நடிகர் விஜய் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரினால் சர்ச்சையில் சிக்கி தவித்து வருகின்றார்.
நடிகர் விஜய் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி கட்டாமல், வழக்கு கோரியிருந்தார். இவ்வழக்கின் தீர்ப்பினை கடந்த வாரத்தில் நீதிமன்றம் வெளியிட்டது.
அப்போது நுழைவு வரியை ரத்து செய்ய கோரிய வழக்கில் 1 லட்சம் ரூபாய் அபராதமும், சில விமர்சனங்களையும் வைத்து நீதிபதி அறவுறுத்தியுள்ளனர். இந்த உத்தரவினை விஜய் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
அதில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு நுழைவு வரி விலக்கு அளிக்க கோரி பல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் விலக்கு கோரியதாகவும், இந்தியாவுக்குள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு மதிப்புக்கூட்டப்பட்ட வரி செலுத்தாமல் காரை கொண்டு செல்லவே நுழைவு வரி விதிக்கப்படுகிறது என்பதாலும் விலக்கு கேட்டதாக விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டில் மேலும் அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும், தன்னை பற்றி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
தனி நீதிபதியின் தீர்ப்பு நகல் இல்லாமல், இந்த மேல்முறையீட்டு மனுவை எண்ணிட்டு விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிடக் கோரியும் விஜய் தரப்பில் கூடுதல் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.என்.மஞ்சுளா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வரி தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் உரிய அமர்வுக்கு மாற்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.
இதனை தொடர்ந்து, விஜய் தரப்பின் மேல்முறையீடு மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, ஆர்.ஹேமலதா அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:
cinema news