Friday 8 October 2021

பிக்பாஸ் 5 : 5ம் நாள் | வாழ்வின் ரணத்தை விவரித்த நமீதாவின் கண்ணீர் கேள்விகள்… இந்த சமூகத்தின் பதில் என்ன?

SHARE

ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் ஒருவர் தன்னை வேறொரு பாலினமாக உணர்வது மிக மிக இயல்பானது. இது எந்த வகையிலும் இயற்கைக்கு முரணானது அல்ல. ஆனால் கல்வி பெற்ற சமூகத்திலும் கூட இது குறித்தான விழிப்புணர்வோ அறிவோ பெரிதும் இல்லை!

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ – நோ... நோ... இது பிக்பாஸ் வீட்டு நிலவரம் அல்ல. அதற்கு இன்னமும் நாள் இருக்கிறது. அந்தத் திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் காலையில் ஒலித்தது. நெல்லிக்காய் மூட்டையை உருட்டி விட்டது போல ஆளாளுக்கு ஒவ்வொரு மூலையில் உருண்டு கொண்டிருந்தார்கள். இமான் அண்ணாச்சி யாரையோ பயங்கரமாக முறைத்தபடி உடம்பை அசைத்துக் கொண்டிருந்தார்.

வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்கள் தன் அப்பாவின் தலைமுடியை இழுத்து பிடித்து ரப்பர் பேண்ட் போட்டு குடுமியாக்கி முகத்தில் பவுடர் தடவி சிங்காரித்துப் பார்ப்பார்கள். இந்த அனுபவத்தை அடையாத அப்பாக்களே இருக்க மாட்டார்கள். அப்படியொரு மேக்கப் போட்ட பாப்பா ‘அலங்கார’ கெட்டப்பில் வந்தார் அபிஷேக். பிறகு, சின்னப்பொண்ணுவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி அவரின் கையால் பயபக்தியுடன் விபூதி வைத்துக் கொண்டார். (ஒரிஜினல் வீட்டில் சொந்த அம்மாவை நிறைய திட்டினாலும், இங்கு கேமரா முன்னால் மட்டும் பாசம் வந்து விடுகிறது. “பெத்த குழந்தைக்கு பத்து பைசா பலூன் வாங்கிக் கொடுக்க துப்பில்லை.. ஆட்டக்காரிக்கு நூறு ஓவா. குடுக்கிறீங்களோ?’ மொமன்ட்!).

 
“காலேஜ் போற பயலுவளா கேட்டுக்கங்க... இந்த பாவனி புள்ளைக்கு முப்பத்தோரு வயது ஆகுது... எந்த ஆர்மி நினைப்பும் கூடாது... கொன்னுருவேன்... ஓடிடுங்க” என்று கேமராவைப் பார்த்து வார்னிங் தந்து கொண்டிருந்தார் அபிஷேக். பின்குறிப்பாக “ஸ்கூல் பசங்க லெட்டர் தந்துடப் போறாங்க?” என்று பாவனியிடம் காமெடி (?!) செய்து கொண்டிருந்தார். ஏதோ தாமரைச் செல்வி வெள்ளந்தியாக இருந்ததால் பாவனியின் வயதை குறைத்து மதிப்பிட்டு விட்டார். எல்லோருமேவா அப்படியிருப்பார்கள்?! “ஆல் வயசு அக்செப்டடட்” என்று க்ரீன் சிக்னல் தந்து விட்டார் பாவனி. (என்னவொன்று எப்போதும் ‘செளகார் ஜானகி’ சோக லுக்கில் திரிவதை மட்டும் மாற்றிக் கொண்டால் நன்றாக இருக்கும்!).

‘அழுகாச்சி டாஸ்க்’ மன்னிக்க... ‘ஒரு கதை சொல்லட்டுமா?’ டாஸ்க் தொடங்கியது. ஏன் கிண்டலடிக்காமல் இப்படிச் சொல்கிறேன் என்றால், இன்றுதான் இந்த டாஸ்க்குக்கு ஓர் நியாயமான அர்த்தம் கூடியது. நமீதா தன் வாழ்க்கைப் பின்னணியைப் பற்றி சொல்ல வந்தார்.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் முதன்முறையாக ஒரு திருநங்கையை போட்டியாளராக இணைத்ததின் நோக்கத்திற்கு ஆரம்பக் கட்டத்திலேயே முழு நியாயம் சேர்த்து விட்டார் நமீதா. ஹேட்ஸ் ஆஃப்... ரத்தமும் சதையுமாக அவர் தன் வாழ்க்கையின் ரணகளச் சுவடுகளை கட்டுப்படுத்த முடியாத அழுகையுடன் விவரித்த போது நம்மால் கலங்காமல் இருக்க முடியவில்லை.

பொதுவாக நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கிற ஆண் மற்றும் பெண் பாலினம் தவிர்த்து ஐம்பதெட்டுக்கும் மேற்பட்ட பாலினங்கள் இவ்வுலகில் இருக்கின்றன. இந்த விஷயத்தை விரிவாக அலசும் நூல் ஒன்று தமிழில் இருக்கிறது. பாலின சமத்துவப் போராளியான கோபிசங்கர் எழுதிய அந்த நூலின் தலைப்பு ‘மறைக்கப்பட்ட பக்கங்கள்’. திருநங்கை, திருநம்பி, தன்பால் ஈர்ப்பாளர்கள் என்று சொற்பமாக அறிந்திருக்கிற விஷயங்களைத் தாண்டி நாம் அறிய வேண்டியவை ஏராளமாக உண்டு.


ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் ஒருவர் தன்னை வேறொரு பாலினமாக உணர்வது மிக மிக இயல்பானது. இது எந்த வகையிலும் இயற்கைக்கு முரணானது அல்ல. ஆனால் கல்வி பெற்ற சமூகத்திலும் கூட இது குறித்தான விழிப்புணர்வோ அறிவோ பெரிதும் இல்லை. இந்த விஷயத்தை மலினமாகவும் அவமானமாகவும் கிண்டலாகவும் அணுகுவோரே அதிகம். பொது சமூகத்தில் இப்போதுதான் மெல்ல மெல்ல மாற்றம் துளிர்விடத் தொடங்கியிருக்கிறது என்றாலும் கடக்க வேண்டிய தூரம் அதிகம்.

இந்தச் சூழலில் பிக்பாஸ் எனும் பிரபலமான மேடையை, திருநங்கைகளின் உணர்வு, வலி, வேதனை போன்றவற்றை பதிவு செய்வதற்காக சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட நமீதாவை எத்தனை பாராட்டினாலும் தகும். உணர்ச்சிப் பெருக்கில் பேசினாலும் தங்கு தடையின்றி மிகப் பொருத்தமான வார்த்தைளோடு உரையாடினார் நமீதா. இறுதியில் அவர் பாடிய பாடல் மனதை மேலும் கலங்க வைத்துவிட்டது.

தன் குடும்பத்துக்கு ஒரே ஆண் வாரிசாக இருந்தவர், எட்டு வயதில் தன் உடலில் ஏற்படும் மாற்றத்தை உணர ஆரம்பிக்கிறார். ஆனால் அதை வெளியில் சொல்ல முடியுமா என்கிற குழப்பத்தில் தவிக்கிறார். பெண் உடைகளை அணிய விருப்பம் ஏற்படும் போது குடும்பத்தாரின் மூலம் பல்வேறு கொடுமைகளை அனுபவிக்கிறார். பின்தொடரப்படுவது, கேமராவால் பதிவு செய்யப்படுவது, ஆட்களை வைத்து அடித்து மிரட்டுவது, சிகிச்சை என்ற பெயரில் ஒரு சிறையில் அடைத்து வைக்கப்படுவது என்று இந்தக் கொடுமையின் உச்சக்கட்டம் எது வரை செல்கிறதென்றால் தன் சொந்தக் குழந்தையையே பெற்றோர் மருந்து வைத்துக் கொல்ல முயற்சிப்பது வரை செல்கிறது. இதற்குப் பெயர்தான் அறியாமை.

 
இந்த இயற்கையான மாற்றத்தை ‘பைத்தியம் பிடித்திருக்கிறது’ ‘வேண்டுமென்றே செய்யப்படுகிற நடிப்பு’ என்றெல்லாம் தவறாகப் புரிந்து கொண்டு பேய் ஓட்டும் மந்திரவாதிகளிடம் அழைத்துச் செல்வது உள்ளிட்ட பல முரட்டுத்தனமான சிகிச்சைகளால் ‘குணப்படுத்த’ நினைக்கிறார்கள். ஒருவேளை தன் குழந்தையின் நிலைமை பெற்றோருக்கு புரிந்தாலும் கூட சமூகம் தன்னை கேலி செய்யுமே, ஒதுக்கி வைக்குமே என்கிற காரணத்தினால் சொந்தப் பிள்ளையையே அவமானப் பொருளாக கருதி வெறுத்து ஒதுக்கி வீட்டை விட்டு துரத்தியடிக்கும் குடும்பங்கள் நிறைய உண்டு.

பதினெட்டு வயது வரை தனக்கு இழைக்கப்பட்ட பல்வேறு கொடுமைகளைத் தாங்கிக் கொண்ட நமீதா, அதற்குப் பிறகு தன் குடும்பத்தின் அருகிலேயே ‘ஒரு பெண்ணாக’ வாழத் தொடங்குகிறார். சினிமா நடிப்பு, மிஸ் சென்னை, மிஸ் தமிழ்நாடு என்று ஆரம்பித்து சர்வதேச அழகிப் போட்டிகளில் பங்கு பெற்று பல விருதுகளைப் பெற்று தனக்கான அங்கிகாரத்தை அடையத் தொடங்குகிறார்.

“ஒவ்வொரு பெற்றோரையும் கெஞ்சிக் கேட்கிறேன். உங்களுடைய குழந்தைகள் இப்படி மாறினார்கள் என்றால் தயவு செய்து அவர்களை வீட்டை விட்டு துரத்தி விடாதீர்கள். அவர்களாக முடிவு எடுக்கும் வயது வரைக்குமாவது ஆதரியுங்கள். அப்படிச் சரியாகப் புரிந்து கொள்ளப்படாததால்தான் நான் பல்வேறு கொடுமைகளை அனுபவித்தேன். இப்படி சமூகத்தால் விரட்டப்படுவதால் திருநங்கைகள் தனித்து குடும்பமாக வாழ்கிறார்கள். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கிறார்கள். ஒரு திருநங்கை எந்தவொரு பெண் வாழ்க்கையையும் கெடுத்ததில்லை.

எங்களின் உரிமைகளை, கோரிக்கைகளை இந்த பிக்பாஸில் இருக்கும் 106 நாளும் நான் கேட்டுக் கொண்டேதான் இருப்பேன். சுதந்திரம் பெறுவதற்காக இந்தியா போராடியதற்கு நிகராக எங்கள் போராட்டம் இருக்கிறது. இப்போதுதான் காவல்துறையில் ஐந்து திருநங்கைகள் இணைந்து பணிபுரியத் தொடங்கியிருக்கிறார்கள். இனி நாங்கள் எல்லாத் துறைகளிலும் வருவோம். பத்து பேர் என்பது நூறு பேராக மாறி பெருகுவோம்’’ என்று தன் உரையை முடித்த நமீதா இறுதியாக பாடின அந்தப் பாடல் மிக உணர்ச்சிகரமான வரிகளோடு அமைந்திருந்தது.

‘’இந்த கதை சொல்லட்டுமா?’’ டாஸ்க்கை ஓர் உன்னதமான நிலைக்கு எடுத்துச் சென்றார் நமீதா. தவறான புரிதலால் தங்களின் குழந்தைகளை துரத்திய பெற்றோர்கள் இந்த வீடியோவைப் பார்த்தால் கண்ணீர் விட்டு அழுவார்கள். இனியாவது இப்படி நிகழக்கூடாது என்பதையே நமீதாவின் இந்தப் பேச்சு சமூகத்துக்கு உணர்த்தும்.

இதர போட்டியாளர்கள் அனைவருமே எழுந்து நின்று கைத்தட்டி நமீதாவுக்கு தங்களின் ஆதரவை அளித்தார்கள். ஒருவர் விடாமல் அனைவருமே heart எமோஜியை ஒட்டினார்கள். அப்படியொரு பேச்சு. சல்யூட் நமீதா. இதைப் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் அனைவருக்குமே ஓடிச் சென்று நமீதாவை அரவணைத்துக் கொள்ளத் தோன்றியிருக்கும்.

 
தலை மசாஜ் என்பது பிக்பாஸின் பிரிக்க முடியாத அங்கம் போலிருக்கிறது. பாவனியின் மடியில் சொகுசாக அபிஷேக் படுத்துக் கொண்டிருக்க, அவரின் தலையைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தார் பாவனி. (பாவம்மா நீ!) “நாங்களும் தம்பிதானே... எங்களுக்கும் பிடிச்சு விடறது” என்று ஏழரையைக் கூட்டிக் கொண்டிருந்தது ராஜூ கூட்டணி.

பிரியங்கா மேக்கப் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த தாமரை செல்வி “மேக்கப் சாமான் வீட்ல ஏதாச்சும் மிச்சம் இருக்குதா... எல்லாத்தையும் இங்க கொண்டுட்டு வந்துட்டீங்களா... எங்களுக்கும் மேக்கப் போட்டு விடலாம்ல. நாங்களும் அளகாத் தெரிவோம்ல” என்று கேட்டுக் கொண்டிருந்தார். பிரியங்கா ஒப்பனை செய்து கொண்டிருந்ததை ஒருவிதமான ஏக்கத்துடன் அவர் பார்த்துக் கொண்டிருந்த காட்சி நெகிழ்வை ஏற்படுத்தியது.

பொதுவாக சினிமா பிரபலங்களை ‘சார்’ என்கிற பின்னொட்டுடன் குறிப்பிடும் கெட்ட கலாசாரம் இங்கு ஆழமாக வேரூன்றி விட்டது. இதை பிக்பாஸ் ஷோவில் பிரியங்கா உடைத்தது நல்ல விஷயம். ‘கமல்ஹாசன் எபிசோட்ல நாம நல்லா மேக்கப் போட்டுக்கலாம்...” என்று போகிற போக்கில் தாமரையிடம் அவர் சொன்னது சிறப்பு. கமல் சாரே... மன்னிக்கவும் கமல்ஹாசனே இதைத்தான் விரும்புவார் என்று நினைக்கிறேன்.

இதர நபர்களை விட ஊடகத்துறையில் அனுபவமுள்ள பிரியங்கா, இமான் போன்றவர்கள் பிக்பாஸில் ஏதாவது ‘கன்டென்ட்’ தந்தாக வேண்டும் என்பதற்காக மெனக்கெடுகிறார்கள். ஆனால் இவை பெரும்பாலும் இயல்பாக இல்லாமல் செயற்கையாக அமைந்து விடுகிறது,

‘உள்ள தூங்கிக் கொண்டிருக்கிற மிருகத்தை வெளியே கொண்டு வரும் நிகழ்ச்சி இது’ என்று கற்பனையான என்டர்டெய்ன்மென்ட் ஒன்றை ஆரம்பித்த இமான், ஐக்கியையும் ராஜூவையும் வைத்து ஒரு சீன் டைரக்ட் செய்ய ஆரம்பித்தார். ஓர் இளைஞன் தன் காதலியை நீண்ட நாட்கள் கழித்து செருப்பு கடையில் பார்ப்பதே அந்தக் காட்சி.

 
‘செருப்பு... பொறுப்பு...’ என்று ரைமிங்காக வசனம் பேசிய ராஜூவை ‘‘நீ என்ன பருப்பு... பத்து பைசா இல்லாத உன் கூட எப்படி வாழறது?” என்று கவுன்ட்டர் தந்து கொண்டிருந்தார் ஐக்கி. கேமராவால் பதிவு செய்வது போல் இவர்களைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்த இமானை நோக்கி ராஜூ அப்போது சொன்ன ஒரு மலினமான கமென்ட் அருவருப்பானது. ‘அவையடக்கம்’ வேண்டும் என்று முதல் நாளில் கமல் சொன்ன உபதேசத்தை ராஜூ உட்பட பலரும் காற்றில் பறக்க விடுகிறார்கள். பஞ்சாயத்து நாளில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

‘கதை சொல்லட்டுமா’ டாஸ்க்கில் அடுத்து வந்தவர் மதுமிதா. இவர் பேசும் ஒலியானது பியானோ இசையைப் போல் இருக்கிறது என்று முன்பு சொல்லியிருந்தேன். இப்போது கேட்கும் போது கடிகாரத்திலிருந்து வெளியே வந்து கத்தும் குருவியைப் போலவே ஒலிக்கிறது. அத்தனை இனிமையான கொஞ்சல். ஆனால், இவர் பேசியது பெரிதும் புரியவில்லை என்பதுதான் பிரச்னை.

ஜெர்மனியைச் சேர்ந்த மதுமிதா, ஃபேஷன் டிசைனிங் பயின்றார். பொருத்தமான பணிவாய்ப்பு இல்லாததால் ஐடி துறைக்கு நகர்ந்தார். அப்போது ஒரு காதல். அது தொடர்பான மனஅழுத்தம் ஏற்பட்டு தற்கொலை உணர்வுகள் வந்து தன் பெற்றோரை நினைத்து ஒருவாறாக தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். “உங்க மனசுல என்ன பிரச்னை இருந்தாலும் யார்கிட்டயாவது பேசுங்க... உங்களுக்கு நீங்களேயாவது பேசிடுங்க. அப்பத்தான் அந்த அழுத்தம் கொஞ்சமாவது குறையும்” என்பதுதான் அம்மணி, ‘சரோஜாதேவி’ மொழியில் சொன்ன செய்தி.

 
பாவனியின் வாழ்க்கையிலும் அப்படியொரு சோகம் நிகழ்ந்திருப்பதால் அவர் மதுமிதாவிடம் பிறகு வந்து நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார். ‘சில தனிப்பட்ட துயரங்களை வெளியில் சொல்லாமல் மூடி மறைத்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று புத்திமதி சொல்கிறார்கள். அது தேவையில்லை. ஏதோ நான் என் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்று கண்கலங்க அவர் சொல்லிக் கொண்டிருந்ததைப் பார்க்க பாவமாக இருந்தது.

முந்தைய சீசன்களில் ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தினால் பிக்பாஸ் ஜாலியான தண்டனை கொடுத்த காலமெல்லாம் உண்டு. ‘இது பாமரரும் பார்க்கும் நிகழ்ச்சி’ என்று கமல்ஹாசனும் விளக்கம் கொடுத்தார். ஆனால் இந்த சீசனில் கெளதம் மேனன் படம் மாதிரி ஆங்கிலம் கரைபுரண்டு ஓடுகிறது. தனது மொழியை தானே அறியாத ஒரு சமூகமாக தமிழ் சமூகம் மாறி விடக்கூடாது.

- விகடன்-
SHARE