இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு எதிராக யாழ்.குருநகரில் செருப்பு மாலை அணிவித்து, உருவப் பொம்மை எரித்து இன்று செவ்வாய்க்கிழமை (26.1.2021) முற்பகல்-10 மணி முதல் மீனவர்கள் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்ளூர் இழுவைமடி மீன்பிடித் தொழிலுக்கும் தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்ததுடன் குருநகர் இழுவைமடிப் படகு உரிமையாளர்கள் மாதாந்தம் யாருக்கோ 5000 ரூபா கப்பமாகச் செலுத்துவதாக அண்மையில் சுமந்திரன் யாழிலிருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியொன்றில் வெளியிட்ட கருத்துக்கு கடும் கண்டனம் வெளியிட்டும் குருநகர் கடற்கரையோரப் பகுதியில் பல நூற்றுக்கணக்கான குருநகர், வல்வெட்டித்துறை, மண்டைதீவு மீனவர்கள், மீனவர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராகப் பல கோஷங்களை எழுப்பியும், கைகளில் சுலோகங்களை ஏந்தியும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தும், அவரது உருவப் பொம்மையை எரித்தும் மீனவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர். இதன்போது இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மீனவர் அமைப்பின் பிரதிநிதிகள், இழுவைமடிப் படகு உரிமையாளர்கள், மீனவர்கள் சுமந்திரனுக்கு எதிராகத் தமது ஆக்ரோஷமான கருத்துக்களை வெளியிட்டனர்.
இதேவேளை, குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக குருநகர் வர்த்தகர்கள் இன்று கடையடைப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.அத்துடன் சுமந்திரனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து குருநகரின் பல்வேறிடங்களிலும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.