Wednesday 13 October 2021

பிக்பாஸ் 5 : 10ம் நாள் | லைக்கும், டிஸ்லைக்கும், பின்னே சில கொசுக்களும்... நாராயணா தாங்கமுடியல நாராயணா..!!!

SHARE


“ஏய்யா யோவ்… அப்பேர்ப்பட்ட சின்னப்பொண்ணுவின் கண்ணீர் கதைக்கே டிஸ்லைக் போட்ட ஆளு நீயி... அதுக்கு இம்மாம் நீளத்துக்கு லாஜிக் விளக்கம் சொன்னே... இந்தப் பொண்ணு சொன்னதுல ஒரு மண்ணும் இல்ல. அப்புறம் எப்படி லைக் போடலாம்? ஒரு ஆளு பிடிக்கும்ன்றதால லைக் போடுவியா?”

பிக் பாஸ் பிழைக்கத் தெரிந்தவர். ஒருவர் தலைவராகி விட்டால் அவரை துதி பாடி குளிர வைக்க வேண்டும் என்கிற விஷயத்தை தெரிந்து வைத்திருக்கிறார். எனவே புதிய தலைவரான தாமரையின் பெயர் வரும்படியாக ஒரு பாடலை தேடி யோசித்து காலையில் ஒலிபரப்பினார். “ஒரு சின்ன தாமரை...’ என்று ஒலித்த பாடலுக்கு எவ்வித ஒழுங்குணர்ச்சியும் இல்லாமல் ‘ஆவியெழுப்புதல்’ கூட்டத்தில் அலறி துடித்து விழும் ஆசாமிகளைப் போலவே ஆங்காங்கே அவரவர் இஷ்டத்துக்கு ஆவேசமாக அசைந்து கொண்டிருந்தார்கள்.

“நீ போர்வையை மடிக்காம வந்துட்டே... நான்தான் மடிச்சு வெச்சேன்” என்று ராஜூவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் தலைவர் தாமரை. “அதான் மடிச்சி வெச்சிட்டல்ல... அப்புறம் என்ன?’’ என்று எகத்தாளமாக பதில் சொன்னார் ராஜூ. பின் பென்ச் மாணவன் போல் கண்ணைத் திறந்து கொண்டே சாமர்த்தியமாக தூங்கி வழிந்து கொண்டிருந்தார் பிரியங்கா. பிக்பாஸ் வீட்டு நாய் இதை உஷாராக கண்டுபிடித்து காட்டிக் கொடுத்து விட்டது. அப்போது அங்கு வந்த தாமரை “எழுந்து போய் பாத்திரம் விளக்குங்க” என்று வேலை கொடுக்க, பிரியங்கா சற்றும் அசையாமல் “இமானை விளக்கச் சொல்லுங்க” என்று அலட்சியமாக பதில் சொன்னார். இதிலிருந்து தெரிய வரும் நீதி என்ன?

ஒருவர் அடிப்படையில் நல்லவராகவே இருக்கலாம். ஆனால் அதிகாரம் அவரிடம் சென்றால் நிர்வாகம் நாறிவிடும். தலைமைப் பண்பு உள்ளவர்களிடம் அதிகாரம் சென்றால்தான் பணிகள் சிறப்பாக நடக்கும். இத்தகைய ஆளுமை ஒரு தலைவருக்கு அடிப்படைத் தேவை. ஒரு தலைவர் நல்லவராக மட்டும் இருந்தால் போதாது, வல்லவராகவும் இருக்க வேண்டும் என்பதே இதில் ஆதாரமாக கவனிக்க வேண்டிய விஷயம். இந்த நோக்கில் தாமரையை அங்கு பலரும் டபாய்க்கிறார்கள். இது முன்பே நாம் யூகித்த விஷயம்தான்.

 
‘இதற்கெல்லாம் எப்படி இவர்களுக்கு நேரம் கிடைக்கிறது?’ என்று நாம் ஆச்சாயப்படும்படி, சமூக வலைத்தளங்களில் தங்களின் பதிவுகளுக்கு வரும் விருப்பக்குறிகளை வைத்து சிலர் பெரிய ஆராய்ச்சியே நடத்திக் கொண்டிருப்பார்கள். “என் பதிவுக்கு லைக் போடலை. ஆனா அங்க போய் ரெண்டு குத்து குத்தியிருக்கே?” என்று யாரையாவது இழுத்து குடுமிப்பிடிச்சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். லைக் கலாசாரத்தின் வலிமை அத்தகையதாக மாறி வருகிறது. வருங்காலத்தின் பாடத்திட்டத்தில் ‘லைக் அரசியல்’ என்று தனிப்பிரிவு வந்தாலும் வரலாம். (சமூகவலைத்தளங்களில் ‘டிஸ்லைக்’ என்கிற ஆப்ஷன் ஏன் இல்லை என்பதை யோசித்துப் பாருங்கள்.)

ஆனால் இந்த டிஸ்லைக் ஆப்ஷனை பிக்பாஸ் வீட்டில் கொண்டு வந்து ரத்தபூமியின் உக்கிரத்தை அதிகப்படுத்த முயல்கிறார்கள். இந்த விஷயத்தில் ராஜூ என்பவர் முன்னோடியாக இருக்கிறார். தான் ஏன் ஒருவருக்கு ‘டிஸ்லைக்’ போடுகிறேன் என்பதை ‘‘அதுல பார்த்தீங்கன்னா…’’ என்று ஆரம்பித்து இவர் தரும் லாஜிக் விளக்கம் இருக்கிறதே..! ராஜூ பாக்யராஜின் மாணவர் என்பது உண்மைதான். அப்படிப்பட்ட விளக்கம். “மேயற மாட்டைக் கெடுத்த மாடு’ என்கிற பழமொழி இருக்கிறது. அப்படியாக ராஜூவின் டிஸ்லைக் கலாசாரத்தால் கவரப்படுபவர்கள் அதையே பின்பற்ற ஆரம்பித்து விடுகிறார்கள்.

‘கதை சொல்லட்டுமா?’ டாஸ்க்கில் (இன்னமும் இது முடியலையா... பாஸ்?!) அக்ஷரா பேசத் தொடங்கினார். இந்த டாஸ்க்கில் செயற்கை உருக்கத்துடன் எதையாவது சொல்லி பார்வையாளர்களின் கண்ணீரைப் பிடுங்கி விட வேண்டுமென்கிற ஆவேசத்துடன் சிலர் செயல்படுகிறார்கள். இது தேவையில்லாத ஆணி. இயல்பாக சொன்னாலே போதும்.

அக்ஷரா தன் குடும்பத்தால் செளகரியமாக வளர்க்கப்பட்டவர். அவர்களின் தியாகங்கள் காரணமாக ஒரு ‘Comfort Zone’-ல் சொகுசாக வாழ்ந்தவர். வெளியுலகத்திலிருந்து வரும் ஒரு சிறிய எதிர்ப்பு கூட இவரை கலங்கச் செய்து விடும். எனவே இந்த சொகுசு மனநிலையை தானே உடைத்தெறிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்திருக்கிறார். இதுதான் அக்ஷரா சொல்ல வந்த கதை. இதை ஓரளவுக்கு இயல்பாக அவர் சொன்னாலும் தன் அப்பா இறந்த சம்பவத்தை மட்டும் சற்று நாடகத்தனமாக இழுத்தார். இது வலிந்து திணிக்கப்பட்ட சோக வயலினாக இருந்தது.

 
‘’நான் அழகிப் போட்டிகளில் வென்றிருக்கிறேன். எவரும் செல்லாத இடத்தில் இந்திய பிரதிநிதியாக சென்று வென்றிருக்கிறேன்’’’ என்று அக்ஷரா சொன்ன போது அதுவரை செயற்கையான அமைதியுடன் பல்லைக் கடித்துக் கொண்டு இருந்த சபை, மெளனம் கலைந்து தன்னிச்சையாக கைதட்டியது. ஆக... ஒருவரின் ‘அழுகாச்சி’ கதையை விட அவரின் திறமைக்கும் சாதனைகளுக்கும்தான் உண்மையான பாராட்டு கிடைக்கும் என்பது நிரூபணம் ஆயிற்று.

அக்ஷராவின் பேச்சுக்கு பல லைக்குகள் விழுந்தாலும் பிரியங்கா, நிரூப், அபிஷேக் போன்றவர்கள் டிஸ்லைக் தந்தார்கள். “நீ comfort zone-ல இருந்து வெளியே வரணும்னு விரும்புறே இல்லையா... அந்த இலக்கை நோக்கி உன்னை வேகமா தள்ளும் நல்ல நோக்கத்தில்தான் இதைச் செய்தேன்” என்று விளக்கம் அளித்தார் பிரியங்கா. ஒருவேளை உள்குத்தாக இருந்தாலும் இது சரியான விளக்கம்தான்.

நமது டிஸ்லைக் நாயகர் ராஜூ எழுந்து வரும் போது ‘அவர் என்ன செய்யப் போகிறார்?’ என்பதை உலகமே உற்றுக் கவனிக்க ஆரம்பித்தது. ஆனால் நமது ரைட்டர்தான் எதையும் வித்தியாசமாக செய்யும் ஆசாமி ஆயிற்றே?! அக்ஷராவை இவருக்கு பிடிக்கும் போல. டிஸ்லைக் பட்டனைக் கண்டால் அக்ஷரா கண்கள் தன்னிச்சையாக கலங்கும் என்பது ராஜுவுக்குத் தெரியும். எனவே “நீங்க சொன்ன கதைல ஒரு நேர்மை இருந்தது” என்று சொல்லி லைக் பட்டனை அவர் அழுத்த உலகம் ஸ்தம்பித்துப் போனது.

“ஏய்யா யோவ்… அப்பேர்ப்பட்ட சின்னப்பொண்ணுவின் கண்ணீர் கதைக்கே டிஸ்லைக் போட்ட ஆளு நீயி... அதுக்கு இம்மாம் நீளத்துக்கு லாஜிக் விளக்கம் சொன்னே... இந்தப் பொண்ணு சொன்னதுல ஒரு மண்ணும் இல்ல. அப்புறம் எப்படி லைக் போடலாம்? ஒரு ஆளு பிடிக்கும்ன்றதால லைக் போடுவியா?” என்பது போல் பிரியங்கா டீம், ராஜூவை நிற்க வைத்து நறுக்கென்று நாலு கேள்விகள் கேட்க ரைட்டர் பயங்கரமாக குழம்பிப் போனார்.

 
தனக்கு எதிராக டிஸ்லைக் விழுந்தால் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தள்ளிச் சென்று தனிமையில் அழுவது அக்ஷராவின் நிரந்தர வழக்கம். இதை ஏதோ காணக்கிடைக்காத காட்சி போல மெளனப்படமாக முழம் நீளத்திற்கு காட்டித் தொலைப்பதும் பிக்பாஸின் ஒரு கெட்ட வழக்கம். எனவே அக்ஷரா மூலையில் நின்று மூசுமூசுவென்று கலங்குவதை ‘அவார்டு படம்’ மாதிரி மெளனப் பின்னணயில் நெடுநேரம் காட்டிக் கொண்டிருந்தார்கள். (இன்னாடா... அவார்டா கொடுக்கறாங்க?’’ மொமன்ட்?!).

ஏற்கெனவே சொன்னதுதான். தன்னைப் பற்றிய தெளிவான சுயபரிசீலனை அக்ஷராவிடம் இருக்கிறது. செளகரியமான மனநிலையில் இருந்து வெளியே வந்து யதார்த்த உலகத்தைச் சந்திக்க வேண்டும் என்பதற்காகத்தான் பிக்பாஸ் வீட்டுக்கு அவர் வந்திருக்கிறார். எனவே தன் மீதான எதிர்ப்புகளையும் அவர் அச்சமின்றி சந்திக்கத்தான் வேண்டும். சபையில் புன்னகைத்து விட்டு தனிமையில் சென்று அழுவது, அவர் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்பதையே காண்பிக்கிறது. (இது ரத்தபூமி மேடம். இங்க சோத்துல கூட சண்டையைக் கலந்து சாப்பிடணும்... வம்பை சைட்டிஷ்ஷா வெச்சு மெல்லணும்!).

அடுத்ததாக ‘கதை சொல்ல’ வந்தார் பிரியங்கா. சிலர் தங்களின் சோகத்தை ‘இயல்பாக சொல்கிறேன் பேர்வழி’ என்று செயற்கையான ஜாலியுடன் சிரித்து சொல்லி விட்டுச் செல்வார்கள். கண்ணீர் விட்டு பேசினால் கிண்டலுக்கு ஆளாக நேரிடும் என்பதும் ஒரு காரணம். ‘இவரின் பேச்சு அப்படியாக இருந்து விடுமோ’ என்று முதல் தோன்றியது. ஆனால் பிரியங்காவின் பேச்சு இயல்பான நகைச்சுவையுடனும் அதே சமயத்தில் அவசியமான தீவிரத்துடனும் இருந்தது.

ஏறத்தாழ அக்ஷராவின் கதைதான் பிரியங்காவுடையதும். ஆனால், சாதாரண நடுத்தர வாழ்க்கை. குடும்பத்தாரின் செல்ல பராமரிப்பில் சொகுசாக வளர்ந்த குழந்தைதான் பிரியங்கா. ஆனால் அப்பாவின் மரணத்தின் போது நிகழ்கின்ற ஒரு விஷயம் பிரியங்காவின் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. அதுதான் அவரது பேச்சின் மையப்புள்ளி. பிரியங்காவின் அப்பா ரயில் பயணத்தின் போது உடல்நலக்குறைவினால் இறந்து விட கூட இருந்த பயணிகள் யாருமே கண்டுகொள்ளவில்லையாம். ‘ஒருவர் உதவி செய்ய முன் வந்திருந்தால் கூட அவர் காப்பாற்றப்பட்டிருக்கலாம்’ என்கிற நிலைமை. இந்தச் சம்பவத்தை பின்னர் வாய்மொழியாக கேட்ட பிரியங்காவின் மனதில் இது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 
“யாராவது அசெளகரியமா இருந்தா அவங்களை comfort zone-க்கு கொண்டு வர்றதுதான் என் லட்சியம்” என்று பிக்பாஸ் வீட்டுக்கு வந்த முதல் நாளே சொன்னார் பிரியங்கா. இப்போதும் அதையேதான் சொன்னார். “என் பேச்சு பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க. கமென்ட் பண்ணுங்க... சப்ஸ்கிரைப் பண்ணுங்க” என்று ஜாலியான பின்குறிப்புடன் முடித்துக் கொண்டார்.

பிரியங்காவின் பேச்சுக்கு வருண் டிஸ்லைக் இட்டார். பிரூவின் நெருக்கமான நண்பரான நிரூப்பும் டிஸ்லைக் போட்டு விட்டு “கேக்கறதுக்கு நல்லா இருந்தது. ஆனா பெரிசா இம்ப்ரஸ் ஆகலை’’ என்கிற காரணத்தைச் சொன்னார்.

லைக் அரசியலில் டாக்டரேட் முடித்திருக்கும் ராஜூ அடுத்ததாக எழுந்த வர, தன்னுடைய அத்தனை வேலைகளையும் தள்ளி வைத்து விட்டு மறுபடியும் உலகம் அவரை உற்று கவனிக்கத் தொடங்கியது. இந்த முறை ரிவர்ஸ் கியர் போட்டு ‘டிஸ்லைக்’ பட்டனை அழுத்திய ராஜூ, “என் பேச்சுக்கு லைக் போட்டவங்களுக்கு லவ் தருவேன். பிடிக்காதவங்களுக்கு எக்ஸ்ட்ரா லவ் தருவேன்-ன்னு சொன்னீங்க. எனக்கு உங்க கிட்ட இருந்து நிறைய அன்பு வேணும். அதனாலதான டிஸ்லைக் போட்டேன்” என்று கோக்குமாக்கு விளக்கம் அளித்தார். (நாராயணா! இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலடா!). “நீ இப்பத்தான் நார்மல் மனுஷன் ஆயிருக்கே!” என்று பிறகு சான்றிதழ் தந்தார் பிரியங்கா.

“என் வாழ்க்கையில் எந்தக் குறிக்கோளும் இல்லை. லட்சியமும் இல்லை. அது இழுத்துச் செல்லும் பாதையில் போகிறேன்-னு சொன்னீங்க. எனக்கு அது சரியாப்படல. என்னைப் போன்ற பல மாடல்களுக்கு நீங்கதான் ரோல் மாடல். நீங்க இப்படிப் பேசலாமா?” என்று டிஸ்லைக் காரணம் சொன்னார் ஐக்கி பெர்ரி. “இதுதான் உன் இலக்கு.. அதை நோக்கி ஓடு... ஆவேசமாக ஓடு... லட்சியத்தை நோக்கி ஓடு” என்பதெல்லாம் பொருளியலை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ சமூகம் நமக்கு ஆவேசமாக கற்றுத் தரும் பாடம். ஆட்டு மந்தைகள் மாதிரி எல்லோருமே ஒரு திசையில் ஓட வேண்டியதில்லை.

‘இலக்கு எதுவுமில்லாமல் நதி மேல் இலை மாதிரி அதன் திசையில் சென்று கொண்டிருப்பதில் ஒரு பாவமும் இல்லை. அந்த மாதிரியான சுதந்திர வாழ்க்கையும் ஒரு மாதிரியான அழகுதான். “ஏர்ஹோஸ்டஸ் ஆகணும்னு ஆசைப்பட்டேன். முடியல. தொகுப்பாளர் வேலை கிடைச்சது. எனக்கு இது பிடிச்சிருக்கு. செய்யறேன்” என்று பிரியங்கா இயல்பாகச் சொன்னதில் பிழையேதுமில்லை.


என்னதான் இயல்பாக பேசிச் சென்றாலும் தன் அம்மாவின் தியாகம் நினைவுக்கு வந்தப்பிறகு கிச்சன் பக்கத்தில் நின்று கலங்கிக் கொண்டிருந்தார் பிரியங்கா. அது ஆனந்தக் கண்ணீராம்.

 
அடுத்து கதை சொல்ல வந்தவர் ‘சீரியஸ் முகம்’ சிபி. இவரும் பெற்றோரின் செல்ல பராமரிப்பில் சொகுசாக வளர்ந்தவர்தான். “எனக்கு ரோடு கூட கிராஸ் பண்ணத் தெரியாது. கெட்ட வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது” என்று அப்பாவியாக வாழ்ந்தவர், ஒரு கட்டத்தில் அட்டகத்தி ஹீரோ மாதிரி எதிர்திசைக்கு மாறுகிறார். “சிபியா... அய்யய்யோ... அவரு பயங்கரமான ஆளாச்சே?!” என்று ஏரியாவே அலறும்படி சொல்ல வைக்கிறார். “நீ எது செஞ்சாலும் அது சூப்பர்பா’ என்று என்று நிரந்தர ஆதரவு தரும் பெற்றோர்கள் இருக்கவே லண்டன் வேலையை விட்டு விட்டு சினிமாவில் நடிக்க சென்னை வந்து விட்டார். நண்பர்கள் உதவியுடன் ‘வஞ்சகர் உலகம்’ என்ற படத்தில் ஹீரோ. லோகேஷ் கனகராஜ் தந்த வாய்ப்பில் ஹீரோவின் பின்னால் இரண்டு சீன்கள் என்று வாழ்க்கை போய்க் கொண்டிருந்தாலும் இன்னமும் சரியான வாய்ப்பு அமையவில்லை.

“இளைஞர்களின் கனவுகளை நம்புங்க. பெற்றோர்கள், நண்பர்கள், சாதனை செய்த முன்னோடிகள்... இளைஞர்களை நம்பி அவங்களுக்கு வாய்ப்பு கொடுங்க” என்ற செய்தியுடன் இயல்பாக தன் பேச்சை முடித்துக் கொண்டார் சிபி.

ராஜூ பாய் எழுந்து வந்தார். ‘இவன் தொல்லை தாங்கலையே’ என்கிற சலிப்புடன் உலகம் இப்போது அசுவாரசியமாக அவரை கவனிக்கத் தொடங்கியது. “சிபி... உங்க கேரக்டர் எனக்குத் தெரியும். நேர்மையா இருந்தாதான் உங்களுக்குப் பிடிக்கும். எனவே டிஸ்லைக் தர்றேன். நீங்க சொன்ன கதை சுவாரசியமா இல்லை” என்று விளக்கம் அளித்தார் ராஜூ. (நாராயணா!). “ராஜூ பாய்தான் என் முன்னோடி. அவருடைய பாதையை பின்பற்றி நானும் டிஸ்லைக் தர்றேன்” என்று பின்பாட்டு பாடினார் அபிஷேக். (இந்த எபிசோடைப் பார்த்து விட்டு டிஸ்லைக் பட்டனை சேர்க்கலாமான்னு பேஸ்புக் மார்க் இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறார் என்று ஒரு தகவல் வந்திருக்கிறது!).

தாமரை தலைவராகி விட்டதாலோ என்னமோ அவரிடம் இணக்கமாக பேசிக் கொண்டிருந்தார் அக்ஷரா. “நீங்க சில விஷயங்களை தெரிஞ்சி பேசறீங்களா தெரியாம பேசறீங்களான்னு எனக்குத் தெரியல. அதனாலதான் எதுக்கு வம்புன்னு ஒதுங்கிப் போயிட்டேன்” என்று அக்ஷரா விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். (இனிமேலும் டிஸ்லைக் வாங்கினா உடம்பு தாங்காது!). “இல்லத்தா... நான் யதார்த்தமாதான் பேசினேன். கருவாச்சின்னு என்னையேதான் நான் சொல்லிக்கிட்டேன்” என்று தாமரை தன் தரப்பு விளக்கத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார். தாமரையின் ‘லைக்கை’ அக்ஷரா பெற்று விட்டது போல்தான் தெரிகிறது. பார்ப்போம்.

‘கதை சொல்லட்டுமா’ டாஸ்க் ஒட்டுமொத்தமாக முடியும் வரை, இந்த பிக்பாஸ் கட்டுரையை நிறுத்தி வைக்கலாம் என்று யோசிக்கிறேன். முடியல நாராயணா!

- விகடன்-
SHARE