யாழ்ப்பாணமும் சினோபாம் அரசியலும்..!!!


நாட்டில் பயணத்தடை அமுலில் உள்ள சந்தர்ப்பத்தில் பல இடங்களில் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன்பிரகாரம் 50,000 சினோபாம் தடுப்பூசிகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 10 பிரதேச செயலாளர்கள் பிரிவுகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் உள்ள பொதுமக்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (30.05.2021) தொடக்கம் வழங்கப்பட்டன.

அவ்வாறு தடுப்பூசி முதல்நாள் வழங்கப்பட்டபோது, சமூக இடைவெளி இல்லாத, சுகாதார அறுவுறுத்தல்களைப் பின்தள்ளிய அரசியல் தலையீடுகள் இருந்ததை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருக்கும் இராஜதந்திரத் தொடர்புகளைப் பின்தள்ளி, இலங்கையில் சீனாவுக்கு உள்ள இறுக்கமான பிணைப்பின் வெளிப்பாடாகவும், குறிப்பாக வடக்கு நிலப்பரப்பு தொடர்பில் சீனா கொண்டுள்ள கரிசனையாகவும் 50,000 சினோபாம் தடுப்பூசிகள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வழங்கப்பட்டன.

இன்றைய தினம் (02.06.2021) காலை வேளையில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அவர்களைத் தொடர்புகொண்டு, “தெரிவு செய்யப்படாத கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி பெற்றுக் கொள்ள முடியுமா? வாய்ப்பு உள்ளதா?” என வினவியபோது, அதற்கு அவர் “இல்லை. அவ்வாறு பெற்றுக்கொள்ள முடியாது; தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவு மக்களுக்கு மாத்திரமே வழங்க முடியும்.” எனக் கூறினார்.

இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதற்கட்டமாக வழங்கப்பட்ட 50,000 தடுப்பூசிகள் இன்றுடன் நிறைவடைந்ததாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்திருந்ததைத் தொடர்ந்து, இன்றைய தினம் (02.06.2021) மாலை அவருடன் தொடர்பு கொண்டபோது, “யாழ்ப்பாண மாவட்டத்தில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முதல் மூன்று நாட்களும் மந்த கதியில் நடைபெற்றதாகவும், அவ்வாறு செல்லும் பட்சத்தில் தடுப்பூசி ஏற்றும் இலக்கை எட்டமுடியாத காரணத்தால், தெரிவு செய்யப்படாத கிராம சேவையாளர் பிரிவு மக்களுக்கும் தடுப்பூசி வழங்கியதாகவும்” தெரிவித்தார்.

ஆனாலும் தடுப்பூசி தொடர்பில் அட்டவணை தயாரிக்கப்பட்டு, ஊடகங்களுக்கும் மக்களுக்கும் பகிரங்கப்படுத்தப்பட்ட பின்னர், எந்தவிதமான முன்னறிவித்தலும் இன்றி ஏனைய தெரிவுசெய்யப்படாத கிராம சேவகர் பிரிவுகளுக்கு வழங்கியமை பொருத்தமற்ற செயற்பாடு எனக் குறிப்பிட்டதுடன், தெற்கைப் போன்றும் வடக்கிலும் தடுப்பூசி அரசியல் இடம்பெறுகிறதா? என வினவியபோது, “இல்லை. வார இறுதியில் மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் யாழ்ப்பாணத்திற்கு கிடைக்க இருப்பதாகவும், அப்பொழுது ஏற்கனவே தயாரிக்கப்பட்ட அட்டவணையைப் பின்பற்றி, தடுப்பூசி வழங்க முடியும் எனவும்” யாழ். அரச அதிபர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அடுத்த கட்ட தடுப்பூசிகள் கிடைக்குமா? காத்திருப்போம்!

உமாச்சந்திரா பிரகாஷ்


 

Previous Post Next Post


Put your ad code here