Monday 27 September 2021

முகச்சவரம் செய்ய தலிபான்கள் தடை..!!!

SHARE

ஆப்கானிஸ்தானின் ஹெல்மான்ட் மாகாணத்தில் தாடியை நீக்குவது அல்லது குறைப்பதற்கு சிகை அலங்கார நிலையங்களுக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர். இது அவர்கள் கூறும் இஸ்லாமிய சட்ட வரையறைகளுக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று தலிபான் மதப் பொலிஸ் தெரிவித்துள்ளது.

இது போன்ற உத்தரவு தமக்கும் கிடைத்திருப்பதாக தலைநகர் காபுலில் முடி திருத்துபவர்கள் தெரிவித்துள்ளனர்.

“தாடியை குறைப்பதை நீறுத்தும்படி போராளிகள் தொடர்ந்து வந்து எமக்கு உத்தரவளிக்கிறார்கள்” என்று காபூலில் உள்ள முடிதிருத்துபவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். “கண்காணிப்பதற்கு ரகசிமாக ஆட்களை அனுப்பி அவ்வாறு செய்பவர்களை பிடிப்பேன் என்று அதில் ஒருவர் என்னை எச்சரித்தார்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கட்டுப்பாடு, தலிபான்களின் கடும்போக்கான ஆட்சி மீண்டும் அமுலுக்கு வரும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் மிதவாதப் போக்குடன் ஆட்சி நடத்தப்போவதாக அந்தக் குழு முன்னர் வாக்குறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1996 தொடக்கம் 2001 வரை தலிபான்கள் ஆட்சியில் இருந்தபோது ஆடம்பரமான சிகை அலங்காரங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததோடு ஆண்கள் தாடி வளர்ப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

எனினும் தலிபான்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின் தாடியை முழுமையாக நீக்குவது மற்றும் நவீன சிகை அலங்காரங்கள் ஆப்கானில் பிரபலமடைந்தது.தலிபான்கள் நடத்தும் ஆட்சியில் தொடர்ந்து ஏராளமான மனித உரிமை மீறல்கள் நடந்துவருவதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள், ஐ.நா., யுனெஸ்கோ போன்றவை கண்டித்து வருகின்றன .
SHARE