வடக்கு மாகாண மருத்துவமனைகளுக்கு புதிதாக 253 மருத்துவ உத்தியோகத்தர்கள் நியமனமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
வடமாகாணத்தில் நீண்ட காலமாக மருத்துவ உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவி வந்தது. குறிப்பாக பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மருத்துவமனைகளில் மிக மோசமான பற்றாக்குறை காணப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி நாடுமுழுவதும் ஒரு தொகுதி மருத்துவ உத்தியோகத்தர்களுக்கு புதிதாக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நியமனத்தில் வடமாகாணத்திற்கு 253 மருத்துவ உத்தியோகத்தர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு 62 மருத்துவ உத்தியோகத்தர்களும், வடமாகாண சுகாதார திணைக்களத்தின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளுக்கு 191 மருத்துவ உத்தியோகத்தர்களும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார திணைக்களத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளுக்கு 57 பேரும், கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைகளுக்கு 28 பேரும், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளுக்கு 24 பேரும், மன்னார் மாவட்ட மருத்துவமனைகளுக்கு 35 பேரும், வவுனியா மாவட்ட மருத்துவமனைகளுக்கு 47 பேரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.