எரிபொருள் விலையேற்றத்தை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையே தீர்மானித்ததாக எரிசக்தி அமைச்சர் தெரிவிப்பு..!!!


ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையின் அனுமதியுடனேயே எரிபொருள் விலையை அதிகரிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் எரிசக்தி அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

எரிசக்தி அமைச்சர் பதவி விலக வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் நேற்று (12) கோரிக்கை விடுத்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் எரிசக்தி அமைச்சர் இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.

அண்மையில் கூடிய வாழ்க்கைச் செலவு தொடர்பான உப குழு எரிபொருள் விலையேற்றத்தை தீர்மானித்ததாகவும் அவர் கூறினார்.

அந்தக் குழுவில் ஜனாதிபதி, பிரதமருடன் அமைச்சர்களான பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, டலஸ் அழகப்பெரும, நாமல் ராஜபக்ஸ, இராஜாங்க அமைச்சர் நிவாட் கப்ரால் ஆகியோரும் அங்கம் வகிப்பதாக உதய கம்மன்பில சுட்டிக்காட்டினார்.

ஆகவே, அரசாங்கத்தின் தீர்மானத்தையே தாம் அறிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தீர்மானங்களை விமர்சித்து குற்றமிழைத்துள்ளதாகவும், அவர் வெளியிட்ட அறிக்கைக்காக அவரே பதவி விலக வேண்டும் எனவும் உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.

Previous Post Next Post


Put your ad code here