பிக்பாஸ் 5 : 9ம் நாள் | கலீஜ் கமென்ட் பிரியங்கா, டார்கெட் ஆன இசைவாணி... அப்ப எல்லாமே பொய்யா கோப்பால்?


பிரியங்கா விஜய் டிவி செட்களில் அதிகம் உலவி அனுபவமுள்ளவர் என்பதால் பிக் பாஸ் செட்டையும் தன் சொந்த வீடு போலவே பாவித்து மற்றவர்களை வாடகைதாரர்கள் மாதிரியே ட்ரீட் செய்வது புன்னகைக்க வைக்கிறது.

பிக்பாஸ் வீட்டில் நேற்று இரண்டு முக்கியமான சடங்குகள் நடைபெற்றன. இந்த சீசனில் வீட்டின் தலைவருக்கான முதல் போட்டி நடந்தது. மற்றவர்களை முதுகில் குத்தினால்தான் தலைவராக முடியும் என்கிற தத்துவம் இங்கும் மெய்ப்பட்டது. இந்தப் போட்டியில் கூட்டணிகளின் பாரபட்சங்கள் வெளிப்பட்டன. (அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!). ‘சோழர் பரம்பரையில் ஒரு எம்எல்ஏ’ மாதிரி திடீர் ஆச்சரியமாக தாமரை தலைவர் ஆனார்.

இரண்டாவது சடங்கு, நாமினேஷன் வைபவம். “நாங்க 17 பேரு… எங்களுக்குள்ள சண்டையே கிடையாது’’ என்று தொடக்க வாரத்தில் ஒற்றுமை கீதம் பாடிக் கொண்டிருந்த மக்களின் மனதில் எத்தனை பகைமைகள், கருத்து வேறுபாடுகள் உருவாகியிருக்கின்றன என்பது கன்ஃபெஷன் ரூமில் வெடிகுண்டாக வெடித்தது. கதை சொல்லும் டாஸ்க்கின் போது இவர்கள் மனம் உருகி கண்ணீர் விட்டதெல்லாம் ‘பொய்யா கோப்பால்’ என்று தோன்றியது.

ஒரு சிறிய மனிதக்கூட்டத்துக்குள் சேர்ந்து வாழத் தொடங்கிய ஒரே வாரத்தில் இத்தனை பிரிவினைகள் உருவாகும் என்றால் பூமியில் மனிதன் தோன்றி வாழத் தொடங்கிய பல நூற்றாண்டுகளில் எத்தனை ரணகளமான வரலாற்றுத் தடங்கள் நிகழ்ந்திருக்கும் என்பதை சும்மா கற்பனை செய்து பார்த்தால் தலையே சுற்றுகிறது.

“இந்த வீட்டில் வில்லன்னு யாரும் கிடையாது” என்று லுலுவாய்க்கு இமான் சொன்ன போது “அடுத்த வாரம் முதல் நாள்லயே தெரிஞ்சுடும்’’ என்று கமல் அருளாசி வழங்கியது உண்மையாயிற்று.

 
பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

‘’வலி மாமே வலிப்... புளி மாமே புளிப்’’ என்கிற கருத்துள்ள பாடலை காலையில் ஒலிக்க விட்டார் பிக்பாஸ். வலிப்பு வந்தது போல் சிலர் ஆட ஆரம்பிக்க இன்னும் சிலர் புளிப்பு மிட்டாய் சாப்பிட்ட முகச்சுளிப்புடன் ‘இவ்ள சீக்கிரமாவா எழுந்துக்கறது’ என்றபடி அசைந்து கொண்டிருந்தார்கள்.

“என்னோட அரசியல் குருவான பிரியங்கா கற்றுத் தந்த பாடம் மூலம் நான் தெளிவாயிட்டேன். இனிமேதான் இந்த காளியோட ஆட்டத்தை நீங்க பார்க்கப் போறீங்க” என்பது போல் ‘தெளிவாக’ இமானிடம் பேசிக் கொண்டிருந்தார் தாமரை. “அதுக்காக உன்னை நீ மாத்திக்கணும்னு அவசியமில்ல. நீ எப்பவும் இருக்கிற மாதிரி இரு” என்று அண்ணாச்சி சொன்னவுடன் “அதெல்லாம் மாறமாட்டேன்… ஆனா சூதானமா இருக்கக் கத்துக்கிட்டேன்” என்று பதில் சொன்னார். பட்டணத்து வாழ்க்கை அம்மணியின் வாழ்க்கையில் என்னென்ன விளையாட இருக்கிறதோ?!

வீட்டின் முதல் தலைவருக்கான போட்டி அறிவிக்கப்பட்டது. ஒவ்வொருவரின் முதுகிலும் ஒரு பெரிய பலூன் கட்டப்பட்டிருக்கும். பஸ்ஸர் அடித்ததும் யார் முதலில் ஊசியை பாய்ந்து எடுக்கிறாரோ அவர் மற்றவர்களின் முதுகில் இருக்கும் பலூனை உடைக்கலாம். இறுதி வரை தன்னுடைய பலூனை பாதுகாத்துக் கொள்கிறவர் தலைவராம்.

“நீங்க தலைவர் ஆயிட்டா யாரும் உங்களை வெளியேத்த முடியாது” என்று தாமரையை உசுப்பேற்றிக் கொண்டிருந்தார் பிரியங்கா. இது மட்டுமல்லாமல், “நான் தலைவர் ஆயிட்டா முதல்ல நான்தான் பாத்ரூம் போவேன்… அதுவரை எல்லாம் அடக்கிக்கிட்டு உக்காரணும்” என்றெல்லாம் வரிசையாக ஜாலி ரூல்ஸ் சொல்லி அலட்டிக் கொண்டிருந்தார். (ஹிட்லர்கள் இப்படித்தான் உருவாக ஆரம்பிக்கிறார்கள்).

பிரியங்கா விஜய்டிவி செட்களில் அதிகம் உலவி அனுபவமுள்ளவர் என்பதால் பிக்பாஸ் செட்டையும் தன் சொந்த வீடு போலவே பாவித்து மற்றவர்களை வாடகைதாரர்கள் மாதிரியே ட்ரீட் செய்வது புன்னகைக்க வைக்கிறது. இன்னொன்று, இது போன்ற போட்டி நேரத்திலாவது அவரது மைக்கை ஆஃப் செய்து வைக்கலாம். “டேய் நீ இப்படி ஓடு... யக்கா நீ அந்தப்பக்கம் ஓடு” என்று அவர் ஹைடெஸிபலில் கத்துகிற போது காது ‘ஙொய்’ என்கிறது.

 
போட்டி ஆரம்பித்தது. நிரூப் கடந்த சீசன் பாலாஜியை நினைவுபடுத்துகிறார். நல்ல உயரமும் உடற்கட்டும் உள்ள அவர் சோபாவின் மீதெல்லாம் பாய்ந்து சென்று முதலில் வலிமையுள்ள இளைஞர்களை அவுட் ஆக்கும் கொலைவெறியோடு இயங்கினார். அதற்கு அவசியமில்லாமல் சேம் சைட் கோல் போட்டு தன் பலூனை தானே உடைத்துக் கொண்டார் அபினய். நிரூப் தன்னை கொலைவெறியுடன் துரத்துவதில் இருந்து தப்பிப்பதற்காக ஓடிய போது வரூணின் பலூனும் தன்னாலேயே உடைந்தது. சுருதி சாமர்த்தியமாக பாத்ரூமுக்குச் சென்று தாளிட்டுக் கொள்ள, ஒளிந்து காத்திருந்து நிரூப் அவரை அவுட் ஆக்கியது சுவாரசியமான காட்சி.

முட்டையை அடைகாக்கும் பறவை போல் தன் பலூனை வயிற்றில் வைத்துக் கொண்டு தோட்டத்தில் அமர்ந்த அபிஷேக், ஏமாந்த சமயத்தில் நாடியாவின் பலூனை உடைக்க, அந்த வாய்ப்பை பயன்படுத்தி அபிஷேக்கின் பலூனை உடைத்தார் நிரூப். இந்த ஆட்டத்தில் மிக துடிப்புடன் செயல்பட்ட நிரூப் சிலரின் பலூன்களை உடைக்க நல்ல வாய்ப்பு இருந்தும் ஏன் தவிர்த்தார் என்று தெரியவில்லை. “தலைவரா வந்தா நல்லாயிருக்கும்னு நான் நெனச்ச பயக எல்லாம் டெபாசிட் எடுக்காம கவுந்துட்டாங்களே” என்று இன்னொரு பக்கம் கூவிக் கொண்டிருந்தார் ‘காட்டுக்கத்தல்’ பிரியங்கா.

தன் பலூனை தானே உடைத்துக் கொண்ட தலைவரான அபினய் இந்தச் சமயத்தில் ஆட்டத்தில் ஒரு முக்கியமான திருப்பத்தையும் சர்ச்சையையும் உருவாக்கினார். அவர் அவுட் ஆகியிருந்தாலும் கையில் ஊசியை எடுத்துக் கொண்டு மற்றவர்களை துரத்த ‘ஏப்பா நீ அவுட் ஆகிட்டே… நீ எப்படி விளையாடலாம்?” என்று இமான் அண்ணாச்சி ஆட்சேபிக்க “ரெண்டு ரூவாதான்டா கேட்டேன்… அவன் என்ன கோபத்துல இருந்தானோ தெரியல... இம்மாம் பெரிய கத்திய தூக்கிட்டான்’’ என்கிற வடிவேலு மாதிரி அபினய் இதற்கு மிகவும் எரிச்சல் அடைந்தார்.

 
பிரியங்காவுடன் போட்டி போடுவது போல வரூணும் ஹைடெஸிபலில் கத்தி இமானிடம் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார். “என்னப்பா வருண்… சத்தமே காணோம்?” என்று கடந்த வாரத்தில் கமல் கேட்டதை வருண் இப்படியாக புரிந்து கொண்டார் போலிருக்கிறது. “நீ ஆட்டத்தைக் கெடுக்கறடா” என்கிற நிரூப்பின் ஆட்சேபத்தையும் அபினய் ஏற்றுக் கொள்ளவில்லை.

‘’அவுட் ஆனவங்க மத்தவங்க பலூனை உடைக்கக்கூடாதுன்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா? யார் தலைவர் ஆக வேண்டாம்னு நான் நெனக்கறனோ… அவங்க பலூனை உடைக்கலாம்தானே?’’ என்பது அபினய்யின் வாதம். கூட பக்க வாத்தியமாக வருண். (ரெண்டு பேரும் ஃபிரெண்ட்ஸ்ஸாம்!). அபினய்யின் Lateral thinking சரிதான். ஆனால் ரூல்ஸ் புத்தகம் என்ன சொல்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். “பலூன் உடைக்கப்பட்டவர்கள் போட்டியிலிருந்து விலக வேண்டும்’’ என்கிற 134(A)B34 விதியை ஐக்கி படித்துக் காட்டியதும் அமைதியாகி விட்டார் அபினய்.

 
ஒவ்வொருவரின் பலூனையும் கொலைவெறியுடன் துரத்தி உடைத்த நிரூப், ரவா டப்பாவை எடுத்து தரச் சொல்லி தன்னை டார்ச்சர் செய்த பிரியங்காவையும் விட்டு வைக்காமல் குத்தி பழிவாங்கினார். சிங்கங்களுக்கு இடையே நிகழ்ந்த இந்த ஆவேசமான போட்டியில் சிறு மயில் எப்படி தப்பித்தது என்று தெரியவில்லை. தன் பலூனை இறுதிக் கட்டம் வரை எப்படியோ தக்க வைத்துக் கொண்டிருந்தார் மதுமிதா. பெண்களை துரத்தினால் தன் பெயர் கெடும் என்று நிரூப் நினைத்திருக்கலாம் அல்லது வேறு அரசியல் கணக்குகள் இருந்திருக்கலாம். என்றாலும் மதுமிதாவின் பலூனும் ஒரு கட்டத்தில் உடைக்கப்பட்டது.

‘’அய் அய்…பிடிங்க பார்க்கலாம்’’ என்று கிச்சன் மேடையை சுற்றி ஓடிய தாமரையை பிடிக்க முடியாமல் மூச்சு வாங்க நின்றார் சின்னப்பொண்ணு. பெயரை ‘சின்னப்பொண்ணு’ என்று வைத்துக் கொண்டதால் மட்டும் அதே மாதிரி ஓட முடியுமா என்ன? ஒரு சாமர்த்தியமான கட்டத்தில் நிரூப்பின் பலூனை உடைத்து விட்டார் தாமரை. (ரங்கன் வாத்தியார் சிஷ்யன்டா நானு!) இதனால் இறுதி ஆட்டம் சின்னப்பொண்ணுவுக்கும் தாமரைக்கும் என்பதாக சுருங்கியது.

ஊசியுடன் சின்னப்பொண்ணுவை சுற்றிச் சுற்றி வந்தார் தாமரை. அவரின் ஆர்வக்கோளாறில் சின்னப்பொண்ணுவின் உடலின் மீது ஊசியை குத்தி விடுவாரோ என்று தோன்றியது. நல்லவேளை அப்படி நடக்கவில்லை. ஒரு கட்டத்தில் சின்னப்பொண்ணுவின் பலூன் தன்னாலேயே உடைந்தது. ஆனால் அதற்குப் பின்னால் சின்னப்பொண்ணுவின் அகங்காரம் என்னும் பெரிய பலூன் காரணமாக இருந்ததை பிறகு அறிய முடிந்தது. சின்னப்பொண்ணு ‘பெரிய பொண்ணாக’ நடந்து கொள்ளவில்லை.

சின்னப்பொண்ணுவின் பொறாமை பலூன்கள் பிறகு ஆங்காங்கே உடைந்து அம்பலமாகின. ‘‘வாழ்த்துகள் தாமரை... இந்த வாரம் உங்களை யாரும் நாமினேட் செய்ய முடியாது’’ என்று பிக்பாஸ் அறிவித்த போது ‘இந்த வாரம் மட்டும்தானே?” என்று முனகினார் சின்னப்பொண்ணு.

இதைப் போலவே இன்னொரு தருணத்தில் “நானாத்தான் பலூனை உடைச்சிக்கிட்டேன். எதுக்கு பிரச்னை?” என்று அங்கலாய்த்தார். இவரின் முகச்சுளிப்பைப் புரிந்து கொண்டு தாமரை முன்வந்து தானாக பேசிய போது ‘‘நானாத்தான் உனக்கு விட்டுக் கொடுத்தேன்” என்று சின்னப்பொண்ணு சொன்னது சிறுபிள்ளைத்தனத்தின் உச்சம். இதனால் முகம் மாறிய தாமரை “உங்களை ஏதாவது காயப்படுத்தியிருந்தா மன்னிச்சுக்கங்க” என்றபடி கசப்புடன் விலகினார்.
 
சின்னப்பொண்ணுவுக்கும் தாமரைக்கும் இடையில் போட்டி நிகழ்ந்து கொண்டிருந்த போது ‘’நாடகம் ஜெயிக்குதா... நாட்டுப்புறம் ஜெயிக்குதான்னு பார்த்துடலாம்’’ என்று தாமரை வேடிக்கையாகச் சொல்ல, இதை வழக்கம் போல் பிரியங்கா எக்ஸ்ட்ராவாக ஊதி ஊதி பற்ற வைத்து விட்டார். சின்னப்பொண்ணுவின் மறைமுக மனஸ்தாபத்திற்கு இது காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

இது மட்டுமல்லாமல் ஒரே துறையில் இருப்பவர்கள், ஒரே பின்னணியில் இருந்து வருபவர்கள் பரஸ்பரம் தங்களை வெறுத்துக் கொள்வது சுவாரசியமான உளவியல். தன்னைச் சுரண்டிக் கொழுக்கும் முதலாளியை விட தன் சக தொழிலாளியின் சிறிய வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொண்டு வயிற்றெரிச்சல் படுபவர்களே அதிகம்.

 
‘நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஆதரவு தாருங்கள்’ என்று சமூகத்தை வேண்டிக் கொள்கிற சின்னப்பொண்ணு, அதே போன்று இயங்கும் தாமரையின் மீது மட்டும் பகைமை பாராட்டுவது ஏன் என்று தெரியவில்லை. போலவே இமானின் மீதும் இவர் ஏதோ மனவருத்தம் கொண்டுவிட்டு அதைப் பற்றியே அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார். இதை அண்ணாச்சியிடம் நேராகப் பேசி தீர்த்துக் கொண்டிருக்கலாம்.

இதேபோல் மாடலிங் துறையிலிருந்து வந்திருக்கும் அக்ஷராவுக்கும் சுருதிக்கும் இடையேயும் கருத்து வேறுபாடு நிகழ்வதைக் காணலாம்.

ஒரு பெண் பஞ்சாயத்து தலைவர் ஆனாலும் அது பாவ்லா வெற்றிதான். உண்மையான அதிகாரம் என்பது அவரது கணவரிடம்தான் இருக்கும். அதைப் போல் என்னதான் தாமரை இந்த வீட்டின் தலைவராக மாறி விட்டாலும் அவரை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை. ஒருவேளை இந்த வசதிக்காகத்தான் அவரை தலைவராக்கி விட்டார்களோ… என்னமோ!

“தலைவர்னா சும்மா இல்ல... எல்லார் கிட்டயும் வேலை வாங்கணும்” என்று மற்றவர்கள் ஜாலியாக மிரட்டிக் கொண்டிருந்த போது “அதுக்கென்ன ஆத்தா… எல்லா வேலையையும் நானே செஞ்சிடறேன்” என்று அப்பாவி ஆறுமுகமாக சொல்லிக் கொண்டிருந்தார் தாமரை.

“நாங்க நாடகம் போட ஆரம்பிச்சோம்னா நைட்டு பத்து மணிக்கு தொடங்கி விடிய விடிய நடக்கும்” என்று பிரியங்காவிடம் தாமரை சொல்லிக் கொண்டிருக்க அதற்கு பிரியங்கா சொன்ன கவுன்டர் டயலாக் சற்று கலீஜ் ஆக இருந்தாலும் கேட்பதற்கு சுவாரசியமான ரைமிங்காக இருந்தது. “நாங்கள்லாம் பேய் வர்ற நேரத்துல ஷூட்டிங் ஆரம்பிச்சா ஆய் வர நேரம் வர்ற வரைக்கும் லென்த்தா போகும்.”

தேர்தலுக்கு முன் தலைவர்கள் வாக்குறுதி தருவது வழக்கமான கலாசாரம். ஆனால், தலைவரான பின்பு வாக்குறுதி தரும் வித்தியாசமான அரசியல்வாதியாக இருந்தார் தாமரை. “நான் நிச்சயமா உன் அம்மாவுக்கு கிட்னி தருவேன்” என்பது போல் அக்ஷராவிடம் சீரியஸாக சொல்லிக் கொண்டிருந்தார். உடல், பொருள், ஆவியெல்லாம் தியாகம் செய்கிற அரசியல் இது.

 
“டேய்… உங்களையெல்லாம் பார்த்தா அவ்வளவு நல்லவங்களா தெரியலையே. சீன் போடாம ஒழுங்கா வந்து வோட்டு போடுங்க’’ என்றபடி இந்த வார நாமினேஷன் சடங்கிற்கு அழைத்தார் பிக்பாஸ். இந்த சீசனில் முதன் முதலில் நாமினேஷன் செய்ய கன்ஃபெஷன் ரூம் செல்லும் பெருமையைப் பெற்றவர் அக்ஷரா (‘A’ ஆர்டர்ல கூப்பிட்டாங்க போல).

இந்த நாமினேஷன் வரிசையில் இசையின் மீதுதான் அதிக வசைகள் விழுந்தன. “தன் சிறிய வட்டத்தைத் தாண்டி யாரிடமும் சரியாகப் பேசுவதில்லை, வார்த்தைகளை விட்டு விடுகிறார்” என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் எழவே ஆறு வாக்குகளைப் பெற்று ஹிட் லிஸ்ட்டின் டாப்பில் இருந்தார் இசைவாணி. ‘வலிமையான போட்டியாளர்’ என்கிற பாசிட்டிவ் காரணத்தைச் சொல்லி நிரூப்பின் மீதும் பலர் குத்தினார்கள். (நெகட்டிவ் காரணத்தைச் சொன்னா பதிலுக்கு நிரூப் மூஞ்சுல குத்திடுவாரு போல!).

நமது எழுத்தாளர் ராஜூ நாமினேஷனின் போது கூட பாலின சமத்துவத்தைப் பின்பற்றினார். “ஆணில் ஒன்று. பெண்ணில் ஒன்று –ன்னு நாமினேஷன் பண்றேன்” என்ற இவர் அபிநய் மற்றும் பிரியங்கா மீது குத்தினார். (பிரியங்கா வலிமையான போட்டியாளராம்). கிளிமூக்கு அக்ஷரா மீதும் கணிசமான வாக்குகள் விழுந்தன. சின்னப்பொண்ணு தாமரை மீதுதான் கட்டாயம் குத்தியிருப்பார். ஆனால் தாமரை தலைவராகி விட்டதால் அது இயலாமல் போனது. எனவே ஆறுதலுக்காக இமான் அண்ணாச்சியின் மீது முத்திரை குத்தி குறைந்தபட்ச மகிழ்ச்சியை அடைந்தார்.

இறுதிப் பட்டியல் வெளியானது. பிக்பாஸ், கமல்ஹாசன், அந்த வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வரும் ஆசாமி போன்றவர்களைத் தவிர ஏறத்தாழ பிக்பாஸ் வீட்டில் அனைவருமே நாமினேஷன் பட்டியலில் வந்தார்கள். தலைவர் என்பதால் தாமரை தப்பித்தார். ஆனால் இந்த கொலைவெறிப் பட்டியலில் ‘பாவனி’ என்கிற ஒரே நபர் விதிவிலக்காக தப்பித்தது ஆச்சரியம். ‘பாவம் நீ’ என்று விட்டு விட்டார்களோ என்று தெரியவில்லை. அபிஷேக் நாமினேஷன் பட்டியலில் வந்திருப்பதால் சமூகவலைத்தள் ஆர்வலர்கள் உற்சாகம் அடைந்திருப்பதாக ஒரு தகவல்.

மதுமிதாவும் இசையும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். “என்னை ஏன் ஒதுக்கறாங்கன்னே தெரியல?” என்று அநாவசியமான புகாருடன் இசை அனத்திக் கொண்டிருக்க “உங்களை எனக்குப் பிடிக்கும்தானே... அதனால்தான் வந்து பேசினன்” என்று கொஞ்சி கொஞ்சி மதுமிதா சொன்னதும் ''அப்படியா..?'' என்று சந்தோஷம் ஆனார் இசை.

என்றாலும் இசையின் மீதே அதிக வாக்குகள் விழுந்திருப்பதால் அவர் எத்தனை நாள் தாங்குவார் என்று தெரியவில்லை.
Previous Post Next Post


Put your ad code here