Saturday 16 October 2021

பிக்பாஸ் 5 : 13ம் நாள் | ஸ்கோர் செய்த பாக்யராஜ் சிஷ்யன் ராஜூ, `ஸ்டொமெக் பர்னிங்’ அபிஷேக், அரங்கேறிய நாடகம்..!!!

SHARE


‘பெஸ்ட்’ என்கிற பிரிவில் பெரும்பாலோனோர் ராஜூவின் பெயரைச் சொன்னார்கள். தனது காமெடி சென்ஸால் மனிதர் நிறைய பேரைக் கவர்ந்திருக்கிறார் போல. ‘வொர்ஸ்ட்’ கேட்டகிரியில் சின்னப்பொண்ணுவின் பெயர் முதலில் இறுதி செய்யப்பட்டது.

“சொன்னபடி கேளு... மக்கர் பண்ணாதே... என்னுடைய ஆளு... இடைஞ்சல் பண்ணாதே" பாடலுடன் பொழுது விடிந்தது. தலைவி தாமரைக்கு ஆதரவான பாடலை பிக் பாஸ் தேர்ந்தெடுத்து ஒலிபரப்பினார் போலிருக்கிறது. (ஆனால், ஒன்று சொல்ல வேண்டும், குத்துப் பாடலைக் கூட எரிச்சல் வராமல் கவிதை மாதிரியாக கேட்க வைக்கக் கூடியவர் இளையராஜா மட்டுமே!)

சமையல் செய்யும்போது பாவ்னியின் கையில் சூடு பட்டுவிட்டது போல. அபினய் கரிசனத்துடன் வந்து பிளாஸ்திரி இட்டுவிட்டார். (ஆர்மிக்காரர்கள் வருத்தமும் கோபமும் ஒருசேர அடைந்திருப்பார்கள்). “யாரு தெரியுமா. அவன்தான்...” என்று நிரூப்பிடம் ரகசியமாக சைகையில் ஏதோ வம்பு பேசிக் கொண்டிருந்தார் பிரியங்கா. கேமரா தன்னை கவனிக்க வேண்டும்; அதே சமயத்தில் தன் மீது தவறான இமேஜ்ஜூம் விழக்கூடாது என்கிற கவனம் பிரியங்காவிடம் இருக்கிறதோ என்று தோன்றகிறது.

 
“சனிக்கிழமை wild entryஆக ஒரு பெண் வந்தால் நன்றாக இருக்கும்” என்பது நிரூப்பின் நேயர் விருப்பம். “உங்களுக்கு எப்படிப்பட்ட பெண் வேணும்?” என்று மணமாலை நிகழ்ச்சிபோல பிரியங்கா விசாரிக்க, “கண்ணுக்கு லட்சணமா இருக்கணும். நாலு பேர் பார்த்து பொறாமை படணும்.” என்று பட்டியல் இட்டுக் கொண்டிருந்தார் நிரூப். (விஜய் டிவி ராமர் ஒருவேளை இங்கு இருந்திருந்தால், “பிரூ... நீ பண்ணிட்டு இருக்கற காரியத்துக்கு என்ன பேரு தெரியுமா?” என்று பிரியங்காவை பங்கமாக கேட்டிருப்பார்).

ராஜூவின் கதை:

"அழகான கண்ணைக் கொடுத்த அம்மா, திறமையைத் தந்த அப்பா, குரு பாக்யராஜ், நெல்சன் ஆகியோருக்கு வணக்கம். வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த பெற்றோர்கள் என்பதால் வீட்டில் எப்போதும் சண்டை. எனவே அவர்கள் தனித்தனியாக வைத்த பெயர்களிலிருந்து உருவி நானாக ‘ராஜூ’ என்று வைத்துக் கொண்டேன். (அப்ப ஜெயமோகன்?!). கருமம். ஆம்பளைப் பசங்க கிட்ட நான் எப்பவும் பேச மாட்டேன். பெண்களிடம் பேசுவதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது. என்னை வாழ வைக்கும் பெண்களுக்கு நன்றி.

மதம் காரணமாக பிரிந்திருக்கும் மக்களை ஒன்று சேர்ப்பது திரையரங்கம்தான். எனவே சினிமா மீது எனக்கு ஆவல் பிறந்தது. சென்னை வந்து விஸ்காம் படித்தேன். இறுதி வருடத்தில் குறும்படத்தை உருவாக்கிக் கொண்டிருந்த போது தந்தை இறந்தார். அந்தத் துயரத்தில் படம் அரைகுறையாக தயார் ஆனாலும் பாராட்டைப் பெற்றது. சிறப்பு விருந்தினராக வந்திருந்த பாக்யராஜ் என் படைப்பைப் பாராட்டினார். பிறகு அவரிடம் ஒரு வருடம் வேலை கற்றுக் கொண்டேன். தொலைக்காட்சி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போது சிறந்த வெளிச்சத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். பிக் பாஸ் அதற்கான மேடையாக இருக்கும். நன்றி”

 
ராஜூ தனது கதையை சிரிக்கச் சிரிக்கச் சொன்னதை பார்வையாளர்கள் சிரித்து, கைத்தட்டி மகிழ்ந்தார்கள். குறிப்பாக பெண் பார்வையாளர்களின் வரவேற்பு அதிகம். (பாக்யராஜின் சிஷ்யர்தான்!). பிரியங்காவும் நிரூப்பும் அடிக்கடி மூலையில் சந்தித்து ரகசியம் பேசுகிறார்கள். இமான்தான் அந்தக் கதையில் வில்லன் போலிருக்கிறது. ஆனால், கதை வசனத்தை ஒரு குன்சாகத்தான் புரிந்து கொள்ள முடிகிறது.

பிக் பாஸ் அனுப்பி வைத்த அறிவிப்பை அபிஷேக் வாசித்தார். “இந்த வீட்டில் மிக்சர் சாப்பிட்டு சும்மா உக்காந்து பொழுதைக் கழிக்கறவங்க. யாரு? எல்லாத் திறமையும் மிக்ஸ்டா இருந்து ஜொலிக்கறவங்க யாரு?" என்கிற தேர்வு நடைபெறுமாம். இதை பதினாறு பேர் கொண்ட குழு ஒன்று கருத்துக் கணிப்பு நடத்தித் தேர்ந்தெடுக்குமாம். அன்று மாலை நடக்கும் திருவிழா நாடகத்தின் முடிவில் இந்த முடிவுகள் அறிவிக்கப்படுமாம். தேர்வுக்குழுவில் இருப்பவர்கள் அபிஷேக், அக்ஷரா, பாவ்னி. (இவர்களை எப்படித் தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை).

சிறந்த பங்களிப்பு தருபவர்களில் ஒரு நபரும், தராதவர்களில் இரு நபர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். தங்களின் சாய்ஸ் யார் என்பதை ஒவ்வொருவரும் தேர்வுக்குழுவிடம் வந்து தனித்தனியாக சொல்ல வேண்டும். இதன்படி, ‘பெஸ்ட்’ என்கிற பிரிவில் பெரும்பாலோனோர் ராஜூவின் பெயரைச் சொன்னார்கள். தனது காமெடி சென்ஸால் மனிதர் நிறைய பேரைக் கவர்ந்திருக்கிறார் போல. ‘வொர்ஸ்ட்’ கேட்டகிரியில் சின்னப்பொண்ணுவின் பெயர் முதலில் இறுதி செய்யப்பட்டது. நாடியா, மது, இசை ஆகிய மூன்று பேர்கள் இரண்டாவது நபர் கேட்டகிரியில் அடிபட்டன. (அநேகமாக மதுவின் பெயர்தான் இதில் வரக்கூடும்)

 
பலரும் ராஜூவின் பெயரைச் சொன்னபோது “வெறும் எண்டர்டெயின்மென்ட் தர்றது மட்டும் முக்கியமில்ல” என்று தேர்வுக்குழுவிடம் விவாதம் செய்து கொண்டிருந்தார் அபிஷேக். இதன் மூலம் ராஜூவின் மீதுள்ள தன் ‘ஸ்டொமெக் பர்னிங்’கை அவர் காட்டிக் கொண்டிருந்தார். முடிவுகள் வரட்டும், பார்த்து விடுவோம். (கமலுக்கு டைம்பாஸ் செய்ய இந்த முடிவுகளும் ஒரு காரணமாக அமைந்துவிடும்). ஆனால் இந்தத் தேர்வுக்குழுவில் இருந்த மூன்று பேரின் லட்சணத்தை யார் ஜட்ஜ் செய்வார்கள் என்று தெரியவில்லை.

பூஜை பொருள்கள், செட் பிராப்பர்ட்டிகள் வந்து சேர்ந்தன. “எனக்குப் போய் எக்ஸ்ட்ரா முடி அனுப்பிச்சிருக்கான் பாரேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தார் கூந்தல்அழகர் நிரூப். பிரியங்கா உண்மையிலேயே குழந்தைத்தனம் கொண்டவரா அல்லது அப்படிக் காட்டிக் கொள்ள விரும்புகிறாரா என்று தெரியவில்லை. வந்திருந்த ஸ்வீட்களில் ஒன்றை ஒளிந்திருந்து லபக்கிக் கொண்டார். கூட்டுக்களவாணியாக அபினய். (பூஜை செய்வதற்கு முன் சுவைத்துப் பார்க்கக்கூடாது என்று சொல்வார்களே!).


 
ஒப்பனை முடித்து அனைவரும் குரூப் போட்டோ போல் வந்து நின்றார்கள். சிவனாக நிரூப்பும் பார்வதியாக இசையும் பொருத்தமான ஒப்பனையுடன் இருந்தார்கள். ‘மர்மதேசம்’ சீரியலில் வரும் ஒரு பூசாரி போல ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருந்தார் இமான். ராணி போன்ற ஒப்பனையில் கூடுதல் வசீகரமாக இருந்தார் பாவ்னி. ராஜா மாதிரியான ஒப்பனையில் இருந்தாலும் காவலாளி மாதிரியே இருந்தார் சிபி. ஏற்கெனவே சொன்னதுதான். ஒப்பனை அணிந்ததும் வேறு ஆளாக மாறி விடுகிறார் தாமரை.

கோமாளியாக வந்து அதகளம் செய்து கொண்டிருந்தார் ராஜூ. பக்க வாத்திய இசையாக அபிஷேக்கின் தோற்றம் மிகப்பொருத்தம். அவர் பாட்டுக்கு தாளம் அடித்துக் கொண்டிருந்தார். ‘ஹைடெஸிபல் பிரியங்கா’, இங்கும் தொகுப்பாளராக வந்து கத்தினாலும், அப்போது நடந்து கொண்டிருந்த ஒரு குழப்பத்தை நாடக வசனத்தில் டைமிங்காகக் கலந்தது சிறப்பு.

 
‘கல்யாண சமையல் சாதம்... காய்கறிகளும் பிரமாதம்’ என்கிற புகழ்பெற்ற பாடலை அப்படியே மாற்றிப் பாடி நிகழ்ச்சியைத் துவங்கி வைத்தார் இசை. ‘நாமினேஷன் பற்றிய டென்ஷன்’களும் பாடல்வரியில் கலந்திருந்தது சுவாரஸ்யம்.

இசையின் பாடலைத் தொடர்ந்து நாடகத்திற்கான துவக்கம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் சின்னப்பொண்ணு தலைமையில் இன்னொரு சீரியஸ் நாடகம் நடந்து கொண்டிருந்தது. சின்னப்பொண்ணு இறைவணக்கம் பாடி நிகழ்ச்சியை துவக்கி வைப்பதாகத்தான் முதலில் திட்டமிடப்பட்டிருந்ததாம். ஆனால் அபிஷேக் சொதப்பிவிட்டதால் இசை வந்து பாடிவிட்டார். இதனால் மனம் வருத்தம் அடைந்த சின்னப்பொண்ணுவை பலரும் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். “எனக்கு வருத்தமெல்லாம் இல்லப்பா..." என்பதை வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார் சின்னப்பொண்ணு. “என்னை மன்னிச்சிடு ஆத்தா" என்று உருகி மன்னிப்பு கேட்டார் அபிஷேக்.

 
நாடகம் தொடர்ந்தது. மக்களுக்குக் கெடுதல் செய்து கொண்டிருக்கிற ஒரு தீயவனை பூமியில் மானிடப் பிறப்பாக வந்து அம்மன் வதம் செய்வதுதான் இதன் மையம். பெரும்பாலான கிராமப்புற நாடகங்கள், புராணக் கதைகள் இதைத்தான் அடிப்படையாகக் கொண்டிருக்கும். ‘அகிலாண்ட ஈஸ்வரி’யாக வந்து மிரட்டிக் கொண்டிருந்தார் தாமரை. ஆளே அடையாளம் மாறி அம்மனாக வரும்போது ஆவேசத்தின் உச்சியில் இருந்தார். இவர் நடித்திருப்பது சற்று ஓவர் ஆக்டிங் போல் தெரிந்திருக்கலாம். ஆனால் கூத்து நடிப்பின் இலக்கணம் இதுதான். கூட்டத்தின் கடைசியில் அமர்ந்திருப்பவனுக்கும் நடிகனின் உடல்மொழி புரிய வேண்டும். க்ளோசப் காட்சியெல்லாம் இங்கு கிடையாது.

சின்னப் பொண்ணு பாட ஆரம்பித்துவிட்டால் கேட்க அத்தனை அருமையாக இருக்கிறது. ஆனால் இவரின் பெயரை வைத்து ஒரு தற்செயல் காமெடி நடந்தது. (அல்லது ராஜூவின் திட்டமிட்ட குறும்போ என்னவோ!) அந்த நகைச்சுவையை இந்த நாடகத்தின் ஹைலைட் எனலாம். “உங்க புருஷன் இன்னொரு கனெக்ஷன்ல இருக்கான்” என்று ஒருவன் வந்து கோள் மூட்ட வேண்டும். இதை ராஜூ “உன் புருஷன் ஒரு சின்னப்பொண்ணை வெச்சிருக்கான்” என்று சொல்லிவிட்டார். அது பிக் பாஸ் சின்னப்பொண்ணுவை குறிக்குமோ என்று பதறி ‘சின்னப் பிள்ளை’ என்று பிறகு மாற்றிவிட்டார்கள். (நான் விழுந்து விழுந்து சிரித்த நகைச்சுவை இது).

 
இன்னொரு காட்சியில் கல்லாக உறைந்து நின்றிருந்த நாடியாவை "அடியேய்... என்னவெல்லாம் பண்ணினே... நாடியா சாங்க்... இப்போ பாரு ஜாக்கி சான் போஸ்ல நின்னுக்கிட்டு இருக்கே” என்று ராஜூ டைமிங்கில் கலந்து அடித்தவுடன் நாடியாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை. வருணிற்கும் சிபிக்கும் ஏன் சினிமாவில் சிறந்த வாய்ப்பு கிடைக்கவில்லையென்று இப்போதுதான் தெரிகிறது. முகத்தில் எந்தவொரு உணர்வும் சிறப்பாக வெளிப்படாமல் உலவிக் கொண்டிருந்தார்கள். “என் வாழ்க்கைல ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினதுடா” என்கிற வசனம் போல மண்டியிட்டு எதையோ கத்திக் கொண்டிருந்தார் வருண். சுருதி, ஐக்கி, மதுமிதா போன்றவர்கள் எல்லாம் அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட் போல உலவிக் கொண்டிருந்தார்கள்.

நாடகக் காட்சியில் யாராவது இறந்துபோனால் அவருக்கு திருஷ்டி கழிப்பது ஒரு வழக்கம். அதன்படி வதம் செய்யப்பட்ட சிபிக்கு திருநீறு பூசி தாமரை ஆசியளித்த காட்சி சிறப்பு. இந்த நாடகத்தை வடிவமைத்தவர் நிச்சயம் தாமரையாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு கூத்து நாடகத்தின் ஃபார்மேட் இதில் நன்றாக வந்திருந்தது. முதலில் இறைவணக்கம், பிறகு கோமாளி வந்து நாடகத்தின் மையத்தைச் சொல்வது. அவனே இடையிடையில் வந்து நாடகத்தை நகர்த்திச் செல்வது போன்ற விஷயங்கள் சரியாக அமைந்திருந்தன.

 
“இவனுங்க தாமரை தலைமைல ஏதோவொண்ணை பண்ணிக்கிட்டு இருக்கானுங்க. ஒண்ணும் சரியா வர்ற மாதிரி தெரியலை. நாம அப்புறமா பூந்து எல்லாத்தையும் கலைச்சு வேற ஒண்ணை பண்ணிடலாம்” என்று பிரியங்கா நேற்றிரவு அபிஷேக்கிடம் புறணி பேசிக் கொண்டிருந்தார். அதற்கு அவசியமேயில்லை. நாடகத்தின் வடிவமைப்பு சிறப்பாகத்தான் இருந்தது. என்னவொன்று ஸ்கூல் டிராமா மாதிரி நடந்து முடிந்ததுதான் சிறிய சோகம். என்றாலும் பரவாயில்லை. எப்படியோ சமாளித்து முடித்தார்கள். சற்று ஓவர் ஆக்டிங் என்றாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் தாமரைதான்.

நாடகத்தின் முடிவில் best performer, worst performer முடிவுகள் தெரிவிக்கப்படும் என்று முன்னமே சொல்லப்பட்டிருந்தது. அது யாராக இருக்கும்? பார்ப்போம்.

- விகடன்-

SHARE