அச்சுறுத்தும் வல்வெட்டித்துறை கொத்தணித் தொற்று 113 ஆக அதிகரிப்பு..!!!


யாழ்ப்பாணம், வடமராட்சி பிராந்தியத்தை கொரோனா அபாயம் மெல்ல மெல்ல சூழ்ந்துள்ள நிலையில் வல்வெட்டித்துறை கொத்தணியில் தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க தலைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஆதிகோவிலடி கொத்தணி அடையாளம் காணப்பட்டிருந்தது.

வல்வெட்டித்துறையின் வேறு பகுதியிலும் தொற்றாளர்கள் தொடர்ந்து அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் தற்போது ஆதிகோவிலடி கொத்தணி வல்வெட்டித்துறை கொத்தணியாக விரிவடைந்துள்ளது.

ஆதிகோவிலடி கொத்தணியில் 88 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், நேற்றுமுன்தினம் வல்வெட்டித்துறையின் ஊரிக்காடு நாவலடி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அப்பகுதியைச் சேர்ந்த 07 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதேவேளை ஆதிகோவிலடி, நாவலடி ஆகிய பகுதிகளில் மேலும் பலர் தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறையின் ஆதிகோவிலடி, நாவலடி பகுதிகளைச் சேர்ந்த 18 பேருக்கு நேற்யை தினம்(ஜூலை-17) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வல்வெட்டித்துறை கொத்தணியில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அச்சுறுத்தலாக மாறியுள்ள வல்வெட்டித்துறை கொத்தணி தொற்று மேலும் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்தனர்.
Previous Post Next Post


Put your ad code here