கொரோனா தொற்று பரவும் வேகம் அதிகரிப்பதன் ஊடாகவே புதிய திரிபுகள் உருவாகின்றன. எனவே, இலங்கையில் பிரிட்டன் திரிபான பி.117 அல்பா திரிபு வேகமாக பரவுவதால் புதிய திரிபுகள் உருவாகுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
நாட்டில் புதிய திரிபுகள் இருக்கின்றதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் அறிக்கை சமர்ப்பித்ததன் பின்னர் அது குறித்து தெளிவூட்டம் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் கடந்த மாத்தில் கிடைக்கபெற்ற 96 மாதிரிகளுக்கு அமைய பிரிட்டன் திரிபான பி.117 அல்பா என்ற வைரஸ் 80 பேரிடம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அதன்படி மட்டக்களப்பு, திருகோணமலை, குளியாபிடிய, வாரியபொல, ஹபராதுவ, திஸ்ஸமாராம, இராகம பகுதிகளில் குறித்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா திரிபுடன் இரண்டாவது நபர் இலங்கை, வாத்துவ பகுதியில் கண்டறியப்பட்டுள்ளார். இந்தியாவில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த ஒருவருக்கே இந்த திரிபு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த மாதத்திலும் இந்தியா திரிபுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், இம் முறையும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். எனினும், இவர்கள் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டிந்தமையினால் இந்தியாவின் திரிபு சமூகத்திற்குள் நுழையவில்லை. மேலும், கடந்த காலத்தில் இலங்கையில் வேகமாக பரவிய பி.1411 என்ற இலங்கை திரிபுடன் திஸ்ஸராமய பிரதேசத்தில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பிரிட்டன் திரிபை கண்டறிவதற்கான விசேட பி.சி.ஆர் பரிசோதனையில் 460 மாதிரிகளிடம் பெறப்பட்ட ஆய்வுகளில் கண்டியிலும் பிரிட்டன் திரிபு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையில் இந்த அல்பா என்ற திரிபே தற்போது வேகமாக பரவிச் செல்கின்றது. குறிப்பாக, இலங்கை திரிவையும் தாண்டி பிரிட்டன் திரிபான அல்பாவே வேகமாக பரவிச் செல்கின்றன.
எனினும், எங்களுக்கு கிடைக்கும் மாதிரிகளுக்கு அமைய பிரிட்டன் திரிபு இருந்தாலும், இலங்கை முழுவதிலும் அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளர்களிடம் பி.117 அல்பா திரிவு மாத்திரமே இருக்கும் எனக் கூற முடியாது. நாட்டில் ஏனைய திரிபுகளும் இருக்கக் கூடும். இதனை நாங்கள் மறுக்க முடியாது.
திரிபுகளை கண்டறிவதற்கு முன்னெடுக்கப்படும் ஆய்வுகளை எதிர்வரும் மாத்தில் மேலும் வியாப்பதன் மூலம் இலங்கை முழுவதிலும் ஏனைய திரிபுகள் இருக்கின்றதா என்பதை கண்டறிய முடியும். ஆனால், தற்போது கிடைக்கப்பெற்ற மாதிரிகளுக்கு அடைய அல்பா திரிபே வேகமாக பரவுகின்றது. இது குறித்து நாங்கள் மிக அவதானமாக செயற்பட வேண்டும்.
தொற்று பரவுவதன் வேகம் அதிகரிப்பதன் ஊடாகவே புதிய திரிபுகள் உருவாகின்றன. எனவே, இலங்கையில் பிரிட்டன் திரிபான அல்பா வேகமாக பரவுவதால் புதிய திரிபுகள் உருவாகுவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.
ஆகவே, இலங்கையில் கொரோனா நோயாளர்கள் அதிக எண்ணிக்கையில் அடையாளம் காணப்படுவதால் திரிபுகளை கண்டறியும் ஆய்வுகளையும் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளோம். அதன்படி, எதிர்வரும் மாத்தில் அதிக எண்ணிக்கையிலான முடிவுகளை எங்களால் வெளியிட முடியும். இதற்காக அனைத்து பி.சி.ஆர் ஆய்வுக் கூடங்களிலிருந்தும் வாராந்தம் ஒரு தொகை மாதிரிகளை பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்திய திரிபு அடையாளம் காணப்பட்டவரிடமிருந்து சமூகத்திற்கு பரவுவதற்கு வாய்ப்பில்லை என்றாலும் இந்தியா இலங்கைக்கு அருகில் இருப்பதோடு, விமான நிலையங்களையும் தாண்டி வேறு வழியாகவும் இந்தியாவிலிருந்து வருகைத் தருவதால் இந்தியாவின் திரிபு எவ்வேளையிலும் இலங்கைக்குள் நுழைவதற்கு வாய்ப்புள்ளது என்றார்.