Wednesday 20 October 2021

750 கிலோ மஞ்சள் மீட்பு..!!!

SHARE



புத்தளம் கொலங்கனத்த கடற்பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 750 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

எனினும், இதுதொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் பி 424 அதிவேக ரோந்து கப்பல் மூலம் கடற்படை அதிகாரிகள் குறித்த பகுதியில் நேற்று (19) விஷேட சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த கடற்பிரதேசத்தை அண்டிய காட்டுப்பகுதிக்குள் மிகவும் சூட்சகமான முறையில் குறித்த உலர்ந்த மஞ்சள் மூடைகளில் அடைக்கப்பட்டு குழியொன்றுக்குள் புதைப்பட்டிருந்த நிலையில் அதனை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

25 மூடைகளில் அடைக்கப்பட்ட 750 கிலோ கிராம் நிறையுடைய உலர்ந்த மஞ்சள் இதன்போது கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட குறித்த மஞ்சள் உள்ளூர் பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யும் நோக்கில் குறித்த காட்டுப்பிரதேசத்திற்குள் மறைத்து வைத்திருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட உலர்ந்த மஞ்சள் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய கொரோனா தொற்று நீக்கி தெளிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தமது பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளதாவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

இதேவேளை, கற்பிட்டி , புத்தளம் ஆகிய பிரதேசத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் நேற்று (19) வரையிலான காலப்பகுதியில் 8,030 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 4 இந்தியர்கள் உட்பட 16 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE