Tuesday 19 October 2021

நமீபியாவை வீழ்த்தி சூப்பர் 12 சுற்றை அடைய ஒரு படி முன்னேறிய இலங்கை..!!!

SHARE

நமீபியாவுடன் இடம்பெற்ற டி-20 உலகக் கிண்ண ஆட்டத்தில இலங்கை அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்று, சூப்பர் 12 சுற்றை அடைய ஒரு படி முன்னேறியுள்ளது.

2021 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத் தொடரில் நேற்று இடம்பெற்ற நான்காவது போட்டியின் தகுதிச் சுற்றில் இலங்கை - நமீபியா அணிகள் மோதின.

இந்த ஆட்டம் நேற்றிரவு 7.30 மணிக்கு அபுதாபியில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்க‍ை அணியானது முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை நமீபியாவுக்கு வழங்கியது.

தலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய நமீபியாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஸ்டீபன் பார்ட் - ஜேன் கிரே ஆகியோர் மகீஷ் தீக்ஷனாவின் சுழலில் சிக்கி குறைந்த ஓட்டத்துடன் வெளியேறினர்.

இதனால் நமீபியாவின் முதல் இரு விக்கெட்டுகளும் 29 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.

பின்னர் கிரேக் வில்லியம்ஸ் மற்றும் அணித் தலைவர் ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் ஆகியோர் மூன்றாவது விக்கெட்டுக்காக கைகோர்த்து விக்கெட்டுகளை பாதுகாத்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

எனினும் அவர்களினாலும் ஒரு கட்டத்துக்கு மேல் இலங்கை அணியின் பந்து தாக்குதலுக்கு முகங்கொடுக்க முடியவில்லை.

12.2 ஆவது ஓவரில் ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் லஹிரு குமாரவின் பந்து வீச்சில் 20 ஓட்டங்களுடன் ஹசரங்கவிடம் பிடிகொடுக்க, 13.3 ஆவது ஓவரில் கிரேக் வில்லியம்ஸ் 29 ஓட்டங்களுடன் ஹசரங்கவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

ஒரு கட்டத்தில் 13.3 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 74 ஓட்டங்கள் என்ற நிலையிலிருந்து நமீபியா இறுதியாக 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

97 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 5.1 ஆவது ஓவரில் 26 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.

(குசல் பெரேரா 11, பதும் நிஷாங்க 5, சந்திமால் 5)

எனினும் நான்காவது விக்கெட்டுக்காக பானுக ராஜபக்ஷ - அவிஷ்க பெர்னாண்டா கைகோர்த்தாட பவர் - பிளேயான ஆறு ஓவர்கள் நிறைவில் 37 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது இலங்கை.

பின்னர் ஓட்டக் குவிப்பில் பானுக ராஜபக்ஷ தீவிரம் காட்ட இறுதியாக 13.3 ஓவர்களில் 100 ஓட்டங்கள‍ை பெற்று வெற்றியிலக்கை கடந்தது இலங்கை.

பானுக ராஜபக்ஷ 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கலாக 42 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ 28 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 30 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டனர்.

இந்த வெற்றிக்கான முழுப் புகழும் இலங்கை பந்துவீச்சாளர்களுக்கே இருந்தது. முதல் ஓவரை வீசிய சாமிக கருணாரத்ன முதல், ஒவ்வொரு பந்து வீச்சாளரும் தனது கடமையை முழுமையாக செய்து, குறைந்த ஸ்கோருக்குள் எதிரணியினரை கட்டுப்படுத்தினர்.

மகீஷ் தீக்ஷனா 3 விக்கெட்டுகளையும், ஹசரங்க, லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், கருணாரத்ன, துஷ்மந்த சமீர ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

டி-20 உலகக் கிண்ணத்தில் இலங்கையின் அடுத்த போட்டி அயர்லாந்துக்கு எதிராக நாளை அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறும்.

இந்த போட்டியிலும் இலங்கை வெற்றி பெற்றால் சூப்பர் 12 சுற்றை அடைந்து விடும்.
SHARE