இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக புத்தளம் பகுதிக்கு வருகைத்தந்து, ஒழிந்திருந்த தாய் மற்றும் இரண்டு குழந்தைகளை, அதே வீட்டில் தனிமைப்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புத்தளம் – வெப்பமடு பகுதியிலுள்ள வீடொன்றிலேயே, குறித்த மூவரும் மறைந்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் வாழ்ந்த வந்த 34 வயதான பெண்ணொருவரும், அவருடைய 13 மற்றும் 4 வயதான குழந்தைகளுமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த பெண்ணுடன் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்ததாக கூறப்படும் மற்றுமொரு பெண், தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பெண்கள் நேற்றைய தினம் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர், குறித்த வீட்டை சுற்றி வளைத்து, அவர்களை தனிமைப்படுத்தியுள்ளனர்.
தாம் வாழ்ந்த பகுதிக்கு அருகில் கொவிட் தொற்று அதிகரித்துள்ளமையினால், தாம் இவ்வாறு இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக விசாரணைகளின் போது, குறித்த பெண் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த பெண் மற்றும் குழந்தைக்கு பாதுகாப்பு வழங்கிய மற்றும் அவர்களுடன் நெருங்கி பழகிய 5 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Tags:
sri lanka news