நாட்டில் மீண்டும் தலைதூக்கும் டெங்கு..!!!


இலங்கையில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. டெங்கு தொடர்பான விழிப்புணர்வைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு டெங்கு காய்ச்சல் தொடர்பான சில விடயங்களை மக்கள் அறிந்திருக்க வேண்டும்.

இது டெங்கு வைரஸின் வகை-1, வகை-2, வகை-3 மற்றும் வகை-4 எனும் நான்கு வகை வைரஸ்களால் ஏற்படுகிறது. வைரஸ் நோய் என்பதால் இதற்கும் நேரடியான மருந்துகளோ சிகிச்சை முறைகளோ இல்லை என்றாலும், அச்சமடைய வேண்டியதில்லை.

இது ஏடிஸ் (AEDES) எனப்படும் நுளம்புகளினால், குறிப்பாக ஏடிஸ் எஜிப்டி மற்றும் ஏடிஸ் அல்போபிக்ரஸ் எனப்படும் நுளம்பு வகைகளினாலேயே பரப்பப்படுகிறது. இந்த நுளம்புகள் இந்த நோயைப் காவித் திரிகின்றதே தவிர, இந்த நோயை ஏற்படுத்துபவை அல்ல. இவை ஏனைய நுளம்புகளைப் போலல்லாது, சுத்தமான நீரிலேயே பொதுவாக பெருகக் கூடியவை என்றாலும், அசுத்தமான நீரில் பெருக மாட்டாது என்று அசிரத்தையாக இருந்து விட முடியாது. பொதுவாக பகல் நேரங்களில் குத்தும் பெண் நுளம்புகளாலேயே டெங்கு நோய் பரப்பப்படுகின்றது என்றாலும், இரவு நேரங்களிலும் நாம் நுளம்புக் கடியிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வதே சிறந்தது. கறுப்பு நிறமான இந்த நுளம்புகளின் உடலிலே வெள்ளை நிறக் கோடுகள் இருப்பதைக் காணலாம். அதன் முட்டை ஆரோக்கியமாக இருக்க, நமது இரத்தத்திலுள்ள புரதம் அதற்குத் தேவை. இதற்காகவே அது நம்மைக் குத்தி இரத்தத்தை உறிஞ்சும் போது, அதன் வயிற்றிலுள்ள வைரஸ் நம் உடலுக்குள் புகுந்து விடுகிறது. இது ஒரு தடவை குத்துகின்ற போதே நிகழ்ந்து விடும்.

இந்த நுளம்புகள் தமது வாழ் நாட்களான இரண்டு வாரங்களிலும், மூன்று முறை முட்டையிடுவதுடன், ஒவ்வொரு முறையும் சுமார் 100 முட்டைகள் வரை இடும். மழை இல்லாத காலங்களில், தண்ணீர் தேங்கும் பூச்சாடிகள், பிளாஸ்டிக் பைகள், தகரப் பேணிகள், தேங்காய் சிரட்டைகள், டயர்கள் போன்றவற்றில் இனப்பெருக்கம் செய்கிறது.

டெங்கு வைரஸானது நுளம்புக்கடி மூலம் இல்லாமல், நேரடியாக ஒரு நோயாளியிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாது. குழந்தைகளிலும் சிறுவர்களிலும் கடுமையாக இந்நோய் உண்டாகின்றது. ஆண்களை பார்க்கிலும் கூடுதலாக பெண்கள் பாதிப்படைகின்றனர். நீரிழிவு, ஆஸ்துமா நோய் போன்ற நீண்ட கால நோய்கள் உள்ளவர்களுக்கு இந்நோய் மிகவும் உக்கிரம் அடையும் போது உயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பாதிப்பை உண்டாக்கும்.

இந்நோயின் அறிகுறிகள் பின்வரும் நான்கு நிலைகளில் காணப்படலாம். அறிகுறிகள் இல்லாத காய்ச்சல், ஆரம்ப நிலை டெங்குக் காய்ச்சல், இரத்தப் பெருக்குடன் கூடிய டெங்குக் காய்ச்சல், டெங்கு அதிர்ச்சி அறிகுறி நிலை.

முதலாவது நிலையைத் தொடர்ந்து அடுத்தடுத்த நிலைகள் ஒன்றின்பின் ஒன்றாக ஏற்படும். ஆரம்ப நிலை டெங்குக் காய்ச்சல் ஓரிரு நாட்களுக்குள் குறையாவிடின் உடனடியாக அருகிலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளுக்கோ அல்லது உரிய வைத்தியர்களிடமோ சென்று சிகிச்சை பெற்றால் முற்றிய நிலை ஏற்படுவதைத் தடுத்து உயிராபத்தைத் தவிர்க்க முடியும். டெங்கு நுளம்பு ஒருவரைக் குத்தி, நோய் வர 5 முதல் 15 வரையான நாட்களாகும். திடீரென ஏற்படும் கடுமையான காய்ச்சல், தாங்க முடியாத தலைவலி முக்கியமாக முன்தலைப் பக்கத்தில், கண்களின் பின்புறத்தில் வலி, கண்களை உருட்டும் போது கடுமையான வலி, உடல்வலி, மூட்டுகள், தசைகள், கை, கால், எலும்பு போன்றவற்றில் வலி, குமட்டல், வாந்தி, சிறிய சிவந்த புள்ளிகளைக் கொண்ட சிரங்குகள், கண் சிவத்தல், உடல் சோர்ந்து வெளிறிக் காணப்படல், பசியின்மை, வெளிச்சத்திற்குப் பயம், திடீரெனக் காய்ச்சல் குறைதல், குருதிச்சிறு தட்டுக்களின் எண்ணிக்கை குறைதல் போன்றவை ஆரம்ப நிலை டெங்குக் காய்ச்சலின் அறிகுறிகளாகும்.

இந்த அறிகுறிகள் தென்பட்டதும் உடனடியாக நோயாளியை அரசாங்க வைத்தியசாலைக்கோ அல்லது தகுந்த வைத்தியரிடமோ சிகிச்சைக்காக எடுத்துச் செல்ல வேண்டும். அலட்சியமாக இருந்தால் இரத்தப் பெருக்குடன் கூடிய டெங்குக் காய்ச்சல் நிலை ஏற்பட்டு ஏழு முதல் எட்டு நாட்களுக்குள் டெங்கு அதிர்ச்சி அறிகுறி நிலை ஏற்படும்.

உடம்பு குளிர்தல், பதற்றம், அரைத் தூக்கம், அதிர்ச்சி நிலை, அதிகரித்த சுவாசம், அதிகரித்த நாடித்துடிப்பு, திடீரெனக் காய்ச்சல் குறைதல், தோலில் இரத்தக் கசிவு, இரத்த வாந்தி, கறுப்பு நிற மலம், வயிறு, கால் முதலியவற்றில் வீக்கம், இரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு இரத்த ஓட்டம் தடைப்படல், இரத்தத்தின் வெள்ளை அணுக்கள் மற்றும் சிறுதட்டுக்களின் எண்ணிக்கை குறைதல் முதலியன டெங்கு அதிர்ச்சி அறிகுறி நிலையின் அறிகுறிகளாகும். சிறுதட்டுக்களின் எண்ணிக்கை 28000 இற்குக் கீழ் குறையும் போது நுரையீரலுக்குள் தண்ணீர் புகுந்து உயிராபத்து ஏற்படும். இந்நிலை ஏற்பட்ட பின்னர் சிகிச்சை அளித்து நோயாளியைக் காப்பாற்றுதல் மிகவும் கடினம்.

நோயைக் கணிப்பது எவ்வாறு?

சாதாரணமாக இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் குறையாது விட்டால், இரத்தப் பரிசோதனை செய்தல் வேண்டும். அதாவது இரத்தத்தில் சாதாரணமாக இருக்க வேண்டிய வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை மற்றும் plateletsP எனப்படும் குருதிச் சிறுதட்டுக்களின் எண்ணிக்கையை அளவிடுதல்.

டெங்கு வைரஸிற்கு எதிராக உடலிலே உற்பத்தியாகும் நோய் எதிர்ப்பு சக்தியைக் கண்டறியும் இரத்த நிணநீர் பரிசோதனை செய்தல். இந்தப் பரிசோதனையானது காய்ச்சல் ஏற்பட்டு 5 நாட்களின் பின்னரே செய்யப்படும்.

மேற்கூறப்பட்ட நோயைக் கண்டறியும் ஆரம்ப நிலைப் பரிசோதனைகளைத் தவிர, நோயின் நிலையைப் பொறுத்தும் மேலதிக பரிசோதனைகள் தேவைப்படுமிடத்து மேற்கொள்ளப்படும்.

தடுப்பு முறைகள்:

இதுவொரு வைரஸ் நோய் என்றபடியால் இந்த நோய்க்கும் திட்டமான மருந்துகள் எதுவும் இல்லை. ஆனால், அறிகுறிகளுக்கு ஏற்றவாறான சிகிச்சைகளை வழங்குவதன் மூலம், இந்த நோயின் ஆபத்தான கட்டங்களிலிருந்து இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

இரண்டு நாட்களுக்குப் பின்பும் காய்ச்சல் குறையாது விட்டாலும் அல்லது டெங்கு நோயின் ஆரம்ப நிலையைத் தாண்டி, அடுத்த நிலைகளுக்குரிய அறிகுறிகள் தென்பட்டாலும் உடனடியாக நோயாளி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

டெங்கு நோயாக இருக்கலாம் என்ற ஐயப்பாடு ஏற்பட்டால் கூட, செந்நிறம் அல்லது பிறவுண் நிறம் சார்ந்த மென்பானங்கள், கரட் மற்றும் பீட்றூட் போன்ற மரக்கறிகளையும் தவிர்க்க வேண்டும். இவை இந்த நோயோடு நேரடியாக சம்பந்தப்படா விட்டாலும் இவை தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில், நோயின் தாக்கம் கூடி இரத்தக் கசிவு ஏற்படுகின்ற போது, அதனை சரியாக இனம் கண்டு கொள்ள முடியாமல் போகும் என்பதனாலேயே அவை தவிர்க்கப்பட வேண்டும்.

நீர் தேங்கி நிற்கும் எல்லா இடங்களையும் சுத்தம் செய்து மண் அல்லது மணல் மூலம் நிரப்பி விட வேண்டும். கொங்கிரீட் கூரைகள், பீலிகள், கான்கள் போன்றவற்றிலுள்ள இலைகுழைகளை அகற்றி, நீர் தேங்குவதைத் தடுக்க வேண்டும். சூழலிலுள்ள தண்ணீர் தேங்கக் கூடிய சிரட்டைகள், போத்தல்கள், பொலித்தீன் பைகள் போன்றவற்றைப் புதைத்து அல்லது எரித்து விட வேண்டும்.

பாவிக்கக் கூடிய பாத்திரங்கள், வாளிகள் போன்றவற்றை கவிழ்த்து வைக்க வேண்டும். பூந்தொட்டிகள், பாத்திரங்கள் போன்றவற்றில் தேங்கி நிற்கும் நீரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாற்ற வேண்டும். குளிரூட்டிகளில் இருந்து வெளியேறும் நீரையும் மாற்ற வேண்டும். தண்ணீரை அகற்ற முடியாத இடங்களில் உப்பைச் சேர்த்து விடவும். தண்ணீர்த் தாங்கிகளில் வாளியை விட்டு நீர் எடுக்காத போது அங்கும் நுளம்புகள் பெருகலாம். எனவே, அதன் மூடியை ஒழுங்காக மூட வேண்டும். மூடி இல்லாத போது மெல்லிய வலையினால் மூட வேண்டும். பழைய டயர்களை அகற்றி புதைத்து விட வேண்டும்.

பாடசாலைகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற இடங்களில் - மக்கள் சங்கமிக்கும் இடங்களில் – பிரசாரம், கருத்தரங்குகள், துண்டுப் பிரசுரங்கள் போன்ற முறைகளைப் பயன்படுத்தி டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல் வேண்டும். சட்டத்தின் மூலம் இதனை சாதித்து விட முடியாது.

சமூக அக்கறையின் மூலமுமே இதனை சாதிக்கலாம்.

டொக்டர்
எம்.எம்.அல் அமீன் றிஸாத்
சுகாதார வைத்திய அதிகாரி,
சாய்ந்தமருது

Previous Post Next Post


Put your ad code here