தில் குறிப்பாக, சித்திரகுப்தரை வழிபட வேண்டும் என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.
இந்திரன் பாபவிமோசனம் வேண்டி அனைத்து சிவ தலங்களையும் சென்று வணங்கி வரும் நிலையில், மதுரை சொக்கநாரைத் தரிசித்து பாவவிமோசனம் பெற்ற புண்ணிய நாள் சித்ராபௌர்ணமி அன்று தான் எனவும், சீதாராமர் வனவாசம் முடிந்து நகருக்கு திரும்பிய நாள் சித்ரா பௌர்ணமி நாள் எனவும் மதுரை வைகைக் கரையில் கள்ளழகர் எழுந்தருளிய நாள் சித்ராபௌர்ணமி எனவும் புராணங்கள் கூறுகின்றன.
Tags:
religion news
