இனி பயணக் கட்டுப்பாடு எவ்வாறு இருக்கும்? – வெளியானது புதிய தகவல்..!!!


 

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாக இருந்தால், எதிர்வரும் நாட்களில் பயணக் கட்டுப்பாட்டை கடுமையாக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார்.

கொழும்பில் இன்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாளொன்றிற்கு சுமார் 2000 முதல் 2200 வரையான கொவிட் தொற்றாளர்கள் பதிவாகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு தொடர்ச்சியாக கொவிட் தொற்றாளர்கள் பதிவாகும் பட்சத்தில், பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைத்திருக்க வேண்டும் என அவர் தெரிவிக்கின்றார்.

பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட கடந்த இரண்டு அல்லது மூன்று தினங்களாக மக்கள் பொறுப்பின்றி செயற்பட்ட விதம் குறித்து அனைவரும் அவதானித்ததாகவும் அவர் கூறினார்.

இவ்வாறான நிலையில், எதிர்வரும் நாட்களில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாக இருந்தால், கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் என டொக்டர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார்.

நாளை தளர்த்தப்படும் பயணக் கட்டுப்பாடு?

தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு நாளை (25) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார்.

நாடு முழுவதும் இதுவரை காலமும் அமுலில் இருந்த பயணக் கட்டுப்பாடு, இனி மேல் மாகாணம் உள்ளிட்ட அனைத்து மாகாணங்களுக்குள்ளும் எதிர்வரும் ஜுலை மாதம் 5ம் திகதி வரை அமுலில் இருக்கும் என அவர் கூறுகின்றார்.

டெல்டா வைரஸ் பரவுகின்றதா?

கொழும்பு – தெமட்டகொடையில் அடையாளம் காணப்பட்ட 5 டெல்டா தொற்றாளர்களுக்கு மேலதிகமாக வேறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார்.

மாதிவெல பகுதியில் சந்தேகத்திற்கு இடமான ஒருவர் மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவருக்கு டெல்டா வைரஸ் தொற்று இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் கூறுகின்றார்.

தெமட்டகொட – ஆராமய பகுதியில் டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசத்தை அண்மித்து நடத்தப்பட்ட எழுமாறான பி.சி.ஆர் பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த நிலையில், பொதுமக்கள் மிகவும் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.

Previous Post Next Post


Put your ad code here