மதங்களுக்கிடையே குரோதங்களை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைக்கும் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் (பா.உ) தெரிவித்துள்ளார்.
தென்மராட்சி - மிருசுவில் பகுதியில் அமைந்திருந்த குட்டிப் பிள்ளையார் ஆலயம் கடந்த 08/06/2021 அன்று அதிகாலை வேளையில் இனந்தெரியாதவர்களின் வாகனத்தால் மோதி இடித்தழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருந்த கண்டன அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
மேலும் ;
தற்போது நாட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் கொடிய கொரோனா தொற்றுக்கு எதிராக போராடி வரும் நிலையில் மக்களின் நம்பிக்கைக்குரிய, பழமை வாய்ந்த மதத்தலம் ஒன்றை சேதமாக்குவதென்பது மக்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கின்றது.
இவ்வாறான செயற்பாடுகள் மதங்களுக்கிடையே குரோதங்களை ஏற்படுத்தி நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்துகின்றது. மதத் தலத்தை வாகனத்தால் மோதி சேதப்படுத்தியவர்களை கண்டறிவதற்காக விசாரணைகளை ஆரம்பித்துள்ள கொடிகாமம் பொலிஸார்ளுக்கு குற்றவாளிகளை விரைவாக கண்டறிவதற்கு அழுத்தம் கொடுத்துள்ளேன். அவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த பொறுப்பு கூற கூடிய பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நடடிவடிக்கை எடுப்பேன்.
உலகமே பாரிய நெருக்கடிக்குள் இருக்கும் இவ்வேளையில் நாம் அனைவருக்கும் பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டியது எமது கடமையாகும்.
எனக் குறிப்பிட்டிருந்தார்.