உலக கால்பந்தாட்ட போட்டியில் “வலிமை ”அப்டேட் கேட்கும் ரசிகர்..!!!


உலகம் முழுவதும் வலிமை படம் திரையிடல், பிற உரிமைகள் மூலம் மொத்தமாக 500 கோடி ரூபாய் வரவு- செலவு கணக்காக வரும். கண்மூடித்தனமாக சினிமா நடிகனை கடவுளாகவும், தலைவனாகவும் நினைத்து வழிபடக்கூடிய கலாச்சாரம் தமிழகத்தில் வளமாக இருக்கிறது.

அதனால்தான் எதை எங்கு கேட்க வேண்டும் என்கிற குறைந்தபட்ச புரிதலும்,நாகரிகமும் இல்லாமல் அஜித்குமார் ரசிகர்கள் செயல்படுகின்றனர் என்கிற குற்றசாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் 'வலிமை' படத்தின் அப்டேட் வேண்டுமென்று அஜித்குமார் ரசிகர்கள் பலவிதமான இடங்களில் குரல் எழுப்பியும், பேனர்களைப் பிடித்தும் கேட்டு வருகிறார்கள்.

பாரதப் பிரதமர் சென்னை வந்த போதும், இந்திய, இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி நடைபெற்ற போதும் என பல சந்தர்ப்பங்களில் இந்த 'வலிமை அப்டேட்' எதிரொலித்தது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பிரச்சார சமயத்தில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தேர்தல் முடிந்த பின் வலிமை அப்டேட் வெளியிடப்படும் என கூறி தனக்கு சாதகமாக அஜித்குமார் ரசிகர்களை பயன்படுத்த முயற்சித்தார்.

ஆனாலும், படக்குழுவினர் இன்னும் அந்த அப்டேட்டை சொல்லாமல் சிதம்பர ரகசியம் போன்று மெளனம் காத்துவருகின்றனர். இந்நிலையில் தற்போது நடந்து வரும் யூரோ கால்பந்தாட்டப் போட்டியில் வெம்ப்லியில் நடைபெற்ற ஒரு போட்டியில் அஜித் ரசிகர் ஒருவர் 'வலிமை அப்டேட்' கேட்டு பேனர் பிடித்துள்ளார்.

இதனால் வலிமை படத்திற்கு ஊடகங்களில் இலவச விளம்பரம் கிடைக்கலாம், பரபரப்பான செய்திகளுக்கு கச்சா பொருளாகலாம். ஆனால் திரைப்படத்தை பொழுதுபோக்கு, அறிவு சார்ந்த ஊடகமாக மதிக்கின்ற கோடிக்கணக்கானவர்கள் மத்தியில் அஜித்குமார் ரசிகர்களால் தமிழகம் அவமானப்பட்டு வருவதை எப்போது புரிந்துகொள்ள போகிறார்களோ.
Previous Post Next Post


Put your ad code here