காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 18ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்..!!!


காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 17 ஆயிரத்து 603 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இதனால் யாழ்.மாவட்டத்தில் வாக்காளர் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டமையினால் , நாடாளுமன்ற ஆசனம் உள்ளிட்ட பலவேறு விடயங்களில் தாக்கம் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

2020ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் இறுதி செய்யப்பட்டு கடந்த 30ஆம் திகதி வெளியிடப்பட்டது. அதன் போது , கடந்த 2019ஆம் ஆண்டு பட்டியலில் 4 இலட்சத்து 79 ஆயிரத்து 584 பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டிருந்தனர். புதிதாக வெளியிடப்பட்ட பட்டியலில் 4 இலட்சத்து 69 ஆயிரத்து 823 ஆக குறைவடைந்துள்ளது.

காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ளடங்கும் 21 கிராம சேவையாளர் பிரிவுகளை சேர்ந்த மக்கள் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அதன் போது 21 ஆயிரத்து 905 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன.

அதனால் அவர்கள் இப்பிரதேசத்தில் வசித்தாலும் , தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது.  அத்தோடு யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் திணைக்களம் சிறப்பு நடவடிக்கை சிலவற்றையும் முன்னெடுத்திருந்தது.

நீக்கப்பட்ட பெயர்களுக்கு உரியவர்களுக்கு வாக்காளர் பதிவு விண்ணப்பங்கள் கையளிக்கப்பட்டன. அத்தோடு பொது அமைப்புக்கள் ஊடாகவும் கிராம சேவையாளர்கள் ஊடாகவும் பதிவுக்கான கோரிக்கைகள் அனுப்பப்பட்டன.

அதன் அடிப்படையில்  21 ஆயிரத்து 905 பேரில் வெறும் 4ஆயிரத்து 302 பேர் மாத்திரமே தமது பதிவுகளை மேற்கொண்டனர். அதனால் பதிவுகளை மேற்கொள்ளாத 17ஆயிரத்து 603 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு 92 ஆயிரத்து 264 பேர் வாக்காளராக பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் , 2020ஆம் ஆண்டு 93 ஆயிரத்து 370 பேராக அதிகரித்துள்ளது.

Previous Post Next Post


Put your ad code here